பாவேந்தர் உணர்ந்துகொண்ட பாரதீ!

டிசம்பர் 11 - மகாகவி பாரதியார் பிறந்த தினம்
பாவேந்தர் உணர்ந்துகொண்ட பாரதீ!
Updated on
3 min read

“பாரதியார் என்றால் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியாரைத்தான் குறிக்கும். பாரதி என்றால் நமக்கு அவருடைய நினைவுதான் வருகிறது. அல்லது, 'பாரதி யார்?' - என்று கேட்டாலும் விடை தெரியுமாறு ஆராய்வோம்!”

- இப்படித் தொடங்குகிறார் பாவேந்தர் பாரதிதாசனார் தம்முடைய பொழிவு ஒன்றினை. மகாகவி பாரதி வெறும் 39 ஆண்டுகளே வாழ்ந்துவிட்டுப் போனவன். அந்த அற்ப வாழ்நாட்களிலும் இங்குமங்குமாக அலைந்தே நொந்தவன். வயிற்றுப் பிழைப்பும், குடும்பப் பராமரிப்பும் அவனுக்குச் சொல்லொணாத துயரங்கள்.

வாழ்வெல்லாம் புயல் வீசிய அந்தச் சூழலிலும் அவன் எழுதிக் குவித்திருக்கிறான். அவன் எழுத்துகள் தமிழுக்குப் புத்துயிரூட்டின. நாட்டு விடுதலை உணர்வினை பாமரர் நெஞ்சங்களில் நெருப்பென மூட்டின. வழிவழியே நீண்டுகிடந்த பழமை உணர்வினில் நல்லனவற்றையும் அல்லாதனவற்றையும் பேதம் பிரித்து உணர்த்தின.

"பழமை பழமை என்று

பாவனை பேசலன்றி

பழமை இருந்த நிலை - கிளியே

பாமரர் ஏதறிவார்..?" - என்று தெளிவுற வினவியவனாயிற்றே அவன்.

பிரிட்டிஷ் சர்க்காரின் கெடுபிடிகளிலிருந்து தப்பவேண்டி பாரதி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தது அவனுக்கு மட்டுமல்லாமல் தமிழுக்கும், தமிழர்க்கும் பயன் மிக்கதாகவே ஆகிப்போனது என்பதே உண்மை.

தமது 39 ஆண்டுகால வாழ்வில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் அவன் பிரஞ்சு ஆளுகைக்குக் கீழிருந்த புதுச்சேரியில் வாழ்ந்திருக்கிறான். அந்தக் காலகட்டத்திலெல்லாம் அவனுடன் முதன்மை நடப்பிலிருந்தவர் பாவேந்தர். இந்தக் கேண்மை தமிழுக்கும் மேன்மை சேர்த்தது உண்மை!

பாரதியாருடனான தமது நட்பின் அனுபவங்களை எழுத்துகளாகவும், சொற்பொழிவுகளாகவும், குறிப்புக்களாகவும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார் பாவேந்தர். அவற்றில் ஒன்றுதான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் வரிகள். அது 'கவிஞர் பேசுகிறார்' - என்னும் தலைப்பில் அன்பு ஆறுமுகம் என்பார் தொகுத்து, திருச்சியிலிருந்து 1947-ல் வெளிவந்தது. அவ்வுரை சென்னை பூம்புகார் பிரசுரம் 1980-ல் வெளியிட்ட 'பாவேந்தர் பேசுகிறார்' எனும் நூலிலும் சேர்க்கப்பட்டது.

அந்த உரையில் பாரதியை அறியாமல் துவேசிப்போரையெல்லாம் பாவேந்தர் கடுமையாகச் சாடுகிறார். வெறும் நட்பிற்காக அல்ல... பாரதியின் முழு தகுதியையும் மொழித் திறனையும் அறிந்தமையால் பிறந்த ஆதரவு நிலை அது. பாரதி தோன்றியது குறித்து பாவேந்தர் இப்படிச் சொல்கிறார்:

"பசி ஏற்பட்டபோது உணவு கிடைத்தது என்று சொல்லும்படியாக தமிழ்நாட்டில் தமிழ் நிலை குன்றியிருக்குங்கால் அறிஞர்கள் எதிர்பார்த்தபடி பாரதியார் தமிழர்களிடையே தோன்றினார்!"

பாருங்கள், பசி உடலையும் உயிரையும் வருத்துகிறபோது அதற்கான ஒரே உபாயம் உணவு ஒன்றே அல்லவா? அதுபோல, தமிழின் நிலை குன்றித் தாழ்ந்துகிடந்தபோது அதனை உய்விக்கப் பிறந்துவந்தவனே பாரதி என்கிறார். அதனால்தான் அவர் "தமிழின் ஆதிகால, இடைக்கால நிலைகள் வெவ்வேறாயிருந்தன. கடைக்கால நிலையும் மாறுபட்டே இருந்தது. ஆனால், கடைக்காலத்தில் தமிழுலகம் பாரதி தேவை தேவை என்று கதறிற்று!" என்கிறார்.

பாரதி தேவை எனத் தமிழுலகம் கதறிற்று என்பது எத்துணை அழுத்தமும் கனமும் கொண்ட சொற்கள். எனில், பாரதியைப் பாவேந்தர் மதித்துப் போற்றியமை எத்துணை உயர்ந்தது, ஈடிணையற்றது என்று எண்ணிப்பார்க்கவேண்டும். பாவேந்தரே சான்றளித்தபின்னும் பாரதியை ஐயுறுவது எதன்பொருட்டு எனும் வினாவையும் எதிர்கொள்ளவேண்டியவராய் நாம் இருக்கிறோம் அல்லவா?

தமது அந்தச் சொற்பொழிவில் பாவேந்தர் மேலும் உரைக்கிறார்:

"ஆங்கிலேயர்கள் ஆண்டுதோறும் இலக்கணத்தை மாற்றியமைக்கின்றனர், இதனால் இலக்கியம் வளருகிறது என்ற செய்தியைக் கேட்கிறோம். இங்கிலீஷ் புத்தகசாலையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் சோப்பு செய்யும் வகை காணப்படுகிறது. தமிழ் புத்தகசாலையில் ஒன்றை எடுத்தால் 'அங்கிங்கெனாதபடி...' என்றுதான் ஆரம்பிக்கும். முந்தி இருந்தது பழைய பதிப்பு. இப்பொழுதிருப்பது புதிய பாக்கெட் சைஸ் பதிப்பு. இவ்வளவுதான் வித்தியாசம். உலகத்தில் வேறு கருத்துக்கள் இல்லையா?"

ஆங்கில எழுத்துலகும், தமிழ் எழுத்துலகும் அடிப்படை வளர்ச்சியில், முன்னேற்றத்தில் எவ்வாறு வேறுபட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்தும் பாவேந்தரின் பாங்கு நோக்கத்தக்கது. கடவுள், விதி என்ற ஒரேவிதமான தேக்கநிலையே அங்கிங்கெனாதபடி இங்கே நிலவியதாய் அவர் குற்றம் சுமத்துகிறார்.

அந்தச் சூழலில் என்ன நிகழ்ந்தது என்பதனையும் அவரே இவ்வாறு விளக்குகிறார்:

"இந்தச் சமயத்தில் யாருக்கும் பயப்படாத - சுதந்திரம் என்றால் என்ன என்பதை எளிய நடையில் சொல்லித்தர ஆள் தேவை. பிறந்தார் பாரதி!" - என்கிறார் கச்சிதமாக! ஒரு தவிர்க்க இயலாத கவிஞனாக பாரதி உயர்ந்து நின்றதை அந்தப் பொழிவில் இப்படிப் படம்பிடிக்கிறார் பாவேந்தர் - இதோ கேளுங்கள்:

"ஜாதி - இது முன்னிருந்ததில்லை, பின்னுமிருக்க வேண்டாம் என்கிறார் பாரதியார். இதற்குமுன் கபிலர் சொன்னார். அவருக்குப் பெரிய ஆசாமிகள்கூடச் சொன்னார்கள். அவைகளெல்லாம் மூலையில் கிடக்கின்றன. ஆனால், பாரதியாருடையதை அப்படித் தூக்கி மூலையில் எறிந்துவிட முடியுமா? மற்றவர்கள் முன்னேறுவதைக் கண்ட தமிழனுக்குப் பசி ஏற்பட்டிருக்கிறதே. இருதயத்தைக் குலுக்கி சுடச்சுடக் கொடுத்தால் மூலையில் போட வருமா?"

ஆக, பாரதியினுடைய படைப்புகள் தமிழனுக்குச் சுடச்சுடப் பரிமாறப்படும் அறுசுவை அமுத விருந்து. அதிலும், அவனின் அடங்காத பசியைத் தீர்க்கவல்ல பெருவிருந்து என்பதே பாவேந்தரின் உள்ளக்கிடக்கை. பாரதியின் எழுத்துக்களைக் குறித்த அவரின் இறுதித் தீர்ப்பு.

பாவேந்தரைப்போன்று ஒரு சாரார் பாரதியின் அருமை உணர்ந்தவர்களாக அவரின் பக்கம் நின்றதுபோலவே மற்றொரு கூட்டம் பாரதியைக் கடுமையாகச் சாடியது. அவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை கிடையாதென ஒரே அடியாக அடித்தது. வேறொரு சாரார் - அவர் பிறந்த அதே சமூகத்தார் அவரின் சீர்திருத்தக் கருத்துக்களுக்காக அவரிடத்தில் துவேஷம் காட்டினார்கள். அந்நியராட்சி தந்த நெருக்கடி, வறுமை இவற்றோடு இவ்வாறான எதிர்ப்புக்களையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்த அவலத்தை என்னவென்பது?

இதோ இது குறித்து பாவேந்தரின் சினம் மிகுந்த சொற்களைக் கேளுங்கள்:

"பாரதியின் கீர்த்தியைத் தொலைத்தார்கள். அவருக்குப் பணம் வராமல் தடுத்தார்கள்; பெரியவரென்போரெல்லாம் எதிர்த்தார்கள்! வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே என்று பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், அதற்கு முன்னாலே இன்னொன்றைச் சேர்ந்ததில்தான் கசப்பு!"

அப்படி எதை பாரதி சேர்த்தாராம்? நாம் அறிந்தவைதானே அந்த வரிகள்! 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' என்றல்லவா தன் சுயஜாதியையே சந்திக்கு இழுத்திருக்கிறான் அவன்! இது அவர்களுக்குக் கசக்கத்தானே செய்திருக்கும். பாவேந்தர் இதனை அம்பலப்படுத்தி, பாரதி சார்பில் வாதிடுகிறார்.

பாரதி பிறந்த அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் பாவேந்தர் உரைப்பதை பார்ப்போம்:

"பாரதி ஜாதியை ஒழிக்கிறான், அனுஷ்டானமற்றவன், ஆச்சாரமற்றவன் என்றெல்லாம் அப்போது தூஷித்தார்கள். அவருடைய மனைவியிடம், எல்லாப் பெண்களும் நகை போட்டிருக்கிறார்களே. உனக்கில்லையே. உன் புருஷனைக் கேள்! என்றெல்லாம் கிளம்பிவிட்டார்கள். இம்சை பொறுக்கமாட்டாமல் தாமே தற்கொலை செய்துகொண்டு விடுவார் என்பது இந்த மடையர்கள் முடிவு. அவர் தெருத்தெருவாக அலைந்தார். எனக்குத் தெரியும். விரிந்த உள்ளமில்லாமல் அவருடைய குலத்தினர் அவரைத் தூஷித்தார்கள். செத்துப்போனபின்னர் பாரதி நாமம் வாழ்க என்கிறார்கள்!"

பாவேந்தர் பாரதிதாசனுடைய கோபம் கொப்பளிக்கும் இந்தச் சொற்களின் வழியே பாரதி பட்ட துயரங்களையும், அதன் காரணங்களாக நின்ற அவனது சரியான நிலைப்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறதல்லவா?

"பாரதிக்கு எல்லா மதமும் ஒன்று. கூடுமானால், மதமே இல்லையென்றாலும் பரவாயில்லை. ஜாதி இல்லையென்பது அவருடைய அகராதியில் தீர்ந்த விஷயம். மூடநம்பிக்கைகளை ஒழித்தவர் பாரதியார். இந்த தேசம் உருப்பட வேண்டும். தமிழர்கள் சுதந்திரத்துக்கு லாயக்கானவர்களாக ஆக்கப்படவேண்டும். தமிழினால்தான் தமிழர்கள் வீரர்களாக முடியும். தமிழ் வளர்ந்தால் தமிழன் உயர்வான்! இதுதான் அவரது மதம்!" - இவ்வாறு அந்தச் சொற்பொழிவின் நிறைவில் பாவேந்தர் பாரதியின் பெருமைகளை அவருக்கே உரிய முறையில் அடுக்குகிறார்.

பாவேந்தர் அன்றே உணர்ந்துகொண்ட பாரதியை அவனது பிறந்தநாளில் நாமும் கற்று, உணர்ந்து போற்றுவோம்!

பாவேந்தர் உணர்ந்துகொண்ட பாரதீ!
உலர்ந்த தமிழன்! - மகாகவி பாரதியார் பிறந்த தின சிறப்பு பகிர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in