வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்ப்பு: புதுச்சேரியில் 2 பேர் கைது

வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்ப்பு: புதுச்சேரியில் 2 பேர் கைது
Updated on
1 min read

திருக்கனூர் அருகே வீட்டு வாசலில் 12 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யபிரதாப் என்பவர் கஞ்சா சப்ளை செய்வதாக தவளக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான போலீஸார் சேலியமேட்டில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சூர்யபிரதாப்பைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் சந்தைபுதுக்குப்பத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி (26) என்பவர் அவருக்கு கஞ்சா விற்றது தெரியவரவே, அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தைபுதுக்குப்பம் பால் சோசைட்டி வீதியில் வசிக்கும் நண்பர் நாகராஜ் (23) என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாகவும், அதிலிருந்து பறித்து கஞ்சா விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே இதுபற்றி தவளக்குப்பம் போலீஸார், சம்பந்தப்பட்ட காட்டேரிக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று (ஜூலை 27) மேற்குப் பகுதி எஸ்.பி. ரங்கநாதன், காட்டேரிக்குப்பம் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணன், வேளாண் அதிகாரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் நாகராஜ் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டு முன்பு 12 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்த்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அந்த கஞ்சா செடியை போலீஸார் வெட்டி எடுத்துச் சென்றனர். இவற்றின் எடை 6 கிலோ 140 கிராம் ஆகும். இதையடுத்து ஞானமூர்த்தி, நாகராஜ் இருவரையும் கைது செய்த போலீஸார், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் சந்தைபுதுக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in