

பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் பி. ராமலிங்க ராஜுவுக்கு 14 ஆண்டு தடை விதித்துள்ளது. சுமார் ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. ராஜூ மற்றும் நான்கு பேருக்கு இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மோசடி மூலம் சம்பாதித்த ரூ. 1,849 கோடி தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 12 சதவீத வட்டி அடிப்படையில் இத்தொகையை 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் செபி உத்தரவிட்டுள்ளது. இத்தொகையை ஜனவரி 7, 2009-ம் ஆண்டு முதல் வட்டியுடன் செலுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்களில் நடைபெற்ற மிகப் பெரிய மோசடியாக சத்யம் நிறுவனத்தில் நிகழ்ந்த மோசடிதான் கருதப்படுகிறது.
ராஜுவின் சகோதரர் பி. ராம ராஜு (சத்யம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்), வத்லமணி ஸ்ரீனிவாஸ் (முன்னாள் தலைமை நிதி அதிகாரி), ஜி. ராமகிருஷ்ணா (முன்னாள் துணைத் தலைவர்ஃ), வி.எஸ். பிரபாகர குப்தா (நிறுவனத்தின் முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி) ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை செபி வெளியிட்ட 65 பக்க அறிக்கையில் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் மிகவும் திட்டமிட்டே இந்த மோசடியை செய்துள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் பற்றிய அக்கறையின்றி தங்களது சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இத்தகைய மோசடியை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக செபி அறிக்கை குறிப்பிடுகிறது.
இவர்கள் செய்த இந்த மோசடியால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்ததோடு பங்குச் சந்தை மீதான நம்பகத் தன்மையும் சிதைந்துள்ளது என்று செபி-யின் முழு நேர இயக்குநர் ராஜீவ் குமார் அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை தேவை என்று தாம் உறுதிபட கருதுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனர் ராமலிங்க ராஜூ ஒரு இ-மெயிலை செபி-க்கு அனுப்பியுள்ளார். அதில் தனது நிறுவனத்தின் சொத்து மதிப்பு மற்றும் வங்கி இருப்புகள் மிகவும் அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அப்போது விசாரணை நடத்தப்பட்டது.
முதலீட்டாளர்கள் நலன் மற்றும் ஊழியர்கள் வேலையிழப்பைத் தடுக்கும் நோக்கில் இந்நிறுவனத்தை அரசு ஏலம் விட்டது. இந்நிறுவனத்தை மஹிந்திரா குழும நிறுவனம் எடுத்து மஹிந்திரா சத்யம் என்ற மறுபெயரில் நடத்தி வருகிறது.
செபி நடத்திய விசாரணையில் ராஜு சகோதரர்கள் மிகவும் முறைகேடான வகையில் ரூ. 543.93 கோடி ஆதாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 1,258 கோடி சம்பாதித்துள்ளனர்.
இவர்களிருவர் தவிர ஸ்ரீனிவாஸ், ராமகிருஷ்ணா, குப்தா ஆகியோர் முறையே ரூ. 29.5 கோடி, ரூ. 11.5 கோடி மற்றும் ரூ. 5.12 கோடி ஆதாயம் அடைந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை அறிக்கையை இவர்கள் வைத்துக் கொண்டு தவறான, அதிகரிக்கப்பட்ட தொகை கொண்ட நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று செபி குற்றம் சாட்டியுள்ளது.
ராமலிங்க ராஜு மற்றும் ராமராஜு சகோதரர்கள் இருவரும் உள் பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக நிறுவன நிதி நிலை அறிக்கையை மாற்றியமைத்து வெளியிட மற்ற மூன்று பேரும் ஒத்துழைத்துள்ளனர் என்பது செபி விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் இவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்றவர்கள் மூலமாகவோ பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 14 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி சத்யம் நிறுவனம் மைடாஸ் இன்பிரா லிமிடெட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்தது. இந்நிறுவனம் ராஜுவின் மகன் தேஜா ராஜு மற்றும் ராமராஜுவால் உருவாக்கப்பட்டதாகும். இதற்கு முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டத்தை ராமலிங்க ராஜு கைவிட்டார். 2009-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இயக்குநர் குழுவிலிருந்து அவர் வெளியேறினார். இவர் புரிந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து ராஜு கைது செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு நவம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.