

கற்பக விநாயகா எஜுகேஷனல் லோர் ஃபார் லேர்னிங் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற அஃபினிட்டி‘26 பண்பாட்டு, விளையாட்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நினைவுப் பரிசு வழங்கும் மருத்துவக் கல்லூரி டீன் சுஃபாலா சுனில் விஸ்வாஸ் ராவ், துணை முதல்வர் துரை பாண்டியன் மற்றும் விழாக் குழுவினர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சின்னக்கொளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகா எஜுகேஷனல் லோர் ஃபார் லேர்னிங் - KVELL (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிறுவனத்தில், மாநில அளவிலான ‘அஃபினிட்டி’26’ பண்பாட்டு மற்றும் விளையாட்டு விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மீடியா பார்ட்னராக இணைந்திருந்தது.
இக்கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி நிறைவடைந்தது. கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் 4-ம் ஆண்டு மாணவர்கள் இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர். தொடர்ந்து 13 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில், தமிழகம், புதுச்சேரியில் இருந்து 68 மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முதல் 2 நாட்களில், மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும், மாணவர்களிடம் பரஸ்பர நட்புறவை வளர்க்கும் வகையிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இடம்பெற்ற இசை, நடனம், நாடகம், மேடைப் போட்டிகள், பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் மாணவர்களை வெகுவாக கவர்ந்தன.
விஜய் நாராயணன், சிவ பிரியா, கேபிஒய் குரேஷி, பால்பச்சை, ஷர்மி, கார்த்திக் தேவராஜ், தன்வந்த் ஸ்ரீஹரி, ராணவ், நாகமுத்து பாண்டியன் உள்ளிட்ட பலரும் நடுவர்களாகப் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினர். கலாட்டா மீடியா சார்பில் ‘மொத ராத்திரி’ படக் குழுவினர் மாணவர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
அஃபினிட்டி‘26 பண்பாட்டு, விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.
3-ம் தேதி நடைபெற்ற நிறைவு நாள் விழாவில், திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஹாரிஸ் ஜெயராஜின் பாடலை ஒரு மாணவி பாடினார். இதைத் தொடர்ந்து, கிழக்கு வாசல் சந்திரன் கிடார் இசையுடன் இணைந்து ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடல் பாடியதை மாணவர்கள் உற்சாகத்துடன் ரசித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் தனது கடந்தகால இசைப் பயண அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.
நடனப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி அவர்களுடன் இணைந்து நடனமாடிய திரைப்பட நடன இயக்குநர் ஸ்ரீதர்.
விழாவின் ஒரு பகுதியாக, பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாக கலந்துரையாடினர். இதே கல்வி நிறுவனத்தில் பயின்று, தற்போது பிளாக் ஷீப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் விக்னேஷ் காந்த் மற்றும் பல்வேறு இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் பங்கேற்று, மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர்.
‘அஃபினிட்டி’26’ பண்பாட்டு மற்றும் விளையாட்டு விழாவை சிறப்பாக நடத்த பெரும் ஊக்கமும், ஆதரவும் அளித்த பல்கலைக்கழக தலைவர் மற்றும் டிரஸ்டி டாக்டர் அண்ணாமலை ரெகுபதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
தமிழகம், புதுச்சேரியில் இருந்து விழாவில் பங்கேற்ற மருத்துவ மாணவர்களில் ஒரு பகுதியினர்.
விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள், பரிசுகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், டிரஸ்டி முனைவர் மீனாட்சி அண்ணாமலை, மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சுஃபாலா சுனில் விஸ்வாஸ் ராவ், துணை முதல்வர் டாக்டர் துரை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். ‘அஃபினிட்டி’26’ அமைப்பாளர் குழு மாணவர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர். மாநில அளவிலான இந்த விழாவுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மீடியா பார்ட்னராக இணைந்திருந்தது.
“மருத்துவப் படிப்பு என்பது கடினமானது என்பதால், இதுபோன்ற பண்பாட்டு மற்றும் விளையாட்டு விழாக்கள் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. தொடர் கல்வி மற்றும் தேர்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்கி, மாணவர்களை ஆசுவாசப்படுத்துகின்றன. மாணவர்கள் தாங்களாகவே முன்னின்று இந்த விழாவை ஒருங்கிணைப்பதால், அவர்களிடம் தலைமைப் பண்பு, நேர மேலாண்மை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன், குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் ஆகியவை வளர்கின்றன.
பிற கல்லூரி மாணவர்களுடன் பழகுவதன் மூலம் எதிர்கால மருத்துவப் பணிக்குத் தேவையான சமூக வலைப்பின்னல் மற்றும் பரஸ்பர நட்புறவு வலுப்பெறுகிறது. வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களிடம் மறைந்திருக்கும் கலை, இசை, விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களது ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்தவும் இதுபோன்ற விழாக்கள் முக்கிய பங்காற்றுகின்றன” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.