போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பு: விலையும் கைகொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் விற்பனைக் காக வைக்கப்பட்டுள்ள பனங்கிழங்குகள்.
போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் விற்பனைக் காக வைக்கப்பட்டுள்ள பனங்கிழங்குகள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி, மத்தூர் பகுதியில் நிகழாண்டில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்து, விலையும் கைகொடுத்துள்ளதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஒவ்வொரு பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, தண்ணீரை கொண்டு நெல், ராகி, மலர்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். போச்சம்பள்ளி, மத்தூர், சாணிப்பட்டி, ஆனந்தூர், திப்பனூர், வலச கவுண்டனூர், கொண்டமாண்டப்பட்டி, சாமல்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆயிரக் கணக்கான பனை மரங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பனையை மூலதனமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்கள் அழிந்து வரும் நிலையிலும், பனங்கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் பனங்கிழங்கு உள்ளூரிலும், பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கே வந்து நேரடியாக வாங்கிச் செல்வதால், திருப்திகரமான வருவாய் கிடைப்பதாக இப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

பனம் பழம் விதைகள்..: இது குறித்து பனைத் தொழிலாளர்கள் கூறியதாவது: பனைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. பனை மரத்தில் இருந்து கிடைக்கிற பனம் பழங்களில் விதைகள் தனியாக பிரிக்கப்படுகிறது. இந்த விதைகளை பிரித்து, 10 அடி நீளம் 10 அடி அகலத்துக்கு பாத்தி எடுத்து கால் அடி ஆழத்துக்கு மண்ணை கொத்தி அதில் பரலாக தொழு உரத்தை தூவி, அதன் மேல் விதைகள் நெருக்கமாக வைக்கப்படுகின்றன. இரு அடுக்கில் விதைகள் அடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கிழங்கு விளைச்சல் வரும் வரை, பராமரிப்பு, பூச்சி மருந்தோ தெளிக்க தேவையில்லை.

நல்ல வரவேற்பு: கோடைக் காலங்களில் விதைக்கப் படும் விதைகள், அக்டோபர், நவம்பர், டிசம்பர், மாதங்களில் விளைச்சலுக்கு வரும். அதிக மருத்துவ குணம் கொண்ட பனங்கிழங்கின் பயன்கள் எல்லோரும் அறிந்துள்ள நிலையில், நுகர்வோர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இங்கு பனங்கிழங்கு சாகுபடிக் கேற்ற மண் வளம் இயற்கையாகவே கொண்டுள்ளதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பனங் கிழங்குகள் தரமாகவும், சுவையாகவும் இருக்கும்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் பனை சீசன் காலங்களில் மட்டுமே நாங்கள் உள்ளூரில் இருப்போம். சீசன் முடிந்ததும் பெங்களூரு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலைக்குச் செல்கிறோம். மழை பொய்த்துப் போனால், பனங் கிழங்கு விளைச்சல் குறையும். நிகழாண்டில் பரவலாக பெய்த மழையால் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்து, விலையும் விவசாயிகளுக்கு கைகொடுத்துள்ளது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in