

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்மை மற்றும் வெயில் அதிகரிப்பால் காப்புக் காடுகளில் சீத்தாப்பழம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5,143 சதுர கிலோ மீட்டரில் 2,024 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள சிறிய காடுகள், வனத்தையொட்டியுள்ள மலைக் குன்றுகளில் சீத்தா மரங்கள் அதிகளவில் உள்ளன. இவை தவிர விவசாயிகளும் சீத்தாப்பழச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வேப்பனப்பள்ளி, மேலுமலை, சின்னாறு, கிருஷ்ணகிரி, பர்கூர், ஜெகதேவி, தொகரப்பள்ளி, அஞ்சூர், குருவி நாயனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீத்தாப்பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. நிகழாண்டில் போதிய மழை இல்லாததால், காப்புக் காடுகளில் சீத்தாப்பழம் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், சீத்தா மரங்கள் காய்ந்தும், காய்கள் கருகின.
இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் சிலர் கூறியதாவது: மேலுமலை, தீர்த்தம், சின்ன தீர்த்தம், மகாராஜகடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் அதிகளவில் சீத்தா மரங்கள் உள்ளன. சீத்தாப்பழங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் கிடைக்கும். இந்தாண்டு சரியான நேரத்தில் மழை பெய்யவில்லை. மேலும், வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்தது,
இதனால், சீத்தாப்பழம் மகசூல் பாதிக்கப்பட்டு, இத்தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை முதல் சின்னாறு வரை சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் சீத்தாப்பழம் விற்பனையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
சீசனில் கிடைக்கும் வருவாய் கொண்டு ஆண்டு முழுவதும் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் வனப்பகுதியில் விளையும் சீத்தாப் பழங்களைப் பறித்தும், மண்டிகளில் வாங்கியும் விற்பனை செய்வார்கள். நிகழாண்டில் விளைச்சல் பாதிக் கப்பட்டுள்ளதால், குறைந்த அளவே சிறு வியாபாரிகள் சீத்தாப்பழம் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், காடுகளில் காய்கள் கிடைக்காததால், நீர்ப்பாசனம் முறையில் விளைவிக்கப்படும் சீத்தாப் பழங்களை 15 கிலோ பழத்தை ரூ.600 வரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதால், எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.