

புதுச்சேரியில் கடந்த 11 நாட்களுக்குப் பிறகு கரோனா தொற்றின் ஒரு நாள் பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. புதிதாக 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 31) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,402 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-57, காரைக்கால்-37, ஏனாம்-5, மாஹே-16 பேர் என மொத்தம் 115 பேருக்கு (2.13 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 158 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 557 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 715 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,812 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 67 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 45 (97.96 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 11 ஆயிரத்து 124 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று அருண் தெரிவித்துள்ளார்.