

கிருஷ்ணகிரி: வடமாநிலங்களில் இந்தோ னேசியா துடைப்பத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்லும் தமிழக துடைப்பம் 70 சதவீதம் சரிந்துள்ளது.
எனவே, துடைப்பம் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர், நாகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை துடைப்பம் தயாரிப்பு பணியில் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறுப் படுகை மற்றும் கிணற்றுப் பாசனம் மூலம் 40 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. தென்னை மரங்களிலிருந்து காய்ந்து மட்டைகள் விழும்போது, அதில் உள்ள ஓலையில் உள்ள குச்சிகளைத் தனியே பிரித்து எடுத்து தென்னை துடைப்பம் தயாரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் துடைப்பம் டன் கணக்கில் லாரிகள் மூலம் ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக விற்பனைக்குச் செல்கின்றன. தற்போது, இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துடைப்பங்களுக்கு வட மாநிலங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதனால், தமிழக துடைப்பத்தின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையைப் போக்க துடைப்பம் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட துடைப்பம் வியாபாரிகள் சங்க செயலாளர் கே.கோவிந்த ராஜூ கூறியதாவது: துடைப்பம் குச்சிகள் 50 கிலோ கொண்ட கட்டுகளாகக் கட்டப்பட்டு லாரிகளில் அதிகபட்சம் 25 டன் வரை ஏற்றப்பட்டு, வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்திலிருந்து தினசரி சராசரியாக 50 லாரிகளில் 1,250 டன் வரை விற்பனைக்குச் செல்லும்.
தற்போது விற்பனைக்குச் செல்வது 375 டன்னாக குறைந்துள்ளது. வட மாநில சந்தையில் இந்தோனேசியா துடைப்பத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில், ‘பார்ம் ட்ரீ’ குச்சியிலிருந்து துடைப்பம் தயாரிக்கப்படுகிறது. இந்த துடைப்பங்கள் தென்னை துடைப்பத்தை விட நீண்ட நாட்கள் பலன் அளிப்பதால், இதை பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தோனேசியாவிலிருந்து கடல் வழியாகத் தூத்துக்குடி துறைமுகத்துக்குத் துடைப்பம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வட மாநிலங்களுக்குக் கன்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், உள்நாட்டு துடைப்பம் விற்பனை சரிந்துள்ளது. எனவே, இந்தோனேசியா துடைப்பம் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை.
உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், இதை நம்பியுள்ள தொழிலாளர்களைக் காக்கவும் துடைப்பம் இறக்கு மதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.