

ஓசூர்: அழுகல் நோயால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிக்கப்பட்டு, ஓசூர் சந்தையில் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மழையால் வெளிமாநில கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் மற்றும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
பத்தலப்பள்ளி சந்தை: இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் சின்ன வெங்காயம் ஓசூர் அருகே பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்கின்றன. கடந்த ஒரு மாதமாக தக்காளி, பீன்ஸ், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்த நிலையில், கடந்த வாரம் வரை சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.
சந்தைக்கு வரத்துக் குறைவு: இந்நிலையில், சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து, விலை படிப்படியாக உயர்ந்தது. ஓசூர் உழவர் சந்தையில் நேற்று ரூ.130-க்கு விற்பனையானது. சில்லறைக் கடைகளில் ரூ.200-க்கு விற்பனையானது. வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை குறைவு என்பதால், உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விறுவிறுப்பாக விற்பனையானது. தக்காளியைத் தொடர்ந்து, சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
உழவர் சந்தைக்குத் தினசரி ஒரு டன்: இது தொடர்பாக உழவர் சந்தை அலுவலர் கூறியதாவது: உழவர் சந்தைக்குத் தினசரி ஒரு டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். நேற்று 720 கிலோ மட்டுமே வரத்தானது. வெளி மார்க்கெட்டை விட இங்கு விலை குறைவு என்பதால், சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்த சிறிது நேரத்தில் தீர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பத்தலப் பள்ளி காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: ஓசூரில் சின்ன வெங்காயம் மகசூல் குறைவு என்பதால், தென் மாவட்டங்களிலிருந்து தினமும் 60 டன் வரை கொள்முதல் செய்தோம். மேலும், தமிழகத்தில் மகசூல் பாதிக்கும்போது, மைசூருவிலிருந்து கொள்முதல் செய்வோம்.
மைசூருவில் அறுவடை: தற்போது, தமிழகத்தில் சின்ன வெங்காயத்தில் அழுகல் நோய்ப் பாதிப்பு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மைசூரில் தற்போது சின்ன வெங்காயம் அறுவடை நடைபெறும் நிலையில், அங்கு மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில தினங்களாக வெளியிடங்களிலி ருந்து சின்ன வெங்காயம் வரத்து முற்றிலும் நின்றது. இதனால், விலை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.