ரோலண்ட் ஹில் 10

ரோலண்ட் ஹில்  10
Updated on
2 min read

தபால் துறையை சீரமைத்தவர்

தபால் துறையை சீரமைத்த இங்கிலாந்து ஆசிரியர் ரோலண்ட் ஹில் (Rowland Hill) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

இங்கிலாந்தின் கிடர்மின்ஸ்டர் நகரில், நன்கு கற்றறிந்த கூட்டுக் குடும்பத்தில் (1795) பிறந்தார். தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். 12 வயதிலேயே மற்ற மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவுக்கு அறிவாற்றலுடன் திகழ்ந்தார்.

* தந்தைக்குப் பிறகு, சகோதரர்க ளுடன் சேர்ந்து அவரது பள்ளியை நடத்தினார். பள்ளியில் கைவினைப் பயிற்சி, உடற்பயிற்சிக் கூடங்கள், நூலகம், ஆய்வகம், உணவகம், படிக்க அறைகள், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம் என பலவிதமான வசதிகளையும் ஏற்படுத்தினார்.

* படைப்பாற்றல், பேச்சாற்றல், புவியியல், வரலாறு, கணிதம், பிரெஞ்ச், இத்தாலி, லத்தீன், கிரேக்க மொழிகள், கலை, இசை, மரவேலை, உலோக வேலை, அறிவியல், நடைமுறை கணிதம், வானியல் உள்ளிட்ட அனைத்தும் அங்கு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன. கல்விச் சுற்றுலாவுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

* 25 வயதிலேயே அசாதாரண நிர்வாகத் திறனுடனும், கட்டுக்கோப்பாகவும் பள்ளியை நடத்தினார். நாடு வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக, தனது பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக அளவிலான கணிதம், அறிவியலைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து 1833-ல் விலகி, சிலகாலம் எழுதிவந்தார். அண்ணனுடன் சேர்ந்து ரோட்டரி பிரின்டிங் பிரஸ் இயந்திரத்தை உருவாக்கினார்.

* சிறுவனாக இவர் இருந்தபோது, தபால்களைப் பெறுபவர்கள்தான் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை இருந்தது. வீட்டுக்கு தபால் வரும் நேரத்தில் பணம் இருக்காது. உடனே, வீட்டில் இருக்கும் பழைய துணிகளை அருகே உள்ள நகரில் விற்றுவிட்டு பணம் கொண்டுவருமாறு சிறுவன் ஹில்லை அனுப்புவார்கள். இந்த அனுபவம்தான் தபால்துறை சீர்திருத்த யோசனையை இவருக்குள் விதைத்ததாகக் கூறப்படுகிறது.

* தபால் துறை சீரமைப்பில் பலரும் ஆர்வத்தோடு இருப்பதை அறிந்தார். அவர்கள் எழுதிய கட்டுரைகள், பிரசுரங்கள், நூல்களை அலசி, ஆராய்ந்து, ‘போஸ்ட் ஆபீஸ் ரிஃபார்ம்: இட்ஸ் இம்பார்டன்ஸ் அண்ட் பிராக்டிகபிலிட்டி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி, 4 தொகுதிகளாக வெளியிட்டார்.

* இவரது புதுமையான, புள்ளிவிவர அடிப்படையிலான யோசனைகள், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. நாளிதழ்களும் வரவேற்றன. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரேமாதிரியான ‘ஃபோர் பென்னி போஸ்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.

* இதன்படி, பணம் கொடுத்து ஸ்டாம்ப் வாங்கி, தபாலில் ஒட்டும் பழக்கம் 1839-ல் நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தி தபாலைப் பெறும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவந்து, ஏழை எளியவர்களும் தபால் சேவையை பெறச் செய்தார். முதல் தபால்தலைகள் 1840-ல் விற்பனைக்கு வந்தன.

* லண்டன் பிரைட்டன் ரயில்வே இயக்குநராகவும், பின்னர் அதன் தலைமைப் பொறுப்பிலும் பணியாற்றினார். ரயில்வேயிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1846-ல் மீண்டும் தலைமை தபால் அதிகாரியின் செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை தபால் துறையில் பல மாற்றங்களைச் செய்தார்.

* பணியாற்றிய அனைத்து துறைகளிலும், தனது தனித்துவம் வாய்ந்த அறிவாற்றலால், பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். எப்போதும் பாமர மக்கள் மீதான அக்கறையுடன் மனித குலத்துக்கு சேவை செய்த ரோலண்ட் ஹில் 84-வது வயதில் (1879) மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in