

கடந்தவாரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது சென்னையே அதிர்ந்தது. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதுதான் அதில் ஆறுதல். தமிழக காவல்துறையும் அதற்கு ஒரு காரணம் என்கிறது சென்னை. ஒரு குரல், சில குரல் அல்ல, திரை நட்சத்திரங்களிலிருந்து நேரில் பார்த்த பத்திரிகையாளர்களிலிருந்து பொதுமக்கள் வரை பலரும் காவல்துறையினரின் பணி சிறப்பு என்கின்றனர்...
அந்த கூட்டுமனநிலைகளின் பிரதிநிதிகளாய் 'தி 6 டாட் இன்' அமைப்பினர் காவலர்களை நேரில் சந்தித்து பாராட்டிய வீடியோ முகநூல், வாட்ஸ்அப் என பரவிக்கொண்டிருக்கிறது...
ஏதாவது ஒன்று என்றால் போலீஸ்காரர்கள்தான் காரணம் என்று விரல்களை சுட்டும் நாம், வெயில், மழை என நேரம் காலமில்லாமல் புரியும் சேவை அவர்களுடையது என்பதை பலநேரங்களில் ஏனோ மறந்துவிடுகிறோம். புயல்பாதிப்புக்கு மறுநாள் செவ்வாய் அன்றுகூட சென்னையின் சாலைகளில் எங்கும் விழுந்துகிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
போலீஸ், போக்குவரத்து ஊழியர்கள், பத்திரிகை ஊழியர்கள், ஆவின் ஊழியர்கள் என பலரின் சேவைகளையும் குறிப்பிடும்போது அது அவர்கள் கடமை இதில் பாராட்ட என்ன இருக்கிறது என்று சொல்பவர்கள்தான் அதிகம். ஆனால் சிறுகுழந்தையைக் கூட அடுத்த அடிஎடுத்துவைக்க ஒரு பாராட்டைக் கொடுத்துதான் பெறவேண்டியுள்ளது. நாம் பெற்ற குழந்தையின் வளர்ச்சிக்கே பாராட்டு ஒரு பூங்கொத்து!
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று நமக்காக அல்லும்பகலும் உழைக்கும் காவலர்களை பாராட்டுவதில் நமக்கு தயக்கம் அதிகம். இந்த விஷயத்தில் காவலர்களைப் பாராட்டுவதில் முந்திக்கொண்டு விட்டனர் 'தி 6 டாட் இன்' அமைப்பினர்!
'தி 6 டாட் இன்' அமைப்பினரின் ஷொட்டு கிடைத்து மகிழ்வில் திளைத்தவர்கள் நிறைய. பள்ளி மாணவர்கள், வெளிநாட்டு வேலைநிமித்தம் சென்ற பிரிந்த மகளை பிரிந்த பெற்றோர், காதலர்கள் என பலவகையினரை இவர்கள் பிறந்தநாள், பண்டிகை என முக்கிய தினங்களில் அவர்களே எதிர்பார்க்காத வேளையில் திடீரென சென்று வியப்பில் ஆழ்த்துகின்றனர்... இங்கு குறிப்பிட்டுள்ள 'Keep Calm & Respect Police' எனும் இரண்டேகால் நிமிட வீடியோவும் அத்தகையதுதான். கடுகடுப்பான அந்த காக்கிச் சட்டைகள் பாராட்டும் இதயங்களைக் கண்டு, ஒரு முள்ளில்ரோஜாவாக புன்னகை பூப்பதை நீங்களும் பாருங்களேன்....
</p>