அண்ணாவின் பார்வையும், சீமானின் நோக்கமும்!

அண்ணாவின் பார்வையும், சீமானின் நோக்கமும்!
Updated on
3 min read

“எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான், இங்கிருந்தாலும் அயலான் அயலான்தான்” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் இங்குள்ள மற்ற மொழிகள் பேசுவோருக்கிடையே அதிகாரப் பகிர்வு குறித்து இந்த கோஷம் எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழும் மற்ற மொழி பேசுவோருக்கு என்ன உரிமை என்பது பற்றி முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் கருத்தை ஆராய முற்பட்டேன்.

அறிஞர் அண்ணா என்று அறியப்படும், நினைவுகூரப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை மறைந்து கிட்டதட்ட 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது தொடர்பாக அண்ணா பொது வாழ்க்கையை துவங்கிய திராவிடர் கழகம், அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு இயக்கங்களின் பெயர்களில் இருக்கும் வேறுபாட்டுக்கான காரணங்களை ஆராய்ந்தபோது கிடைத்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கட்டுரைக்குள் போவதற்கு முன் ஒரு முன்னறிவிப்பைச் செய்து கொள்கிறேன். திராவிட இயக்கங்கள் பற்றி ஆராய முற்பட்டபோது எனக்கு அண்ணா மீது பெரிய அபிப்பிராயம் இல்லை. பிறகு உள்ளே இறங்க இறங்க அவருடைய ஜனநாயகத் தன்மை, அரவணைக்கும் பாங்கு, குறிப்பாக அவருடைய மூன்றாவது இன்னிங்ஸில் கழகத்தை இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்படி வினையாற்றியது ஆகியவை என்னைக் கவர்ந்தவை. இனி அண்ணாவின் பார்வை.

பெரியார் ஈவெரா-வின் தளபதியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அண்ணா, பல்லாண்டுகளுக்குப் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகி இருந்தார். இந்தக் கட்டத்தில் ஈவெரா மணியம்மையை திருமணம் செய்துகொண்டது கழகத்தவருக்கிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. அண்ணாவும் தம்பிகளும் பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகம் என்கிற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.

இன்றைய மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திகவுக்கும் திமுகவுக்கும் சுமுகமான உறவு இருக்கிறது. பெரியார் திடலை சொந்தம் கொள்வதில் திமுகவினருக்கு ஒரு ருசி இருக்கிறது. ஆனால் இது எப்போதும் இது போலவே இருந்ததில்லை. இந்த உறவில் நட்பு, முறிவு பகைமை என்பவை மாறி மாறி வந்திருக்கின்றன.

திமுக என்கிற அரசியல் கட்சி உருவானது செப்டம்பர் 18, 1949. வடசென்னையில் இருக்கும் ராபின்சன் பூங்கா தான் களம். மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்கியது என்றும் அதில் இன்னார் கலந்து கொண்டனர் என்பது பற்றியும் ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதுகிறார். அதுமட்டுமல்ல, அதே நாளில் காலையில் சென்னை பவழக்காரத் தெருவில் கூடிய பொதுக்குழுவில் கட்சியின் பெயர் தீர்மானிக்கப்பட்டது என்கிறார் அவர்.

“புதிய கழகத்தின் பொதுச் செயலாளராக அண்ணா இருந்து வழிநடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு குழு கேட்டுக்கொண்டது. தவிரவும், நூற்றுப்பதின்மர் கொண்ட பொதுக்குழு உருவாக்கப்பட்டது. அந்தப் பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து பிரச்சாரக் குழு, அமைப்புக்குழு, நிதிக்குழு ஆகியன உருவாக்கப்பட்டன.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் சட்டென்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்ட பெயர் அல்ல. தனது ஆதரவாளர்கள், முக்கிய தலைவர்கள் பலருடனும் ஆலோசனை செய்து அண்ணா தேர்ந்தெடுத்த பெயர்தான் திராவிட முன்னேற்ற கழகம். அந்தப் பெயருக்கு முன்னால் தமிழ்நாடு சோசியலிஸ்ட் கட்சி, திராவிட சோஷலிஸ்டுக் கழகம், திராவிட சமதர்மக் கழகம், திராவிட சமுதாய கழகம், திராவிட தீவிரவாதிகள் கழகம் என்று பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

Dravidian Forward Block, Dravidian progressive Federation, Dravidian Vanguard Party என்று ஆங்கிலத்திலும் உச்சரித்துப் பார்க்கப்பட்டன. இறுதியில் Dravidian progressive Federation என்ற அர்த்தம் வரும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. அதுதான் நிர்வாகக் கமிட்டியில் முறைப்படி அறிவிக்கப்பட்டது. கட்சியின் பெயரில் ‘திராவிடர்’ என்ற பதத்தை பயன்படுத்தாமல் திராவிட என்ற பதத்தைப் பயன்படுத்தினார் அண்ணா. அதற்கு அவர் கொடுத்த விளக்கம் இதுதான்:

திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று கூறும்போது அதில் திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு காலப்போக்குக்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை. நம்முடைய கட்சியின் லட்சியம் திராவிட நாட்டைச் செழுமையான பூமியாக பேணிக் காப்பதாகும். அத்தகைய திராவிட மண்ணில் திராவிடர்கள் மட்டும் வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும். முடியாத செயலும் ஆகும்.

இந்த மண்ணுக்கு நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்ளும் எந்த இனத்தவரும் இன்னலின்றி இன்ப வாழ்வு வாழ பணியாற்றுவதே நம் கட்சியின் லட்சியமாக இருக்க வேண்டும். இங்கே திராவிடமும் வாழலாம்; ஆரியமும் வாழலாம். ஆர் முத்துக்குமார் மட்டுமல்ல, இன்னொருவரும் இந்தத் திராவிடர், திராவிட வேறுபாடு குறித்துப் பதிவு செய்கிறார். அவரை நாள்தோறும் தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கலாம். அவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன்.

திராவிட மண்ணில் திராவிடர்கள் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும் முடியாத செயலும் ஆகும். எந்த இனத்தவரும் இன்னலின்றி இன்ப வாழ்வு வாழ பணியாற்றுவதே நம் கட்சியின் லட்சியமாய் இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வுகள் குறித்து அ.மறைமலையான் எழுதுகிறார்:

சென்னை பழவக்கார தெரு 7-ஆம் எண்ணில் உள்ள இல்லத்தில் திராவிடர் கழக செயற்குழு உறுப்பினர்கள் கூடினார்கள். அந்தக் கூட்டத்தில் ஓர் அறிக்கையை அண்ணா எழுதிக் கொணர்ந்து படித்தே காட்டினார். அவர்கள் இரு கழகங்களின் பெயர்களுக்குரிய பொருளைப் பற்றி சர்ச்சையை அண்ணாவிடமே எழுப்பினர்.

திராவிடர் முன்னேற்ற கழகம் என்பதைவிட திராவிட முன்னேற்ற கழகம் என்று நம் கட்சிக்கு பெயர் இருப்பதே எல்லா வகையிலும் பொருந்தும் என்பது என் தாழ்மையான எண்ணம். இது மட்டுமல்ல பல இடங்களில் அண்ணாவின் பரந்த நோக்கு வெளிப்படுகிறது இதைப்பற்றி அ. மறைமலையான் எழுதுகிறார். மாநிலங்கள் அவையில் அண்ணாவின் கன்னி உரை இப்படித்தான் துவங்கியது.

"Am reminded sir of the sayings of the sankrit pandits of my hometown kanchivaram yatha raja thatha praja".

சாதாரணமாக தமிழில் இருந்தும் ஆங்கிலத்தில் இருந்தும் பொன்மொழிகளை மேற்கோள் காட்டித்தான் அண்ணா பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்த முதல் சொற்பொழிவு அவரால் வடமொழியில் இருந்தும் பொன்மொழிகளை மேற்கோள் காட்டமுடியும் என்பதை எடுத்தியம்பியது. 01.05.1962.

அண்ணா தனது கன்னிப் பேச்சில் Dravidian stock என்ற பதத்தை பயன்படுத்துகிறார். இன்றைய தமிழக அரசியல் சூழலில் இந்த வார்த்தைகளுக்கு பொருள் வேறு தொனியில் இருக்கிறது. இது மத்திய அரசுக்கு எதிரான குரலாகவே தென்படுகிறது. ஆனால் அந்த உரையில் இந்த பதத்தைப் பயன்படுத்திய அண்ணா not necessarily antogonastic என்றும் சொல்லி இருக்கிறார். இன்றைய ஸ்டாலின் அரசின் மோதல் போக்கில் அண்ணாவின் வார்த்தைகள் அர்த்தமில்லாமல் போய்விட்டன.

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற சுயசரிதையில் இந்த ‘ர்’ பிரச்சினை பற்றி குறிப்பிடவில்லை. இன மோதல்களை தவிர்க்க வேண்டும் என்ற அண்ணாவின் கருத்தை மு.கருணாநிதி பதியவில்லை. இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு அரசியல் இயக்கத்தை வெகு ஜனங்களின் ஆதரவோடு நடத்த வேண்டும் என்பதே அண்ணாவின் செயல் திட்டமாக இருந்தது. இதற்கும் ஒன்றிய அரசு என்று சொல்லி உரசிப் பார்க்கும் திமுகவின் நிலைப்பாட்டிற்கும் நிறைய இடைவெளி உள்ளது.

சிலை வைப்பதை விட்டுவிட்டு சீரிய கொள்கைகளை அனைவருக்கும் நலன்பயக்கும் திட்டங்களை உருவாக்கினால் அதை அண்ணாவின் அரசு என்று சொல்லிக் கொள்ளலாம்.

சீமானின் நோக்கம் - இன்னும் வலிமை பெறவில்லை. வந்த பிறகு பார்ப்போம்.

- சுப்பு (கட்டுரையாளர்)

| உறுதுணை புத்தகக் குறிப்புகள்: திராவிட இயக்க வரலாறு (பக்கம் 222) - ஆர்.முத்துக்குமார், கிழக்குப் பதிப்பகம் | திமுக பிறந்தது எப்படி (பக்கம் 119,120) - அருணன். வசந்தம் வெளியிட்டகம் | பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு (பக்கம் 249) - அ.மறைமலையான், வானதி பதிப்பகம் |

அண்ணாவின் பார்வையும், சீமானின் நோக்கமும்!
வாக்குப்பதிவின் வரலாறு | சொல்... பொருள்... தெளிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in