Last Updated : 28 Nov, 2023 06:15 AM

 

Published : 28 Nov 2023 06:15 AM
Last Updated : 28 Nov 2023 06:15 AM

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ வெபினார் நிகழ்வு; முழுமுயற்சியோடு ஈடுபட்டால் வெற்றியடைய முடியும் - பேராசிரியர்

ராஜவெங்கடேசன்

சென்னை: எந்தத் துறையிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்று சென்னை விஐடி ஸ்கூல் ஆஃப் லா முதுநிலைஇணைப் பேராசிரியர் பி.ஆர்.எல்.ராஜவெங்கடேசன் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களும்நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறுஅரசுத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக்கலை ஆகியஉயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும்விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெபினார் கடந்த நவ. 25, 26 ஆகிய இரு நாட்கள் இணைய வழியே நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது.

இந்த இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைத்து கலந்துரையாடிய ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான வி.டில்லிபாபு பேசியதாவது: இந்தியாவில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்து உருவாக்குவது, அவற்றை மேற்பார்வையிடுவது என காத்திரமான பங்களிப்பைச் செய்துவருபவர்கள் இண்டியன் எக்னாமிக்ஸ் சர்வீஸ் (ஐஇஎஸ்) என அழைக்கப்படும் இந்திய பொருளாதாரப் பணி அதிகாரிகள் ஆவர். நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆளுகையின்கீழ் ஐஇஎஸ் எனப்படும் அதிகாரிகள் 55 துறைகளில் பங்களித்து வருகின்றனர். ஐஎஸ்எஸ் எனப்படும் இந்திய புள்ளியியல் பணி அதிகாரிகள் தேசத்தின் சமூக பொருளாதார திட்டமிடலில் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த நீதி பரிபாலனம் செய்யும் நீதி துறை, ஜனநாயகத்தின் நான்கு முக்கியமான தூண்களுள் ஒன்று.ஆட்சியாளர்களையே கட்டுப்படுத்தும் நீதி துறை, விளிம்புநிலை மக்களின் கடைசி களங்கரை விளக்கமாகவும் திகழ்ந்து வருகிறது. நீதி துறையில் பங்காற்ற சட்டங்களைப் பற்றிய புரிதலும் தெளிவும் அவசியம் என்றார்.

இந்திய சார்நிலை புள்ளியியல் துறையின் முன்னாள் அலுவலர் பூமிநாதன் பேசியதாவது: பொருளாதாரம் சார்ந்த பாடங்களில் அதிக மதிப்பெண்களை எடுத்ததும், தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் அடைந்த வெற்றிகளுமே இத்துறையின் மீது எனக்கு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உண்டாக்கியது. பல்வேறு துறைகளில் ஏற்படும் மாற்றங்களையும், அந்த துறைகளின் வளர்ச்சிகளையும், எதிர்காலத் திட்டமிடல்களையும் ஆராய்வதோடு, நம் நாட்டின் பொருளாதாரத்தை அந்தந்த துறைகளில் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, எதிர்காலத்தில் எந்ததுறையில் எப்படிப்பட்ட மாற்றங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதை முன்னெடுப்பது பொருளாதாரதுறையின் முக்கிய பணியாகும். பொருளாதார துறையின் அதிகாரிகள் முடிவை எடுப்பதற்கு தேவையான புள்ளிவிவரங்களை அளிப்பது புள்ளியியல் துறையின் பணியாக இருக்கிறது என்றார்.

சென்னை விஐடி ஸ்கூல் ஆஃப்லா முதுநிலை இணைப்பேராசிரியர் பி.ஆர்.எல்.ராஜவெங்கடேசன் பேசியதாவது: சட்டம் என்ற வார்த்தையே பயமறியாது என்றுகூறுவர். சட்டம் என்றாலே தைரியம், துணிச்சல் இவற்றோடு சட்டம்படித்தவர்கள் சட்டத்தின் குரலையும் எதிரொலிக்க முடியும். சட்டம் தெரியாத பாமர மக்களுக்கும் கூட ஏதாவது பாதிப்பெனில் சட்டம் படித்தவர்கள் அந்த பாமர மக்களுக்கு துணையாக இருந்து சட்டத்தின் வழி உதவ முடியும். அநீதி நடக்கும் இடங்களில் சட்டம் படித்தவர் சென்று, சட்டப்படி நடக்க வேண்டுமென்று உறுதியாகக் கூற முடியும். சமுதாயத்தில் நடக்கும் எந்த அநீதிக்கு எதிராகவும் சட்டம்படித்தவர்களால் துணிந்து கேள்விகேட்க முடியும். எந்த பிரச்சினைஎன்றாலும் அதனை எதிர்கொள்ளும் துணிச்சல் சட்டம் படித்தவர்களுக்கு உண்டாகும். எந்தத் துறையிலும் முழுமுயற்சியோடு ஈடுபட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்றார்.

நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதில்களை அளித்தனர். இந்த இரு நிகழ்வுகளையும் பார்க்கத் தவறியவர்கள் https://www.htamil.org/DKNPS02E13, https://www.htamil.org/DKNPS02E14 ஆகிய லிங்குகள் மூலம் அல்லது இத்துடன் உள்ள QR code-ஐ ஸ்கேன் செய்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x