

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டினருக்கு இரு வாரங்களுக்கு குவைத் அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து குவைத் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “குவைத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரு வாரங்களுக்கு இந்தத் தடை நீடிக்கும். பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. தாய்நாட்டிற்கு வரும் குடிமக்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. உணவு விடுதிகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மட்டுமே 756 பேர் குவைத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை குவைத்தில் 1,67,410 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, ஸ்வீடன், பிரேசில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரசு பயணத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த உத்தரவில் இருந்து அரசுத் தரப்பில் அலுவலக ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.