இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் டாடா குழுமம் - அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் டாடா குழுமம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை டாடா குழுமம் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது என மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் டாடா குழுமம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கான ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐபோன்களை தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஆலை மூலம் உற்பத்தி செய்துவந்தது. டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்யும் நோக்கிலும் மின்னணு துறையில் கால்பதிக்கும் நோக்கிலும் இந்த ஆலையை கைப்பற்ற சமீபகாலமாக விருப்பம் தெரிவித்து வந்தது. இதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களை நடந்து வந்ததாக சொல்லப்பட்டது.

அதன்படி, 125 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்த ஆலை டாடா வசம்வந்துள்ளது. இதற்கான விஸ்ட்ரான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை டாடா குழுமம் இந்தியாவில் மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் டாடா குழுமம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு பணியில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெற்றுள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், உலகளாவிய இந்திய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முழு ஆதரவளிக்கிறது. மேலும், இது பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம் (PLI), இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய மையமாக மாற்றியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

- Rajeev Chandrasekhar

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in