‘மாதொருபாகன்’ திரைப்படம் ஆகிறதா? - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்

‘மாதொருபாகன்’ திரைப்படம் ஆகிறதா? - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்

Published on

நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, அகராதி, தொகை நூல் என்று பல்வேறு வகைமைகளில் சுமார் 50 நூல்கள் எழுதியவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். இவரது 14 நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. சுமார் 20 விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது 'பூக்குழி' நாவல் சர்வதேச புக்கர் விருதுக்கான நெடும் பட்டியலில் இடம் பெற்றது. வட்டாரப் பண்பாட்டு இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த அவருடன் ஓர் உரையாடல்...

Q

உங்களுள் இருந்த படைப்பாளியை இனம் கண்டு கொண்டது எப்போது?

A

அது ஆனி மாதம்; ஞாயிற்றுக்கிழமை. நிலங்கள் எல்லாம் விதைப்பு கண்டிருந்தன. பதினொரு மணிவாக்கில் பட்டியைத் திறந்து செம்மறிகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப் போனேன். வண்டித்தடத்தோரமே மேய்ந்து சென்ற அவற்றை விளைநிலத்தில் கால் பதிக்க விடாமல் மெல்ல விரட்டிச் சென்றேன்.

பெரும்பசியோடு இருந்த அவை அப்படியே போய் நுழைந்த இடம் எங்கள் ஊர் இடுகாடு. என் கட்டுப்பாட்டை மீறி வேம்பு அடர்ந்த சிறு வனமான இடுகாட்டிற்குள் புகுந்து சட்டெனப் பரவின. நல்ல மேய்ச்சல் இருந்ததால் ஆவலோடு முன்னேறிக் கொண்டிருந்தன. ஆளற்ற தடத்தில் நான் மட்டும் நிற்கிறேன். உள்ளே செல்ல எனக்குப் பயம். ஆட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அப்பனுக்கு என்ன பதில் சொல்வது எனப் பதற்றம். நாக்கைச் சுழற்றி ‘பா…ட்ர்ர…ட்ர்ர’ என்று ஒலி எழுப்பி அழைத்துப் பார்க்கிறேன். ஒன்றுகூடச் செவிசாய்க்கவில்லை.

யாராவது வந்தால் உடன் வரச் சொல்லி உள்ளே போய் ஓட்டிவரலாம் எனத் தீர்மானித்துக் கொண்டு தடத்தில் இருந்த பனையடியில் உட்கார்ந்தேன். இடுகாட்டு மரங்களில் அடையும் பறவைகளைப் பார்த்துக் கொண்டும் யாராவது வருகிறார்களா எனத் தடத்தைப் பார்த்துக் கொண்டும் நேரம் கழிந்தது. ஒருமணி நேரம் கழிந்திருக்கும். விருப்பப்படி மேய்ந்து வயிறு நிறைந்த ஓர் ஆடு தன் குட்டியோடு என்னை நோக்கி வந்தது. அதைப் பிணையாக வைத்து அழைத்து எல்லா ஆடுகளையும் வெளியே வரவைத்து வேறிடம் ஓட்டிச் சென்றேன். என் பயத்தையும் பதற்றத்தையும் விவரித்து ஒரு குறிப்பேட்டில் கதை போல ஒன்றை அன்று இரவு என் குறிப்பேட்டில் எழுதினேன்.

அடுத்த நாள் பள்ளி வகுப்பில் என் நண்பன் மணிவண்ணனிடம் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன். வாசிப்பில் ஈடுபாடு கொண்டவன். திரைத்துறைக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவன். அவன் வாசித்து விட்டு என்னைக் கட்டிப்பிடித்து ‘நீ கலைஞன்டா..’ என்றான். அவன் மனதாரச் சொன்னானோ கேலியாகச் சொன்னானோ தெரியவில்லை. அந்தக் கணத்தில் என்னை எழுத்தாளனாக உணர்ந்தேன். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம்.

Q

உங்கள் படைப்புகளில் எது உச்சம் ? எது பெருமை ?

A

உச்சம் தொட்டதாக எதையும் கருதவில்லை. என் படைப்பாற்றலின் முழுமையைப் பயன்படுத்தி இன்னும் எழுதவில்லை. இனிமேலேனும் எழுத முடியுமா என்றும் தெரியவில்லை. ஆனால் நிழல் முற்றம், கூளமாதாரி ஆகிய நாவல்கள் எழுதியதைப் பெருமையாக நினைக்கிறேன்.

Q

உங்களுள் இருக்கும் பல்லாண்டு அனுபவம் கொண்ட பண்டித மனம் கொண்ட ஆசிரியரை மீறி எழுத்தாளராக எப்படி வெளிப்படுகிறீர்கள்?

A

பன்னிரண்டு ஆண்டுகள் இலக்கியம் கற்றும் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் இலக்கியத்தைக் கற்பித்தும் வந்தவன் நான். அந்த இலக்கியம் பலர் சொல்லும் ‘பண்டித மனோபாவம்’ என்பதை எனக்குள் உருவாக்கவில்லை. மன விரிவையே ஏற்படுத்தியது. மன அடைப்புகளை எல்லாம் திறக்கும் சாவி இலக்கியம். அது என்னைப் பண்டிதனாக்கி ஒதுக்கவில்லை. மேலும் நான் எழுத்தாளனாக என்னை உணர்ந்ததால் இலக்கியக் கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன். என் படைப்பாற்றலுக்கு இலக்கியக் கல்வி உந்துதல் கொடுத்ததே தவிரத் தடை போட்டதேயில்லை.

Q

ஒரு கவிஞராக நீங்கள் எப்போது வெளிப்படுவீர்கள்? எழுத்தாளராக எப்போது வெளிப்படுவீர்கள்?

A

கணத்தில் நிகழும் அற்புதம் கவிதை. மகிழ்ச்சியோ துயரமோ ஆதங்கமோ ஆவேசமோ ஒரு கணத்தில் ஒற்றை வரியை, ஒருசொல்லை மனதில் உருவாக்கும். அதைப் பற்றிக் கொண்டு பிறக்கும். கதை எழுத ஆடுமாடு போல அசை போடும் அவகாசம் தேவை. அரைபட்ட தீனி தொண்டைக்குள் இறங்கும் தருணத்தில்தான் கதை பிறக்கும்.

Q

உங்கள் 11 நாவல்கள் ஆங்கிலத்தில், போலீஷ், இடாய்ச்சு, செக், சீனம், இத்தாலி,இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2023க்கான புக்கர் விருது நெடும் பட்டியலில் பூக்குழி சென்றது. ஜேசிபி இலக்கியப் பரிசை ஆளண்டாப் பட்சி பெயர்ப்பான Fire bird பெற்றது. 2004 இல் கிரியமா விருதின் குறும் பட்டியலில் இடம் பெற்றது. பல்வேறு விருதுகள், பரிசுகள் என்ற நிலையில் நீங்கள் சென்றடைய வேண்டிய தூரம் எது?

A

நான் எந்தத் தூரத்தையும் இலக்காகக் கொண்டு பயணம் செய்யவில்லை. என் மனம் போகும் போக்கில் சென்று கொண்டிருக்கிறேன். அப்படித்தான் என் எழுத்துப் பயணம். எழுதுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தாயின் கையைப் பற்றிச் செல்லும் குழந்தை போல எழுத்தின் கைப்பிடித்துச் செல்கிறேன். எழுத்தே என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. அவ்வளவுதான்.

Q

மொழிபெயர்ப்பில் உங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம், வெற்றியின் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

A

பொதுவாக யாருக்கும் எதுவும் சொல்ல நான் விரும்புவதில்லை. அவரவர் வழி; அவரவர் பயணம். மொழிபெயர்ப்பால் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அது பெருமகிழ்ச்சி தருகிறது. பல பயண வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இன்னும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் ‘வெற்றி’ என்று எதையும் சொல்ல முடியவில்லை. ‘வெற்றி’ என்று சொல்லும்போது மலையுச்சியில் நின்று பெரும் பள்ளத்தைக் காண்கையில் தோன்றும் அச்சச் சிலிர்ப்பை உணர்கிறேன். அது வேண்டாம்.

Q

இந்திய மொழிகளில் கன்னடம் ,மலையாளம் மொழிகளுக்கு உள்ள மொழிபெயர்ப்பாளர் போல் தமிழுக்கு இல்லை என்பது பற்றி?

A

கன்னடம், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பாளர் பிரச்சினை உண்டு. அதைக் கடந்து ஆங்கிலத்தில் கொண்டு செல்லும் முயற்சி நடக்கிறது. அப்போது மொழிபெயர்ப்பாளர்கள் பலர் உருவாகி வருகின்றனர். நம்மிலும் ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர்கள் உள்ளனர். அவர்களிலிருந்து ஏன் மொழிபெயர்ப்பாளர்கள் வருவதில்லை? நமக்குள்ள பிரச்சினை நம் இலக்கியத்தைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லும் நவீனச் சந்தை முறையைப் பற்றிக் கொள்ள இருக்கும் மனத்தடை.

அதைக் கடந்தால் மொழிபெயர்ப்பாளர்கள் பலர் வருவார்கள். ‘நமக்குள்ளே பழங்கதை பேசுவதில்’ நிறைவு காணுதல் மொழிபெயர்ப்புக்கு உதவாது. நம் தமிழிலக்கியத்தை இந்திய இலக்கியமாக இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் முன் வைக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. நாம்தான் தயாராகவில்லை.

Q

பெரும்பாலும் வட்டாரப் பண்பாடு சார்ந்த உங்கள் படைப்பை ஆங்கிலம் வழியாக வாசிக்கும் போது அதன் வழியே தமிழ் மனம்,பண்பாடு வரலாற்றை அயல் வாசகன் உணர முடிந்து இருக்கிறதா?

A

ஏன் உணர முடியாது? மொழிபெயர்ப்புகள் வழியாகத்தானே ஐரோப்பிய அமெரிக்கப் பண்பாட்டை நாம் உணர்கிறோம்? அங்கும் வட்டாரப் பண்பாடு, மொழி வேறுபாடு எல்லாம் உள்ளன. அவற்றை மொழிபெயர்ப்பில் வாசித்துச் சிலாகிக்கிறோம். அதே போலத்தான் நம் இலக்கியத்தையும் அவர்கள் உணர்கிறார்கள்; உள்வாங்குகிறார்கள்.

இலக்கிய வாசகர்களுக்கு எப்போதும் ‘புதிது’ தேவை. இந்திய மொழிப் படைப்புகள் அவர்கள் இதுவரை அறியாத புதிய நிலப்பரப்பைக் காட்டுகின்றன. புதிய வாழ்க்கை, புதிய விழுமியங்கள் என எல்லாம் புதிதாக இருக்கின்றன. அதை அவர்கள் அறிதலாகவும் அனுபவமாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள்.

மனிதர்கள் வெவ்வேறு நிலப்பரப்பில் வசித்தாலும் பண்பாட்டு ஒற்றுமைகளும் உண்டு. நிலவுடைமைப் பண்பாடு உலகம் முழுவதும் இருந்தது, இருப்பதுதானே? நிலத்தின் மேல் பிடிப்பு, இடம்பெயர்வதில் அனுபவிக்கும் துன்பம் எனப் பொதுக்கூறுகள் பல. 'மாதொருபாகன்' நாவலில் வரும் விதிமீறலையும் சில சந்தர்ப்பங்களில் விதியாகக் கொண்டு உள்வாங்கிக் கொள்ளும் இயல்பு எல்லாச் சமூகத்திலும் இருக்கிறது. இந்நாவலை வாசித்த பலர் தங்கள் பண்பாட்டில் இவ்வம்சம் எப்படி இருக்கிறது என்று ஒப்பிட்டுச் சொல்கிறார்கள். இப்படி ஆரோக்கியமான எதிர்வினைகள் வருகின்றன.

Q

உங்கள் நூல்கள் ஆங்கிலத்தில் பரிசு பெற்ற போது மொழிபெயர்ப்பாளரின் இடம் என்ன?

A

பல பரிசுகள் மொழிபெயர்ப்பாளரையும் அங்கீகரிக்கின்றன. ஜேசிபி இலக்கிய விருதில் எழுத்தாளருக்கு இருபத்தைந்து லட்சம்; மொழிபெயர்ப்பாளருக்குப் பத்து லட்சம். மொழிபெயர்ப்பாளர்களை இலக்கிய விழாக்களுக்கு அழைக்கிறார்கள். மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் சார்ந்து விவாதிக்கிறார்கள். உரிமைத்தொகையிலும் எழுத்தாளருக்கு நிகரான விழுக்காடு மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைக்கிறது. சிலசமயம் எழுத்தாளரை விடவும் மொழிபெயர்ப்பாளருக்கு அங்கீகாரமும் வருமானமும் கூடியிருப்பதையும் காண்கிறேன்.

Q

ஒரு படைப்பை அயல் மொழிக்குக் கொண்டு சேர்ப்பதில் மொழிபெயர்ப்பாளரின் பங்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொண்டது?

A

அது கூட்டு முயற்சி. எழுத்தாளர், பதிப்பாளர்கள், இலக்கிய முகவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலர் செயல்படுகின்றனர். எத்தனை இருப்பினும் மொழிபெயர்ப்பாளரின் பங்கு பெரிது. மூலமொழி, இலக்கு மொழி இரண்டிலும் புலமை பெற்றிருக்க வேண்டும். பலவற்றைக் கற்றுக்கொள்ளும் மனம் இருக்க வேண்டும். தம் அறியாமையை வெளிப்படப் பேசி எழுத்தாளரிடமும் பிறரிடமும் விவாதிக்கும் இயல்பு தேவை. நவீனப் பார்வை அவசியம். எல்லாம் கூடி வரும் மொழிபெயர்ப்பாளர் ஒரு படைப்பை இன்னொரு மொழிக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்ப்பார்.

Q

நம் தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியே செல்ல, நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?

A

பன்னாட்டுப் புத்தகச் சந்தையின் இயல்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். சான்றாக ஒன்றைச் சொல்கிறேன். மொழிபெயர்ப்பில் இலக்கிய முகவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அதற்கென உரிமைத்தொகையில் ஒருபகுதியை அவர்கள் பெறுவார்கள். அதைப் பற்றிய புரிதல் தமிழ்ச் சூழலில் சிறிதும் இல்லை. இப்படிப் பல இருக்கின்றன. அவற்றை ஓரளவாவது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அறிந்துகொள்ள வேண்டும். அதே போல மொழிபெயர்ப்புச் செயல்பாட்டுக்கு முழுமையாக இசைதல் வேண்டும்.

ஒன்றைச் சொல்கிறேன். மொழிபெயர்ப்புச் செயல் நிறைவேறக் கால அவகாசம் தேவை. ஒப்பந்தம், மொழிபெயர்ப்பு, செம்மையாக்கம், வடிவமைப்பு, வெளியீடு, புத்தக மேம்பாட்டு நிகழ்ச்சிகள் என ஆங்கிலப் பதிப்புலகம் பல படிநிலைகளைக் கொண்டது. அதற்குரிய பொறுமை வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் பத்து நாள் முன்னால் நூல் படியைக் கொடுத்துவிட்டுக் கண்காட்சிக்குப் புத்தகம் வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும் தமிழ் எழுத்தாள மனநிலையைக் கைவிட்டால்தான் மொழிபெயர்ப்பு சாத்தியப்படும்.

Q

'கொங்கு வட்டாரச் சொல்லகராதி' தொகுப்புப் பயணம் பற்றி? அந்தப் பணியில் இருந்தவர் பேராசிரியரா? எழுத்தாளரா?

A

இளங்கலை படிக்கும் காலத்தில் நாட்டுப்புறவியல், மொழியியல் ஆகியவை பாடத்திட்டத்தில் இருந்தன. அவற்றைக் கற்கும்போது வட்டார வழக்கு பற்றி அறிந்தேன். அப்போது கி.ரா. உருவாக்கிய கரிசல் ‘வட்டாரச் சொல்லகராதி’ பற்றிய மதிப்புரையோ விளம்பரமோ மீரா நடத்திய ‘அன்னம் விடு தூது’ இதழில் வந்தது. இவற்றின் தாக்கத்தால் எங்கள் பகுதியில் வழங்கிய சொற்களில் வட்டார வழக்கு என எனக்குத் தோன்றியவற்றைக் குறிப்பேட்டில் எழுதி வந்தேன். முதுகலை படிக்கும் போது கோவையைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் உதவினார். அப்படித் தொகுக்கத் தொடங்கிய சொற்கள் பெருகி 2000இல் அகராதியாக வெளியாயிற்று. ஒரு பதிப்புக்குப் பிறகு அச்சாகவில்லை. மேலும் பல சொற்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். அவற்றையும் சேர்த்து அடுத்த பதிப்பு கொண்டு வரும் எண்ணம் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. வரும் சில ஆண்டுகளில் அதை முடிக்க வேண்டும்.

அகராதித் தொகுப்பையும் ஒரு படைப்புச் செயல்பாடாகவே காண்கிறேன். ஒவ்வொரு சொல்லைப் பற்றி யோசிப்பதும் அதற்குப் பொருள் தரும் தொடர், சான்று ஆகியவற்றைக் கொடுப்பதும் படைப்பு மனநிலைதான். என் முறைசார் கல்வியும் இதில் பயன் தந்தது. கி.ரா. தொடங்கி வைத்து நான் தொடர்ந்தேன். பிறகு கண்மணி குணசேகரன் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ கொடுத்தார். நாஞ்சில் நாட்டு அகராதியைப் பேராசிரியர் அ.கா.பெருமாள் தயாரித்தாலும் அதில் நாஞ்சில் நாடனின் பங்களிப்பு இருந்தது. வட்டாரச் சொல்லகராதி படைப்பாளர்களின் பங்களிப்பாகவே தோன்றுகிறது. அவற்றில் குறை சொல்வதே பேராசிரியர்களின் வேலையாக இருந்தது. நான் எழுத்தாளராகவே இப்பணியைச் செய்திருக்கிறேன்; என் முறைசார் கல்வியும் அதற்கு உதவியது என்று சொல்ல விரும்புகிறேன்.

Q

'மாதொருபாகன்' பிரச்சினையில் நீங்கள் பாடமாக இனம் கண்டு கொண்டது எது? அல்லது யாரை? கெடுதலிலும் நன்மையாக நீங்கள் உணர்ந்தது எது?

A

சமகால அரசியல் சூழலையும் மக்கள் மனோபாவத்தையும் சரியாக அனுமானிக்கும் பார்வை எழுத்தாளருக்கு வேண்டும்; அதை இனித் தவறவிடக் கூடாது என்பதையே எனக்கான பாடமாகக் கொண்டேன். ‘கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்’ என்கிறது திருக்குறள். நட்பையும் உறவுகளையும் நீட்டி அளக்கக் கிடைத்த கோலாக இப்பிரச்சினை எனக்கு அமைந்ததுதான் நன்மை.

Q

மறுபிறப்பு எடுத்து எழுத வந்துள்ள நீங்கள் உங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டதாகக் கூறி இருக்கிறீர்களே?

A

ஆம். இவ்வளவு பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிப் பெருந்துன்பத்தை அடைந்த பிறகும் பக்குவப்படாமல் எப்படி இருக்க முடியும்? துன்பம் வர வரச் ‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்’ என்று வள்ளுவர் சொல்கிறார். என்னுள்ளும் சிறுஒளியேனும் தோன்றாமல் இருக்குமா?

Q

பேராசிரியர் , துறைத் தலைவர் ,முதல்வர் என்று துறை சார்ந்த பணியிலிருந்து நீங்கள் முழு மன நிறைவோடு வெளிவரவில்லை. இதற்குக் காரணம் என்ன? களைய வேண்டியவை என்னென்ன?

A

ஆசிரியர் பணியில் முழுமையாகச் செயல்பட முனையும் ஒருவருக்கு நம் சூழலில் நேரும் தடைகளை எல்லாம் நானும் அனுபவித்தேன். அதனால் தான் நிறைவாகப் பணியாற்றிய உணர்வு இல்லை. நாம் கல்வியில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். பல தளங்களில் மாற்றம் வேண்டும். வகுப்பறை, பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், கல்வி நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகள் என எல்லாவற்றிலும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

அவற்றை உணர்ந்து எனக்குரிய ஒருவெளியை உருவாக்கிக் கொண்டு பணியாற்றினேன். இந்தப் பிரச்சினைகளின் காரணமாக ஓய்வு முடிவை எடுக்கவில்லை. முழுநேர எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம். அதற்கு என் குடும்பச் சூழல் இயைந்து வந்ததால் விருப்ப ஓய்வு பெற்றேன். எனக்கு இயங்குவதற்கு எழுத்து என்னும் பெருந்திடல் விரிந்து கிடக்கிறது. அதில் கால்களையும் கைகளையும் அசைத்துச் சுதந்திரத்தோடு மெதுவோட்டம் செல்கிறேன். உற்சாகமாக இருக்கிறேன்.

Q

நவீன இலக்கியத்தில் கன்னடத்துடன், மலையாளத்துடன் நாம் ஏன் போட்டி போட முடியவில்லை?

A

நவீன இலக்கியத்தில் இந்திய மொழி எதனுடனும் போட்டியிடும் நிலையில்தான் தமிழ் இருக்கிறது. பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் சுணக்கம் இருக்கலாமே தவிரப் படைப்புகளின் பின்தங்கிவிடவில்லை. நாவல், சிறுகதை, கவிதை ஆகியவற்றில் நாம் சாதனையாளர்கள்தாம். மலையாளம், கன்னடம், வங்கம், இந்தி, தமிழ் ஆகிய ஐந்து இந்திய மொழிகளும் நவீன இலக்கியத்தில் முன்னணியில் இருக்கின்றன என்பது என் அனுமானம்.

Q

உங்களது எழுத்தைத் திரை வடிவில் பார்க்கும்போது உங்களது உணர்வு எப்படி இருந்தது?

A

வாசகர் ஒருவரின் கருத்தை உள்வாங்கி அறிந்து கொள்ளும் மனநிலையில்தான் திரை வடிவத்தையும் காண்கிறேன். என் மனதிலிருந்து எழுத்தில் இறக்கி வைத்த நிலக் காட்சிகளும் பாத்திர வடிவமைப்பும் இயக்குநர் பார்வையில் எப்படி வந்திருக்கின்றன என்று அறியும் ஆர்வத்தோடு பார்க்கிறேன். மனம் நிறையும் உணர்வே கிடைத்திருக்கிறது.

Q

'சேத்துமான்' உங்களது 'வறுகறி'யின் அசலுக்கு நெருக்கமாக இருந்தது. அதிலிருந்த பகடி, படத்திலிருந்தது. 'அங்கம்மாள்' 'கோடித்துணி'யை அந்த அளவிற்கு நெருங்கவில்லையே? இரண்டு படங்களையும் ஒப்பிட முடியுமா?

A

ஒரு சிறுகதையைப் படமாக்கும் போது இரண்டு மணி நேரத்திற்கு விரிவாக்க வேண்டும். அதற்கு இயக்குநர்கள் பலவிதமாக முயல்வார்கள். 'சேத்துமான்' இயக்குநர் என் சிறுகதையை அப்படியே படமாக்க விரும்பினார். அதற்கேற்ற வகையில் படம் அமைந்தது. 'அங்கம்மாள்' இயக்குநர் என் சிறுகதையிலிருந்து தாக்கம் பெற்று மையத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தம் நோக்கில் விரிவாக்கியிருக்கிறார். இரண்டும் இருவிதப் பயணம்.

Q

'மாதொருபாகன்' திரைப்படமாகுமா?

A

ஏழெட்டு ஆண்டுகளாக அந்தப் பேச்சு நடந்து கொண்டேயிருக்கிறது. ஏனோ அமையாமல் தள்ளிப் போகிறது. அது எனக்கு நல்லதாகவே தோன்றுகிறது. நாவலால் எதிர்கொண்ட சர்ச்சை போதாதா, படமாக வந்து இன்னொரு சர்ச்சையும் எதிர்கொள்ள வேண்டுமா என்று என் மனம் கேட்கிறது. என் மன ஒவ்வாமை காரணமாகத்தான் தள்ளிப் போகிறதோ என்னவோ.

Q

வெளிநாட்டுப் புத்தகத் திருவிழா , பன்னாட்டு வாசகர் சந்திப்பு அனுபவம் பற்றி?

A

வெளிநாட்டுப் புத்தகத் திருவிழாக்கள் வாசகரை மையமிட்டு அமைகின்றன. அவர்களுக்குத் தேவையான வசதிகள், அவர்கள் பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தல், போக்குவரத்து என ஒவ்வொன்றையும் திட்டமிட்டுச் செய்கிறார்கள். புத்தகக் காட்சியில் வாசிப்புக்குத் தேவைப்படும் கருவிகள், பேனாக்கள், கணினிகள் விற்பனையும் உண்டு. எழுத்தாளர் சந்திப்புக்கான அரங்குகளும் இருக்கின்றன. புத்தகக் காட்சிகளைப் பார்வையிடுவதே நல்ல அனுபவமாகும். பிற நாடுகளில் எழுத்தாளர் சந்திப்புக்கு வரும் வாசகர்கள் முன்கூட்டியே வாசித்து எழுத்தாளரைப் பற்றிய முன்னறிவோடு வருகிறார்கள்.

'என் நண்பர்கள் சிலர் வர விரும்பினார்கள். உங்கள் நூல்களை வாசிக்க அவர்களுக்குக் கால அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் வர இயலவில்லை’ என்று என்னிடம் வந்து சொன்னவர்கள் உண்டு. கலந்துரையாடலில் படைப்புக்குள் இருந்து அதைப் புரிந்து கொள்ளும் நோக்கில் கேள்விகளைக் கேட்கிறார்கள். பிரான்ஸ் புத்தகக் கடை ஒன்றில் பங்கேற்ற நிகழ்வில் மாதொருபாகன் நாவலில் வரும் உழவு தொடர்பான செய்திகளைப் பிரான்ஸ் விவசாயத்தோடு பொருத்தி ஒருவர் கேள்வி கேட்டார். எழுத்தாளருக்கு அவர்கள் தரும் மதிப்பும் மரியாதையும் பெரிது.

Q

'ஒன் பார்ட் வுமன் ' நாவல் இந்தியாவில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது பற்றி?

A

ஆங்கிலத்தில் ஒருலட்சத்தைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பெங்குவின் பதிப்பகம் தம் முப்பத்தைந்தாம் ஆண்டையொட்டிச் சில நூல்களுக்கு மட்டும் சிறப்புப் பதிப்பை வெளியிட்டது. அதில் மாதொருபாகன் இடம்பெற்றது. அந்த அழகான பதிப்பு மாதொருபாகனுக்குக் கிடைத்த கௌரவம்.

Q

அமெரிக்கா, தென்கொரியா எழுத்தாளர் உறைவிட முகாம்களில் பங்கேற்ற அனுபவம் பற்றி?

A

எழுதுவதற்கான சூழலை அமைத்துக் கொடுப்பது பற்றி அச்சமூகங்களுக்கு இருக்கும் புரிதலை அம்முகாம் இடங்கள் வெளிப்படுத்துகின்றன. எல்லா வசதிகளையும் கொடுத்து எழுதும் மனநிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பிற நாட்டு எழுத்தாளர்களுடன் பழகவும் நல்ல வாய்ப்பு. எல்லோரும் சந்தித்துப் பேச இரவுணவு நேரத்தை ஒதுக்கியிருப்பார்கள். தென்கொரிய எழுத்தாளர்கள் கொடுத்து வைத்தவர்கள். இரண்டு மூன்று புத்தகம் எழுதிய ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் வேறு வேலை எதுவும் செய்யாமலும் வேறு புத்தகம் எழுதாமலும் அவை கொடுக்கும் வருமானத்திலேயே வாழலாம். நாடு முழுவதிலும் பல உறைவிட முகாம்கள் உள்ளன. அவற்றில் கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் மூன்று மாதம் வரைக்கும் தங்கலாம். ‘விரும்பினால் உறைவிட முகாம்களிலேயே வாழ்க்கையை நடத்திவிடலாம்’ என்று ஓர் எழுத்தாளர் சொன்னார். பொறாமையாக இருந்தது.

- அருள்செல்வன் | தொடர்புக்கு: arulselvanakm4@gmail.com

‘மாதொருபாகன்’ திரைப்படம் ஆகிறதா? - எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்
“யதார்த்தம் உணர்ந்து சினிமாவுக்கே விஜய் திரும்புவார்!” - பாஜகவின் நயினார் பாலாஜி நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in