

ஓசூர்: சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக, ஓசூரிலிருந்து மலர்களை சென்னைக்கு அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை வெகு விரைவில் சீராகும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதாலும், நல்ல மண் வளம் இருப்பதாலும், இப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மலர்களை விவசாயிகள் ஓசூர் மலர்சந்தைக்கும், சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்த ஆண்டு திருமணம் மற்றும் விழாக்கால சீசனுக்கு மலர்களை அனுப்ப ஓசூர் மலர் விவசாயிகள் காத்திருந்தனர். மாறி மாறி வரும் சீதோஷ்ணம் காரணமாக, வழக்கமாக ஏக்கருக்கு 1 டன் வரை விளைச்சல் கிடைத்த பகுதியில், தற்போது 3 டன் வரை பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், கார்த்திகை மாதம் சீசனில் மலர்களுக்கு ஓரளவுக்கு விலை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். சென்னை மலர்சந்தைக்கு பூக்களை அனுப்ப விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், மலர் அறுவடை பணி தொடங்கும் போது, சென்னையை மிக்ஜாம் புயல் பாதித்தது. ஓசூர் பகுதியிலிருந்து சென்னை சந்தைக்கு அனுப்ப முடியாததால், மற்ற சந்தைகளுக்கு சாமந்தி உள்ளிட்ட மலர்கள் அனுப்பப்பட்டது. சந்தைக்கு வரத்து அதிகரித்ததால், விலையும் குறைந்தது.
இதுகுறித்து மலர் விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு சீசனில் அறுவடை செய்யும் மலர்களை ஓசூர்,சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு பண்டிகை சீசனில் பூக்கள் வரத்து அதிகரிப்பால், போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயில் சீசனுக்கு சென்னைக்கு தினமும் 500 டன் மலர்கள் அனுப்பி வந்தோம். அதேபோல் இப்போதும் அனுப்பலாம் என எதிர்பார்த்தோம். ஆனால் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சென்னை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே விற்பனைக்கு அனுப்பிய மலர்களை வாங்க ஆட்களே இல்லாமல், கீழே கொட்டப்பட்டது. வெளியூர் வியாபாரிகளும் மலர்களை வாங்க வரவில்லை. இந்நிலையில், மற்ற சந்தைகளில் பூக்கள் வரத்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. உள்ளூரில் ரூ.400 வரை விற்பனை செய்த முதல் தரம் சாமந்தி ஒரு கிலோ தற்போது ரூ.80-100 வரையும், 2-ம் தரம் ரூ.50-க்கும், 3-ம் தரம் ரூ.25 முதல் 40 வரையும் விற்பனையாகிறது. பெங்களூருவிலும் வரத்து அதிகரித்துள்ளதால், அங்கேயும் அனுப்ப முடியாமல் கவலையடைந்துள்ளனர். இதனால் சென்னையில் மழை வெள்ளம் குறைந்து மலர்கள் தேவை விரைவில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தோட்டங்களில் மலர்களை அறுவடைசெய்யாமல் பல விவசாயிகள் காத்திருக்கின்றனர் எனக் கூறினர். உள்ளூரில் ரூ.400 வரை விற்பனையான முதல் தரம் சாமந்தி ஒரு கிலோ தற்போது ரூ.80-100 வரையும், 2-ம் தரம் ரூ.50-க்கும் விற்பனையாகிறது.