சந்தையில் நிலையான விலை - கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் கனகாம்பரம் சாகுபடி

சந்தையில் நிலையான விலை - கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் கனகாம்பரம் சாகுபடி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: ஆண்டு முழுவதும் சந்தையில் நிலையான விலை கிடைப்பதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு கனகாம்பரம் சாகுபடி கை கொடுத்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை காய்கறி மற்றும் மலர் சாtகுபடிக்குக் கை கொடுத்து வருகிறது. இதனால், விவசாயிகள் காய்கறி மற்றும் பல்வேறு மலர் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குப் பேருதவி யாக மலர்கள் சாகுபடி இருந்து வருகிறது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி, கந்திகுப்பம், பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனகாம்பரம் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கனகாம்பரம் மழைக் காலங்களில் விளைச்சல் குறைந்து, சந்தையில் விலை உயரும். கோடைக் காலங்களில் விளைச்சல் அதிகரித்து, போதிய விலை கிடைக்கும். இருப்பினும் ஆண்டு முழுவதும் நிலையான விலை கிடைப்பதால், கனகாம்பரம் சாகுபடி விவசாயிகளுக்குப் பலன் அளித்து வருகிறது.

இது தொடர்பாக கிருஷ்ண கிரியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் கூறியதாவது: கனகாம்பரம் பூவைப் பொறுத்தவரைச் சிவப்பு, ஆரஞ்சு, டெல்லி கனகாம்பரம், பச்சை கனகாம்பரம் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. இதில், பச்சை கனகாம்பரம் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. அதிகளவில் ஆரஞ்சு கனகாம்பரம் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மல்லிகை, முல்லை மலர்களுக்கு இணையாக விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். காலப்போக்கில் கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. கனகாம்பரம் சாகுபடிக்கு ஆவணி முதல் தை மாதம் வரை ஏற்றதாகும்.

நல்ல வடிகால் வசதி உள்ள மண் மற்றும் செம்மண் இப்பூவுக்கு ஏற்றது. இச்சாகுபடிக்கு நிலத்தை நன்கு உழுது தேவையான அளவு பாத்தி அமைத்து, 1 செ.மீ ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். விதை நட்ட 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் 8 நாட்களுக்கு ஒரு முறை உப்பு வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கனகாம்பரம் விதைத்த 30-வது நாள் முதல் பூக்கள் பூக்கத் தொடங்கும்.

ஒரு நாள் விட்டு ஒருநாள் பூக்கள் பறிக்க வேண்டும். கனகாம்பரத்துக்குச் சந்தையில் ஆண்டு முழுவதும் நிலையான விலை உண்டு. இதனால், விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகக் கனகாம்பரம் கைகொடுத்து வருகிறது. தற்போது, கனகாம்பரம் கிலோ ரூ.260-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in