

குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன் விவசாயிகள் நெல்லைக் கொட்டி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கட்சி மற்றும் தமிழக ஏரி - ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று (ஜூலை 14) இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்குத் தலைமை வகித்த கட்சி மற்றும் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன் கூறியதாவது:
"விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய உழவு முதல் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பது வரை ரூ.30,000 செலவாகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது குவிண்டால் நெல்லுக்கு சன்ன ரகத்துக்கு ரூ.1,958, மோட்டா ரகத்துக்கு ரூ.1,918 விலை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு ரூ.1 என்ற அடிப்படையில், 40 கிலோ நெல் மூட்டைக்கு ரூ.40 வசூலித்துக் கொள்கின்றனர்.
நெல் கொள்முதல் விலை, கட்டாய வசூல் ஆகியவற்றுடன் நெல் சாகுபடி செலவை ஒப்பிட்டால், விவசாயிகளுக்கு ரூ.5,000 மட்டுமே மிஞ்சுகிறது. சில நேரங்களில் நஷ்டம் ஏற்படுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்தால் தங்கள் நிலை உயரும் என்று எண்ணித்தான் அவரை விவசாயிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின்படி குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 விலையை முதல்வர் அறிவிக்க வேண்டும்".
இவ்வாறு விசுவநாதன் தெரிவித்தார்.