இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க அமெரிக்க மைக்ரான் டெக்னாலஜிஸ் ரூ.8,200 கோடி முதலீடு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் கம்ப்யூட்டர், மொபைல்போன் பயன்பாடுகளுக்கான மெமரி சேகரிப்பு பாகங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம், அதற்கு தேவையான செமிகண்டக்டரை அதன் சீன ஆலையிலிருந்து பெற்று வருகிறது. சீனா தவிர்த்து, வேறு நாடுகளில் ஆலை அமைக்க திட்டமிட்ட அந்நிறுவனம், இந்தியாவில் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக நாடுகள் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் நிலையில், செமிக்கண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா அதன் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் முதல் அதிகபட்சம் 2 பில்லியன் டாலர் வரையில் இந்நிறுவனம் இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின்அமெரிக்க பயணத்தில் இந்த முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானால், செமிகண்டக்டர் தயாரிப்பு தொடர்பான இந்தியாவின் முயற்சியில் முக்கிய முன்னகர்வாக இருக்கும்.இந்த முதலீடு மூலம் ஆயிரக்கணக்கில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in