

கிருஷ்ணகிரி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள் கொத்து வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, காட்டிநாயனப் பள்ளி, பூசாரிப்பட்டி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான மஞ்சள் அறுவடைக்குப் பின்னர் வேகவைத்து உலர்த்தப்பட்டு 100 கிலோ மூட்டையாகக் கட்டி, ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விற்பனைக்கு விவசாயி கள் கொண்டு செல்கின்றனர்.
இதேபோல, பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துகள் விற்பனை செய்யவும் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்கின்றனர். தற்போது, மஞ்சள் செடிகளில் புழு தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ரேஷ்ன் கடைகளில் பொங்கல் பண்டிகையின்போது அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, சர்க்கரையுடன் மஞ்சள் கொத்தும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக காட்டி நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிட ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். 100 கிலோ மஞ்சள் மூட்டை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் விலை போகிறது. சில நேரங்களில் விலை சரிந்து இழப்பும் ஏற்படும்.
தற்போது பெய்து வரும் பரவலான மழையால், மஞ்சள் செடிகளில் புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், மஞ்சள் கிழங்கு வளர்ச்சி குறைந்து, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு செய்து அரசு மானியத்தில் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள் கொத்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக வேளாண் அலுவலர்களிடம் கேட்டபோது, “பொங்கல் தொகுப்பில் மஞ்சள் வழங்குவது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்” என்றனர்.