வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பில் புதுவை முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பில் புதுவை முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read

வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பில் பங்கேற்ற புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் இந்நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது.

புதுவை வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நீதிமன்ற வளாகத்தில் சங்க அறையில் நடந்தது. விழாவில் மூத்த வக்கீலும், முன்னாள் எம்எல்ஏவுமான பரசுராமன் பங்கேற்றிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மரணமடைந்த பரசுராமன், கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை உருளையன்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது கிழக்கு மாநில அதிமுக அவைத் தலைவராக இருந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மூத்த வழக்கறிஞரின் திடீர் மறைவால் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in