

பிரதம மந்திரி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று (செப்.1) தொடங்கியது.
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் அட்டை உடைய குடும்பத்தாருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கு, அதற்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல வழி மையங்கள், அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 14 இடங்களில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இந்தச் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
சிவப்பு நிற ரேஷன் அட்டை உள்ள பயனாளிகள், தங்களுடைய ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொண்டுவந்து மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் கூறினார்.