

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரிக்கு இடைக்கால நிவாரணம் தர மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவுள்ளதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தவளக்குப்பம், பாகூர் பகுதிகளை முதல்வர் ரங்கசாமி இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரங்கசாமி ஆறுதல் கூறினார். தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கும்படியும், உணவு வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, "புதுவையில் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. மழை நீரைக் கடல் உள்வாங்கவில்லை. பவுர்ணமி என்பதால் அலைகளின் சீற்றம் காரணமாக வெள்ள நீர் உள்வாங்கப்படவில்லை.
இதனால்தான் தேங்கிய மழைநீர் வெளியேறத் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை அரசு முகாம்களில் தங்கவைத்து உணவு வழங்கி வருகிறோம். தற்போது புதுவையில் மழை சேதம் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த அறிக்கையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்து நிவாரணம் கேட்கவுள்ளோம்.
இடைக்காலமாக மழை நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளேன். மத்தியக் குழு புதுவைக்கும் வந்து பார்வையிட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்" என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.