Published : 16 Sep 2022 04:19 AM
Last Updated : 16 Sep 2022 04:19 AM

10-ம் ஆண்டில் ‘இந்து தமிழ் திசை’ - பத்தியாளர்கள் பார்வையில்...

பா. ராகவன்

‘இந்து தமிழ் திசை’யில் வெளிவந்த முதல் பத்தியை (column) முதல் நாள் தொடங்கி எழுதியவன் என்பது எப்போதும் எனக்குள்ள மகிழ்ச்சி. காத்திரமான நடுப்பக்கக் கட்டுரைகள், லயம் பிசகாத மொழிபெயர்ப்புகள், நவீன இலக்கியம் சார்ந்த உள்ளார்ந்த அக்கறை, இளைஞர்கள்-சிறுவர்களுக்கான தனிப் பகுதி என்று ‘இந்து தமிழ் திசை’யைப் பாராட்டவும் வாழ்த்தவும் எனக்குப் பல காரணங்கள் உண்டு. ‘இந்து தமிழ் திசை’, ’மக்களின் பத்திரிகை’யாக என்றும் திகழவேண்டும் என்பதே என் விருப்பம். - பா. ராகவன், ஆசிரியர், மெட்ராஸ்பேப்பர்.காம்

மருதன்

அரசியல் நடப்புகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் ‘இந்து தமிழ் திசை’ அளித்துவருவது தனித்துவமானது. நடுப்பக்கக் கட்டுரைகளும் இணைப்பிதழ்களும் மேலும் விரிவடையும், மேலும் செழுமையடையும் என்று நம்புகிறேன். விவாதங்களைக் கவனப்படுத்தும் இடத்திலிருந்து விவாதங்களை உண்டாக்கும் நிலைக்கும் உரையாடல்களை வளர்த்தெடுக்கும் நிலைக்கும் இதழ் விரைவில் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு கட்டுரையாசிரியராக ‘இந்து தமிழ் திசை’யோடு தொடர்ந்து சில ஆண்டுகளாகப் பணியாற்றுவதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். - மருதன், ஆசிரியர், கிழக்கு பதிப்பகம்

த.வி. வெங்கடேஸ்வரன்

அறிவியல், சமூகம், வரலாறு, இலக்கியம், உடல்நலம் என மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு துறைசார் செய்திகளைக் குறித்துக் கவனம் செலுத்தும் ஒருசில நாளிதழ்களில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ஒன்று. இணைப்பு இதழ்களான ‘வெற்றிக்கொடி’, ’மாயா பஜார்’ ஆகியவற்றில் தொடர்ந்து நான் எழுதிய அறிவியல் கட்டுரைகளுக்கு வரும் மின்னஞ்சல்கள் மூலம் பரவலான வாசகர்களின் கவனத்தை இந்த நாளிதழ் பெற்றிருப்பது தெளிவாகியது. ‘இந்து தமிழ் திசை’ மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்! - த.வி. வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி

தஞ்சாவூர்க் கவிராயர்

இந்து தமிழ் திசை பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி தருகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகில் எந்த நாளேடும் செய்யாத புதுமையை இந்து தமிழ் திசை செய்திருக்கிறது. அதன் கட்டுரைகள் தமிழ்கூறு நல்லுலகின் குரலாகவே ஒலித்து வருகின்றன. தமிழக இளைஞர்கள் தங்கள் கையில் இந்து தமிழ் நாளேடு இருப்பதை அறிவின் அடையாளமாகக் கருதினார்கள். ஆனந்தஜோதி இணைப்பிதழ் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஆன்மிகத் தேடலுக்குத் துணை நிற்கிறது. அதில் எழுதியதால் நான் பெருமை பெற்றேன். - தஞ்சாவூர்க் கவிராயர், எழுத்தாளர்

இ. ஹேமபிரபா

அறிவியலின் முழுப்பயனைப் பெறவும், போலி அறிவியலிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், அறிவியல் மாற்றங்களையும், அவற்றின் சாதக பாதகங்களையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆதாரப்பூர்வமாகவும், தரவுகளுடனும் கூடிய அறிவியல் கட்டுரைகளை வாசகர்களுக்குத் தருவதன் மூலம் ‘இந்து தமிழ் திசை’ இப்பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறது. இத்தகைய தகவல்கள் பொதுமக்கள் மட்டுமன்றி பள்ளி/கல்லூரி மாணாவர்களுக்கும் பயனுள்ளதாக இருப்பது கண்கூடு. - இ. ஹேமபிரபா, அறிவியல் எழுத்தாளர்

நாராயணி சுப்ரமணியன்

தமிழ் நாளிதழ் ஒன்றில் வாராவாரம் சுற்றுச்சூழலுக்கான இணைப்பிதழ் ஒன்று வருவதே பாராட்டத்தக்கது. ஆழமான விவாதங்கள், களப்பணி அனுபவங்கள், உயிரினங்கள், முக்கிய ஆளுமைகள் பற்றிய விரிவான கட்டுரைகள், நூல் அறிமுகம், விமர்சனம், நேர்காணல்கள், சூழலியல் தொடர்கள் என இத்துறையின் பல்வேறு நுண் பரிமாணங்களில் உயிர்மூச்சு இதழ் தொடர்ந்து பயணித்துவருகிறது. சமகால சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் எந்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்பதை உயிர்மூச்சு இதழ் கட்டுரைகளின் வழியே வாசகர்களால் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். - நாராயணி சுப்ரமணியன், அறிவியல் எழுத்தாளர்

சைபர் சிம்மன்

தமிழின் நீண்ட நெடிய இதழியல் பாரம்பரியத்தின் நவீனத் தொடர்ச்சியாக அமைந்துள்ள இந்து தமிழ் திசை நாளிதழ், செய்திகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குவதோடு, நடுப்பக்க கட்டுரைகள், சிறப்பிதழ்கள் மூலம் வாசகர்களையும், வல்லுநர்களையும் ஒரு சேரக் கவர்ந்துள்ளது. நாளிதழின் சிறப்புக் கட்டுரைகள், சமூக அக்கறையை பிரதிபலிப்பதோடு, நவீனப் போக்குகளையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளன. திரைப்படம் தொடங்கி தொழில்நுட்பம் வரை எண்ணற்ற பிரிவுகளில் ஆழமான கட்டுரைகளைச் சுவாரசியமாக வழங்கிவருகிறது. - சைபர் சிம்மன், எழுத்தாளர்

டாக்டர் கு.கணேசன்

அரசியல், அறிவியல், பொருளாதாரம், வணிகம், திரைத்துறை, மருத்துவம், பெண்ணியம், இலக்கியம் என வாசகர்களுக்குத் தேவையான எல்லாக் களங்களிலும் அறிவுத் தகவல்களைத் தருவது இந்து தமிழ் திசையின் தனிச்சிறப்பு. அதில் மருத்துவம் தொடர்பாக எழுதும் ஒரு பங்கேற்பாளனாக என்னையும் இணைத்துக்கொண்டது. கரோனா விழிப்புணர்வுக்காக இந்து தமிழ் திசையில் நான் மட்டும் 70க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினேன், மற்ற எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் செய்யாத சாதனை இது. ஒரு வாசகனாக இந்தப் புது வருடத்தில் பல புதிய பகுதிகளை எதிர்பார்க்கிறேன். - டாக்டர் கு.கணேசன், எழுத்தாளர்

ஜி.எஸ்.எஸ்.

நாளிதழ் உலகில் தன் பங்களிப்பை சத்தமில்லாமல் அழுத்தமாகப் பதித்து வருகிறது ‘இந்து தமிழ்’. அது தொடங்கியதிலிருந்தே தொடங்கிவிட்டன எனது பங்களிப்புகளும். ஆசிரியரும் ஆசிரியர் குழுவில் உள்ள மிகப் பெரும்பான்மையானவர்களும் என் படைப்புகளுக்கு அளித்த சுதந்திரமும் கொடுத்து வரும் ஊக்கமும் மறக்க முடியாதவை, நன்றிக்குரியவை. அதிக எண்ணிக்கையில் பலதரப்பட்ட தொடர்களை எழுதும் வாய்ப்பு எனக்கு ‘இந்து தமி’ழில் வழங்கப்பட்டது. குறிப்பாக, நகைச்சுவை, ஒளிப்படங்கள், கார்ட்டூன் ஆகியவை உள்ளிட்ட வடிவில் புதிய முயற்சியாக வெளிவரத் தொடங்கிய எனது ‘ஆங்கிலம் அறிவோமே’ பகுதி வாசகர்களின் பெரும் வரவேற்பு காரணமாக ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடர்ந்து 280 வாரங்கள் இடம்பெற்றது. - ஜி.எஸ்.எஸ்., எழுத்தாளர்

கு.சிவராமன், மருத்துவர்

காலையில் மொத்த உலகின் நிகழ்வுகளை, மனதோடு பேசும் நாளிதழாய் ‘இந்து தமிழ் திசை’ ஒட்டிப்போய் பத்து ஆண்டுகளாகிவிட்டன. உலகின் தலைசிறந்த ஆங்கில நாளிதழ்கள் போல் அரசை, அரசியலை, சமூகத்தை அலசும் கட்டுரைகளாகக் கோக்கப்படுவதும், நலவாழ்வு, சூழலியல், இலக்கியம், நூல் வாசிப்பு, உழவு, பெண் நலம் எனக் காய்ப்பு உவப்பின்றி உரக்கப்பேசும் தமிழ் இந்துவின் குரல் சாமானியனின் போக்கைச் சீராக்குகின்றன; மேம்படுத்துகின்றன. அறம் சேர்த்து அச்சுக்கோக்கும் உங்கள் பணிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்! - கு.சிவராமன், மருத்துவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x