புத்தகம்தான் ஒரு மனிதனின் உண்மையான நண்பன்: ‘வாசிப்பை நேசிப்போம்’ நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் மாலதி ஹெலன் கருத்து

எஸ்.எஸ்.எல்.எஃப் கல்வி அறக்கட்டளை மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து ‘வாசிப்பை நேசிப்போம்; வாசிப்பின் வழியே புதிய உலகைக் காண்போம்’ என்ற கருப்பொருளுடன் புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவரிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், புத்தக வாசிப்பு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அருகில் வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா, எஸ்.எஸ்.எல்.எஃப். கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜி.சக்திவேல்,  கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.அருணாதேவி உள்ளிட்டோர் உள்ளனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
எஸ்.எஸ்.எல்.எஃப் கல்வி அறக்கட்டளை மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து ‘வாசிப்பை நேசிப்போம்; வாசிப்பின் வழியே புதிய உலகைக் காண்போம்’ என்ற கருப்பொருளுடன் புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவரிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், புத்தக வாசிப்பு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அருகில் வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா, எஸ்.எஸ்.எல்.எஃப். கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜி.சக்திவேல், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.அருணாதேவி உள்ளிட்டோர் உள்ளனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
Updated on
2 min read

செங்கல்பட்டு: வாசிப்பின் வழியே புதிய உலகை காண்போம் எனும் நோக்குடன், புத்தக வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக, எஸ்.எஸ்.எல்.எஃப். கல்வி அறக்கட்டளை மற்றும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் இணைந்து ‘வாசிப்பை நேசிப்போம்' எனும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் பேசியதாவது: ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முதலில் மனிதர்களுக்குள் ஒளி வடிவில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பின்னர் ஓவியங்கள் மூலமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டனர். அதன் பிறகு எழுத்து உருவானது. எழுத்துகள் ஓலைச்சுவடி மூலம் எழுதப்பட்டன. அதைத்தொடர்ந்து காகிதத்தில் எழுதப்பட்டது. தற்போது டிஜிட்டல் வடிவிலும் எழுத்துகள் உருவாகியுள்ளன.

இவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இன்றைய வேகமான உலகில் முதன்முதலில் பயன்படுத்திய ஓவிய வடிவில் நாம் தொடர்புகளை வைத்துக் கொள்கிறோம். வேகமான உலகில் இன்று நாம் மீண்டும் எளிதாக மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகளைக் குறித்து ஓவிய வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். இன்றைய நவீன உலகில்எத்தனை பேர் புத்தகங்களைப் படிக்கிறோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எல்லா கேள்விக்கும் விடை: புத்தகம்தான் ஒரு மனிதனின் உண்மையான மதிப்பான நண்பன். ஆனால், இன்று அனைவரும் செல்போனையே நண்பர்களாக வைத்துள்ளனர். புத்தகம் மட்டுமே உங்களின் எல்லா கேள்விக்கும் விடையளிக்கும். உங்கள் தனிமைக்கும் பதில் அளிக்கும். உலகளாவிய சிந்தனைகளை வளர்க்கவும் புத்தகப்படிப்பு உங்களுக்கு உதவும்.

புத்தகம் வாசிக்கும்போது அதில் ஒரு கதாபாத்திரமாகவே மாறி விடுவோம். பெரும்பாலும் புத்தகங்கள் உத்வேகம் தரக்கூடியதாகவே அமைந்துள்ளன. புதிய சிந்தனைகளை நம்முள் உருவாக்கும். நான் இன்று உங்கள் முன் நின்று பேசுவதற்கு காரணம் புத்தகங்கள்தான். தினமும் ஐந்து, ஆறு மணி நேரம் புத்தகங்களைப் படித்ததன் மூலம் இன்று ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்றுள்ளேன். நீங்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும். அதுவே உங்கள் வாழ்க்கையில் ஆதாரம்.

புத்தகங்களைப் படிக்கும்போதுதான் தன்னம்பிக்கை வளரும். உலகில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாம் முன்னேற வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தச் சூழலை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள புத்தகங்கள் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் உள்ளன.

அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்களை படியுங்கள். அது வாழ்வில் சிறந்த வழிகாட்டியாகவும் நண்பனாகவும் உற்ற தோழனாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.எஸ்.எஸ்.எல்.எஃப். கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் ஜி.சக்திவேல் பேசியதாவது:

உயர்ந்த நிலையை அடையலாம்: இன்றைக்கு புத்தகம் என் முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக இருந்து, இந்த நிலைக்கு என்னை உயர்த்தி உள்ளது. ஒரு ஆண் படித்தால் அவன் குடும்பம் முன்னேறும். பெண் படித்தால் சமுதாயம் முன்னேறும், சமுதாயம் முன்னேறுவதற்கு பெண்கள் புத்தகங்களை அதிக அளவில் படிக்க வேண்டும். நமக்கு எவ்வளவு சொத்து இருந்தாலும் அது களவு செய்யப்படும்.

ஆனால், நம்முடைய படிப்பை யாரும் களவு செய்ய முடியாது. தொடர்ந்து புத்தக வாசிப்பை மேற்கொண்டால் வாழ்வின் அனைத்து நிலையையும் நாம் அடையலாம். நம்முடைய இலக்கை நோக்கி புத்தகம் வாசிப்பே நம்மை கொண்டு செல்லும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் வளர்வது மட்டுமல்ல, அது நம் நாட்டையும் முன்னேற்றும். பணம் சம்பாதிக்க முடியும், நேரத்தைச் சம்பாதிக்க முடியாது என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல்காதர் பேசியதாவது: உங்கள் அறிவை விரிவடையச் செய்ய வேண்டும் என்றால் புத்தகங்களைப் படியுங்கள் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.

படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுவே உங்களை வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும். படிக்கும் வயதில் மன உறுதியுடன் படிக்க வேண்டும். படிப்பே நம்மை யார் என்பதை உலகுக்குக் காட்டும்.

வாழ்க்கையில் முன்னேறிய வர்கள் புத்தகப் படிப்பை படித்து உயர்ந்த நிலைக்கு சென்றிருக் கிறார்கள். புத்தக வாசிப்பின் மூலமே அனைவரும் தங்கள் இலக்கை அடைந்திருக்கின்றனர்.

செல்போன் மற்றும் சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் நினைவாற்றல் குறைந்து வருகிறது, கற்றல் திறன் குறைந்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் புத்தகங்களைப் படிக்க வேண்டும். புத்தகத்தை படித்தவர் கள் இன்று உயர்ந்த பதவிக்கு, உயர் நிலைக்குச் செல்கின்றனர்.

வெற்றியை தீர்மானிக்கும்: தேவையற்ற எண்ணங்கள், தேவையற்ற அன்பர்களை விலக்கினால் தேவையானது மட்டுமே நம்மிடம் இருக்கும். புத்தகம் உங்கள் வாழ்வில் வெற்றியை தீர்மானிக்கும். மனதையும் சூழலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அனுபவத்தின் முதல் ஆசான் புத்தகமே. இவ்வாறு அவர் பேசினார். நிறைவில், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.அருணாதேவி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் வித்யாசாகர் கல்வி குழும எம்பவர்மென்ட் முதல்வர் முனைவர் மாரி சாமி, கல்லூரி பேராசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 'இந்து தமிழ் திசை' நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முரு கேசன் தொகுத்து வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in