

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்துகளைக் குழந்தைகளுக்குச் செலுத்தும் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறும்போது, “இடைக்கால சோதனையாக, அஸ்ட்ராஜெனகா கரோனா தடுப்பு மருந்தைக் குழந்தைகளுக்குச் செலுத்தும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 தன்னார்வலர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து இம்மாதம் செலுத்தப்பட இருப்பதாகவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்து செயல்படாத காரணத்தால் அதனைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து எங்கள் மருந்தில் குறை இருக்கலாம். ஆனால், கரோனாவுக்கு எதிராக எங்கள் மருந்து சிறப்பாகச் செயல்படுகிறது என்று அஸ்ட்ராஜென்கா மருந்து நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.