

திண்டுக்கல்: “ஆவின் பால் சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்சினைகளை சீர்செய்ததன் மூலம் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது” என திண்டுக்கல்லில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று (அக்.7) பால் வளத்துறை ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பால் கொள்முதல் செய்யப்படும் இடம், பால் குளிரூட்டும் மையம், பசுந்தீன சாகுபடி நடைபெறும் பகுதியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தற்போது ஆவின் நிர்வாகம் ஒளிவு மறைவு தன்மையின்றி வெளிப்படை தன்மையாக செயல்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை சரிசெய்து வருகிறோம். குறிப்பாக, சந்தைப்படுத்துதலில் (மார்க்கெட்டிங்) உள்ள பிரச்சினைகளை சீர்செய்ததன் மூலம் தற்போது ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள விலையை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்றால் பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் புதிதாக கறவை மாடுகள் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கி கடனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பால் மற்றும் பால் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம், இந்திய அளவில் மேய்ச்சல் நிலத்தின் அளவு, விவசாயிகள் எண்ணிக்கை குறைவால் பால் உற்பத்தி சவாலாக உள்ளது.
அதனால், தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு, கடன் மற்றும் மானியம் வழங்குதல், தீவன உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். பால் பாக்கெட் பிளாஸ்டிக் பையை பற்றி கவலைப்பட தேவையில்லை. அது மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடியது. நாட்டு மாடுகள் அழிந்து கொண்டு இருக்கின்றன.இதை தடுக்க, நாட்டு இன மாடுகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும்பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு தரமான கறவை மாடுகள் வழங்கப்படும்” என்று கூறினார்.