

கரோனாவைக் கட்டுப்படுத்தப் பொது முடக்கம் தேவைப்பட்டால் அதற்கு ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''கரோனா 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி இன்மையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசியைக் கட்டணமின்றி வழங்க வேண்டும். இது கடுமையான இயற்கைப் பேரிடராகும்.
தடுப்பூசி விலை ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் சதவீதம் அதிகரிக்கவில்லை. தடுப்பூசி நிறுவனங்கள் விலையில் கொள்ளை லாபம் அடிக்க மத்திய அரசே வழிவகுத்துள்ளதாகத் தெரிகிறது. மலிவான விலையில் தடுப்பூசி கிடைக்க வேண்டும், அதுவும் அனைத்து இடங்களிலும் ஒரே விலையில் இருக்க வேண்டும்.
கரோனாவைக் கட்டுப்படுத்தப் பொது முடக்கம் வந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். பொது முடக்கம் தேவைப்பட்டால் அதற்கு ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.