Published : 12 Nov 2023 06:15 AM
Last Updated : 12 Nov 2023 06:15 AM
ஈரோடு / சேலம்: தீபாவளி காரணமாக, சத்திய மங்கலம் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது. அதிகபட்சமாக மல்லிகை கிலோ ரூ.1,140-க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை சத்தியமங்கலத்தில் உள்ள மலர் வியாபாரிகள் சங்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
சந்தையில் அதிகபட்சமாக 3 முதல் 5 டன் வரை மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். எனினும், தற்போது மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகை வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் தீபாவளி மற்றும் விரத நாட்கள் வருவதாலும் மல்லிகை பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கிலோ மல்லிகை ரூ.1,140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சத்தி மலர் சந்தையில் பூக்கள் விலை விவரம் (கிலோ): மல்லிகை ரூ.800 முதல் ரூ.1,140, முல்லை ரூ.790 முதல் ரூ.870, காக்கட்டான் ரூ.700 முதல் ரூ.900, சாதி முல்லை ரூ.900, கனகாம்பரம் ரூ.1,000 வரை விற்பனை ஆனது.
சேலம்: சேலம் வஉசி மார்க்கெட்டில் குண்டு மல்லி, சன்னமல்லி கிலோ ரூ.800, சாதிமல்லி ரூ.400, காக்கட்டான் ரூ.500, கலர் காக்கட்டான் ரூ.400, அரளி ரூ. 80, செவ்வரளி ரூ.120, நந்தியாவட்டம் ரூ.100, சம்பங்கி ரூ.60 என அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனினும் மக்கள் பூக்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால் வஉசி மார்க்கெட் மக்களால் நிரம்பியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT