

தேர்தல் பணிக்கு வெளியூர் சென்றவர்களைத் திருப்பி அழைப்பது தாமதிக்கப்படுவதால் மதுரை பட்டாலியன் போலீஸார் கரோனா அச்சத்தில் உள்ளனர்.
காவலர்களின் பற்றாக்குறையால், மதுரை உட்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் (பட்டாலியன்) சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, வெளி மாவட்டங்களுக்கு மாற்றுப்பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்கள் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு முடிந்து, வாக்கு எண்ணும் மையங்களில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அந்தவகையில், மதுரை 6வது பட்டாலியனில் இருந்தும் சுமார் 900க்கும் மேற்பட்டோர் விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட சில ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணிக்கை பணி முடிந்தும், வெளியூர் சென்ற பட்டாலியன் போலீஸார் இன்னும் தலைமையிடத்திற்கு திரும்பவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கரோனா நேரத்தில் குடும்பத்தினரைக் கவனிக்க முடியவில்லை, புதிதாக திருமணமானவர்கள் குடும்பத்தினரைப் பார்க்க முடியாத சூழல், கரோனா தடுப்பூசி போடுவதற்கு வெகுதூரங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு செல்லவேண்டிய நிலையில் வெளியூரில் கரோனா அச்சம் இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை பணி முடிந்தும் பழைய இடத்திற்கு திருப்பி அழைக்க தாமதிப்பதாகவும் புலம்புகின்றனர்.
இதற்கிடையில் மதுரை 6வது பட்டாலியன் எஸ்ஐ லட்சுமி என்பவர் விருதுநகருக்கு மாற்றுப் பணிக்கு சென்றிருந்தபோது, கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து மதுரை 6வது பட்டாலியன் கமாண்டன்ட் இளங்கோவன் கூறுகையில், ‘‘
மதுரை 6வது பட்டாலினில் 985 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனருக்கு 2 டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுள்ளோம். வெளியூரில் இருந்தாலும், வரவழைத்து தடுப்பூசி போடுகிறோம்.
இன்னும் 50 பேருக்கு போடவேண்டியுள்ளது. சிவகங்கை, விருதுநகரில் தேர்தல் இன்றி பிற நாட்களிலும் இரு கம்பெனி போலீஸார் எப்போதும் தொடர் பணியில் இருப்பது வழக்கம். விருதுநகரில் பணியில் இருந்த எஸ்ஐ லட்சுமிக்கு 2 நாளுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவருக்கு விடுப்பு அளித்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
‘ஸ்கேன்’ பார்த்தபோது, அவரது நுரையீரலில் சற்று பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. உயிரை காப்பாற்ற தொடர் முயற்சி எடுத்தும் முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தொற்று உள்ளிட்ட பிரச்னையில் இருந்து பட்டாலியன் போலீஸாரை பாதுகாக்க, பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் பணிக்கு வெளியூர் சென்றவர்கள் பெரும்பாலும் தலைமையிடத்திற்கு திரும்பிவிட்டனர். தஞ்சாவூர் பகுதியிலுள்ளவர்களும் ஓரிரு நாளில் மதுரைக்கு வந்துவிடுவர், ’’ என்றார்.