

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உரிகம், உள்ளுகுறுக்கி,பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான புளியமரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 20 டன் புளி உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் குறிப்பாக உரிகம் புளி நல்ல மண் வளத்தில் வனப்பகுதி களையொட்டி விளைவதால், அதிக சதைப் பற்றுடன் நீளமாகவும் சுவையாகவும் உள்ளதால், இப்பகுதிகளில் ஆண்டுதோறும் விளையும் புளியை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடக, ஆந்திர மாநில வியாபாரிகளும் வந்து நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு அதிக மழைப் பொழிவு காரணமாக புளிய மரங்களில் பூக்களில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், புளி சிறுத்து, தரம் இல்லாமல் இருந்தது.
இதனால், வெளியூர் வியாபாரிகள் இப்பகுதிகளில் வந்து புளி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பருவ மழை ஓரளவுக்கு பெய்ததால் தற்போது புளிய மரங்களில் புளி நன்கு காய்த்துள்ள இந்த புளிகள் ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும் என்பதால், வெளியூர் வியாபாரிகள் வந்து மரங்களை மொத்தமாக குத்தகை எடுக்கத் தொடங்கி உள்ளனர். தரமான புளி விளைச்சல் கிடைக்கும் என்பதால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு புளிக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து உரிகம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆண்டுக்கு ஒருமுறை விளையும் புளியை மரங்களிலிருந்து உதிர்த்து எடுத்து, அதிலிருக்கும் கொட்டை, ஓடு, நார் போன்றவற்றை நீக்கி, சுத்தம் செய்து பதப்படுத்தி வைக்கிறோம். நல்ல விலை கிடைக்கும் போது, விற்பனை செய்வோம். சாலை விரிவாக்கத்தால் பெரும்பாலான புளியமரங்கள் வெட்டப்பட்டதால், தங்கள் பகுதியில் விவசாயத்திற்கு போக வீணாக உள்ள மேட்டு நிலங்களில் புளிய மரக்கன்று வைத்துள்ளோம்.
சிலர் புளிய மரங்களை நடவு செய்து புளி விவசாயம் செய்கின்றனர். புளியமரங்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. ஆனால் ஓரளவுக்கு பருவமழை பெய்தால் மட்டும் போதும். நல்ல விளைச்சல் கிடைக்கும். கடந்தாண்டு அதிக மழைப் பொழிவு காரணமாக புளிய மரத்தில் உள்ள பூக்களில் நோய் பாதித்து விளைச்சல் பாதித்தது. நடப்பாண்டு புளியமரங்களில் கிளைகள் முழுவதும் கொத்து கொத்தாக காய்த்துள்ளது.
இதனால் வெளியூர் வியாபாரிகள் மரங்களை பார்த்து போட்டி போட்டுக்கொண்டு மொத்தமாக குத்தகை எடுத்துள்ளனர். வியாபாரிகள் வெளி மாநில புளிகளை விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே தண்ணீரின்றி வீணாக உள்ள மேட்டு நிலங்களில் புளிய மரக் கன்றுகள் நடவு செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேளாண்மை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.