

சார்பு நிலைகள் கொண்டிராத, ஊடகத் தர்மத்தின் வழியில் நம்பத்தகுந்த செய்திகளை மக்களுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தருகிறது. காலையில் நாளிதழைக் கையில் எடுத்ததுமே சில பக்கங்களைக் கடந்து நடுப்பக்கத்தைத்தான் முதலில் வாசிப்பேன். பல்துறை சார்ந்த அறிஞர்களின் காத்திரமான கட்டுரைகள், தலையங்கம் என அமர்க்களமான பகுதியாக இது இருக்கும். நடுப்பக்கக் கட்டுரைகள் ஒலி வடிவிலும் கேட்கக் கிடைப்பது புதுமை மட்டுமல்ல முன்னோடி முயற்சியும்கூட! சிறுவர்கள், பெண்கள், எழுத்தாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான கட்டுரைகளைக் கிழமைவாரியாக வெளியிடுவது மிகவும் பயன்தருகிறது. - எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ்,
தமிழகக் காவல்துறை முன்னாள் தலைவர்
சிற்றிதழ்கள் மட்டுமே பேசிய சமூகப் பிரச்சினைகளைப் பொது வாசகரும் அறியும் வகையில் தந்ததில் ’இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு முக்கியப் பங்குண்டு. இதுவரை பெண்களுக்காக வெளிவந்த இதழ்களில் தனித்துவமானது ’பெண் இன்று’ இணைப்பிதழ். பெண்கள் குறித்த பிரச்சினைகளை எவ்விதச் சமரசமும் இல்லாமல் வெளியிடுவது பாராட்டுக்குரியது. பெரியார், அண்ணா, மாநில உரிமைகள், மொழிப் பிரச்சினை போன்றவை குறித்த பார்வையும் கோணமும் வரவேற்கத்தக்கது. - ஓவியா, பெரியாரியலாளர், ‘புதிய குரல்’ அமைப்பின் நிறுவனர்
அரசியல் சூழலும் ஊடகச் சூழலும் மாறிவரும் வேளையில் தொடங்கப்பட்ட அச்சு ஊடகமான ‘இந்து தமிழ் திசை’ பல்வேறு தடைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறது. குறிப்பாக நடுத்தர மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நாளிதழாக இருக்கிறது. அரசியல், வரலாறு, ஆளுமைகள் போன்றவற்றுடன் இடது சாரி, வலது சாரி சிந்தனைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்பதற்காக மதச்சார்பின்மையை வலியுறுத்தி சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை போன்றவற்றை இந்த நாளிதழ் எதிர்காலத்துக்குக் கொண்டுசேர்க்க வேண்டும். - பாலபாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
பொதுவாக நன்கு அறிமுகமானவர்களை மட்டுமே திரும்பத் திரும்ப எழுதச் சொல்லும் சூழலில் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பளித்து, அவர்களது அனுபவ அறிவு பலரையும் சென்றடையச் செய்ததில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்குப் பெரிய பங்குண்டு. பொதுமக்களை அதிகமாகச் சென்றடைகிற ’இந்து தமிழ் திசை’ வெளியீடு சார்பாகப் பெண்கள், சிறார் நூல்களில் கவனம் செலுத்தினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இணைப்பிதழ்களின் பக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. அதனால், பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் இணைப்பிதழ்கள் பழையபடி அதிக பக்கங்களோடு வெளியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். - மா (பத்மா), எழுத்தாளர், பெண்ணியச் செயற்பாட்டாளர்
அரசியல் நையாண்டியைக்கூட யாரும் முகம் சுளிக்காத வகையில் கண்ணியத்துடன் வெளிப்படுத்தும் நடுப்பக்கக் கட்டுரைகள், ஒரு செய்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்று. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கும் உதவும் வகையில் வெளியிடப்படும் வினா - விடை தொகுப்பு பயனுள்ளது. உலகம் நினைவில் கொள்ள மறந்துவிட்ட பெரும் தலைவர்களைப் பற்றி அவர்களது பிறந்தநாளிலோ நினைவுநாளிலோ எழுதுவதை இந்த நாளிதழின் தனித்தன்மையாகப் பார்க்கிறேன். - பாரததேவி, எழுத்தாளர்
ஒரு செய்தியை வெறும் தகவலாக மட்டும் சொல்லாமல் இந்திய அரசமைப்புச் சாசனத்தின் விழுமியங்களின் அடிப்படையில் சரியான கண்ணோட்டத்துடன் சொல்வதால்தான் ’இந்து தமிழ் திசை’ நாளிதழ் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளது. ஒரு செய்தியை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சாமானியருக்கும் புரியும் வகையில் கட்டுரைகளை வெளியிடுவது சிறப்பு. பெண்களின் உரிமையை, சமத்துவத்தை, அவர்கள் அடைய வேண்டிய வாழ்வுரிமையைப் பிற பெண்கள் பத்திரிகைகளிலிருந்து மாறுபட்டுச் சொல்வதும் முக்கியமானது. - ப.சு. அஜிதா, வழக்கறிஞர்