Published : 09 Aug 2021 10:34 PM
Last Updated : 09 Aug 2021 10:34 PM
தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,555 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நிதி பத்திரங்கள் என்பவை கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்களுக்காக வெளியிடப்படுகின்றன. இதை தனிநபரோ, நிறுவனமோ அல்லது கூட்டமைப்போ வாங்க முடியும். பாரத ஸ்டேட் வங்கி இந்தத்தேர்தல் பத்திரங்களை வழங்குகின்றன.
தேர்தல் நிதிப் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அதன் விவரத்தைத் தாக்கல் செய்கின்றன.
கடந்த 2017-18 காலகட்டத்தில் தான் இந்த தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அறிமுகத்துக்கு முன்னதாக காங்கிரஸ் இதனை எதிர்த்தது. அரசு, லஞ்சத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க ஒரு குறுக்குவழியைக் கண்டுபிடித்துள்ளது என்று கூறியது. ஆனால், அரசாங்கம் இது தொடர்பாக வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும் என்றது. இந்த சர்ச்சை வழக்காக மாறி உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
உச்ச நீதிமன்றமும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வசூலிப்பதை தடை செய்ய முடியாது என்று கூறியது. பின்னர், அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் நிதி பத்திரங்கள் வசூலிக்கத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெறும் வருவாய் குறித்து தேர்தல் ஆணையத்தில் கட்சிகள் தாக்கல் செய்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 2019-20-ம் ஆண்டில் பாஜக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.2,555 கோடி வருவாய் ஈட்டியதாகத் தெரிகிறது. இது முந்தைய நிதியாண்டைவிட 75% அதிகமென்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிதியாண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக அனைத்துக் கட்சிகளும் பெற்றுள்ள வருவாயில் 75% பாஜகவே பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் நிதிப் பத்திரங்கள் வாயிலாக ரூ.1450 கோடி பாஜக ஈட்டியது.
2019-20 காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.3318 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ரூ.100.46 கோடியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.29.25 கோடியும், சிவசேனா ரூ.41 கோடியும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தலம் ரூ.2.5 கோடியும், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ரூ.18 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், பாஜகவின் வருவாய், ஐந்து முக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டு வருவாயைவிட அதிகம் என்றொரு புள்ளிவிவரம் கூறுகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT