

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் களிமண் தட்டுப்பாடு, வண்டி வாடகை, பொருட்கள் விலை உயர்வு காரணமாக மண் தொட்டி தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப் பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாங்கன்று உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் பல ஆயிரம் விவசாயிகள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மா ஒட்டுச் செடி உற்பத்தியை நம்பி, மண்பாண்ட தொழிலாளர்கள் நாற்றுகள் வைக்க பயன்படுத்தும் மண் தொட்டிகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்டத்தில் போச்சம்பள்ளி, வேலம்பட்டி, என்.தட்டக்கல், வேப்பனப்பள்ளி அருகே சீலேப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு சீசனுக்கு தகுந்தவாறு மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆண்டு முழுவதும் மா நாற்றுகள் வைக்க பயன்படுத்தும் மண் தொட்டிகள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், களிமண் தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தொழிலா ளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: மாங்கொட்டைகள் பதியம் போடப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்கு செடி வளர்ந்தவுடன் வேருடன் எடுக்கப்படும் நாற்றுகளை மண் தொட்டியில் வைத்து பராமரிப்பது வழக்கம். இதற்காக மா நாற்று வைக்க மண் தொட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதால், மண் தொட்டிகளின் தேவையும் இருக்கும். இந்நிலையில், நிகழாண்டில் களிமண் தட்டுப்பாடு மற்றும் சில ஏரிகளில் கிடைக்கும் மண்ணில் கற்கள், முட்கள் நிறைந்துள்ளதால், மிகுந்த கவனம், சிரமத்துடன் தொட்டிகள் தயாரிக்கும் நிலை காணப்படுகிறது.
இதே போல் களிமண் ஏற்றி வரும் டிராக்டர், டிப்பர் லாரிகளின் வாகன வாடகையும், எரிக்க பயன்படுத்தப்படும் தென்னை மட்டைகளின் விலையும் உயர்ந்துள்ளதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இருப்பினும் மண் தொட்டி விலை உயரவில்லை. தற்போதும், ஒரு தொட்டி ரூ. 6-க்கு விற்பனை செய்கிறோம். ஜனவரி மாதம் இறுதியில் மாநாற்று எடுக்கும் பணிகளை விவசாயிகள் தொடங்க உள்ளதால், தற்போது மண் தொட்டிகளை கொள்முதல் செய்து வருகின்றனர், என்றனர்.