

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படும் நவராத்திரி கொலு பொம்மைகள் 80 சதவீதம் பெங்களூருவில் விற்பனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி திருநீலகண்டர் தெருவில் வசிக்கும் மண்பாண்ட கலைஞர்கள் நவராத்திரி கொலு பொம்மைகளையும் அதிக அளவில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளை கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதி வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
மேலும், இங்கு கொள் முதல் விலைக்கே சில்லறை விலையிலும் பொம்மைகளை விற்பனை செய்வதால், கடந்த சில ஆண்டாக பெங்களூரு பகுதி பொதுமக்களும் நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர். நிகழாண்டில், மகாபாரத பஞ்சபாண்டவர்கள், ராமாயணம் வரும் கதா பாத்திரங்களின் வடிவங்கள், கடோற்கஜன், கிருஷ்ணர், ராதை, ராவணன், பால முருகன், லட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு, நரசிம்மர் உள்ளிட்ட பொம்மைகளும், கால் நடைகள், விளையாட்டு பொம்மைகள், விவசாயி உட்பட பல்வேறு வித மான பொம்மைகளைத் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக கொலு பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகளவில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொலு பொம்மைகளைத் தயாரித்து விற்பனை செய்த நிலையில், போதிய வருவாயின்றி தற்போது, 20-க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டுமே பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 80 சதவீதமும், மீதி உள்ளூர் விற்பனைக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன. நவராத்திரி விழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது விற்பனை மந்தமாக உள்ளது. எதிர்வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்கும். 40 பொம்மைகள் உள்ள ஒரு செட் ரூ.500 முதல் ரூ.9 ஆயிரம் வரையும், தனி பொம்மைகள் ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.