

ஒரு நடிகனுக்கும் ஒரு நடிகைக்கும் ரசிகனாக இருப்பது எந்த வகையில் சரியானது என்கிற அற எழுச்சி சார்ந்த குரல்களும் நம் தமிழகத்தில் இருக்கின்றன. ஏனெனில், இங்கே மதங்கள் இருக்கின்றன; குருபீடங்கள் இருக்கின்றன. கலையை, குறிப்பாக சினிமாவை விரும்பாத அறிவு ஜீவிகளும் நன்னடத்தைக்காரர்களும் இங்கே இருப்ப தால் இந்தக் கேள்வியும் துடிப்பாகவே இருக்கிறது.
கலையுலகத்தோடும் இலக்கிய உலகத்தோடும் கொஞ்சமேனும் பரிச்சயம் வந்துவிட்டாலே எங்கேயோ ஓரிடத்தில் ஒருவர் ரசிகராக இருந்துதான் தீர வேண்டும். அதன் தொழில் தர்மம் அப்படி. எனவே, அந்தத் தூய்மைவாதிகள் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லையென்று கூறித் தம்மை ரசிப்புத்தன்மையிலிருந்து உதிர்த்துக்கொள்ள வேண்டாம். வேண்டுமானால், இந்த இடத்திலிருந்து விலகிச் சென்றுவிடட்டும். நாம் நடிப்புக்கும் எழுத்துக்கும் ரசிகர்களாக இருக்கிறோம் என்பது நம் மனதின் உணர்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் பொறுத்த விஷயமாக இருக்கிறது.
ரசிகர்கள் பலவிதம்
நாங்களும் ரசிகர்களாகத்தான் இருந்தோம். அதன் படிநிலை என்ன அல்லது எதுவரை என்று உணர்ந்தும் இருந்தோம். அதற்காக சத்யஜித் ராய், அகிரா குரசோவா என்று பட்டுப் பீதாம்பரத்தை விரித்துக்கொள்ள முடியாது. நமக்குப் பார்க்கவும் படிக்கவும் கேட்கவும் கிடைத்த வாய்ப்புகளிலிருந்து நாம் பெற்றுக்கொண்டதைப் பேசினால் போதும். டூரிங் தியேட்டர்களிலும், காற்றாடிய மழைத்தூறல் விழுந்த சினிமா திரையரங்கங்களிலும் எங்களுடைய கதாநாயக, நாயகியர்களைக் கண்டெடுத்தோம். அவர்கள், ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்று ஆடிப் பாடித் திரிந்தவர்களாகவோ, ‘பாலூட்டி வளர்த்த கிளி’ என்று கண்கலங்கியவர்களாகவோ வந்து ரசிக மனங்களில் குடிபுகுந்தவர்கள்; ‘உடலும் உள்ளமும் நலம்தானா’ என்று நம் நேர்நின்று அக்கறையாக விசாரித்தவர்கள். ஒரு கை மணலெடுத்து அதிலே பூக்களை வரைந்து பார்த்த இந்த இனிமையே போதும். ஆனால், ஒரு எல்லைக்கோடு இருந்தது. சிவாஜி கணேசனின் ரசிகர்கள் சற்றுக் குடும்பப் பாங்கான உணர்வுகளோடு திரையரங்குக்கு வந்தவர்கள். அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பெரிய அதிகாரிகள் வெள்ளை வேட்டி, பட்டுப்புடவைகள் சரசரக்க… தத்தம் குடும்ப உறுப்பினர்களோடு நாற்காலி, சோஃபாக்களில் உட்கார்ந்து விம்மிப் புடைத்த நெஞ்சோடு வீடு திரும்பியவர்கள் என்ற வகைக்குள் இவர்களை அடக்கிவிடலாம்.
எம்.ஜி.ஆர். படத்துக்கு இந்த இலக்கணம் பொருந்தவில்லை. வியர்வை வடியும் உடம்போடும் அழுக்கு உடைகளோடும் வரிசையிலேயே நெருக்கிநிற்கும் அளவில், சமூக - அரசியல் உணர்வுகளோடு வந்தவர்கள். புரையோடிய தீமைகளுக்கு எதிராக எம்.ஜி.ஆரோடு தாங்களும் அவருடைய வில்லன்களுக்கு எதிராகப் போர்புரிந்து, அதற்காக விசிலடித்துவிட்டும் வீடு திரும்பியவர்கள். அதனால், குடும்பத்தோடு ஆறஅமரப் படம் பார்க்கும் கொடுப்பினையைத் தவறவிட்டவர்கள். ஆனாலும், குறைபாடற்ற ரசிப்புத்தன்மை ஒவ்வொரு ரசிகருக்கும் இருந்தது. அடுத்தடுத்த கதாநாயகப் படங்களையும் ரசித்தவர்கள். குறிப்பாக, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிவாஜி கணேசனின் படங்களையும் பார்த்து மனம் கசிந்திருக்கிறார்கள். அந்த ரசிப்புத்தன்மை கலையின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தது.
நினைவில் ஒளிரும் நட்சத்திரங்கள்
45 வயதுக்கு மேற்பட்ட மாண்புமிகு தமிழக மக்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, சாவித்திரி, பத்மினி, சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், கே.ஆர். விஜயா என்ற நீண்ட பட்டியலின் கீழே ரசிகர்களாக இடம்பிடித்தவர்கள். ஒவ்வொருவரையும் வெவ்வேறு கலைநுட்பங்கள் இழுத்துத் தங்களின் ரசிகர்களாக ஆக்கிக்கொண்டன. இவ்வாறாகப் புரிந்துகொண்டால், நம் ரசிப்புத்தன்மைக்கு நாமே நியாயங்கள் வழங்கக் கூடியவர்களாக ஆகிவிடலாம். எம்.ஜி.ஆரிடம் நடிப்புத் திறன் இல்லாவிட்டால் போகிறது; அந்த வாள்வீச்சு யாருக்கய்யா வரும்? பத்மினியின் நாட்டியத்துக்கும் கே.ஆர். விஜயாவின் புன்னகைக்கும் மனதில் இடமில்லாமல் போகுமென்றால், அவர் சமூகத்தின் இன்பதுன்பங்களைப் பகிஷ்காரம் செய்பவராகவே இருப்பார். வாழ்வை ரசிப்பதற்கும் அதை மென்மையாக்கிக்கொள்வதற்கும் சக மனிதர்களோடு உறவுகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் ரசிகர்களாக இருப்பது நல்ல வாய்ப்பைத் தருகிறது.
சில மாதங்களுக்குமுன் நான் எம்.ஜி.ஆர். பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரைக்கு எதிர்பார்க்க முடியாத ஆன்மிக அன்பரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. இஸ்லாம்குறித்து எனக்கும் அவருக்கும் எதிரெதிர் திசைகள் இருந்தபோதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களாக நானும் அவரும் ஒன்றுபட்டிருந்தோம் என்கிற ரகசியம் அன்று தெரியவந்தது. அவர் பல்துறை ஞானம் மிக்கவர்; இடையறாத தேடல் கொண்டவர்; என்றபோதும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் அவருக்குத் தயக்கம் இல்லை; அதனால், தன்னுடைய ஆன்மிக உணர்வுகள் கேள்விக்குறியாகிவிடும் என அவர் அஞ்சவுமில்லை. ரசிகனாகத் தன்னை என்னோடு அவர் அடையாளப்படுத்திகொள்ளும்போது ஒரு மூடுதிரை அவசியமில்லை என அவர் கருதியதைக் கவனம்கொள்வது நல்லது. நாம் ஒதுக்கித்தள்ள நினைத்தாலும் நாம் நடந்துவந்த சுவடுகள் நம்மைவிட்டுப் போகாது.
இவ்வாறு சொன்ன பின்னர் நம்முடைய ரசிகர்களின் திரையரங்கக் கூத்துகளை நோக்கி இதுதானா அந்த ரசிகத்தனம் என்று கேள்வி கேட்டால் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ரசிப்புத்தன்மை பலவிதமான பக்குவங்களைக் கொண்டது. அவரவர் மனோதர்மப்படி அவரவர் தகுதியைப் பெறுகின்றனர். சமூக விஞ்ஞானப்படி இதைப் புரிந்துகொண்டால், வேலைவெட்டி இல்லாததும் சமூகக் கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்கும் அரசியல் நோக்கங்கள் இல்லாததும் காரணங்கள் என்று அறிந்துகொள்ள முடிகிறது. பொறுப்பற்ற அரசியலும் பொருத்தமில்லாத பொருளாதாரக் கட்டமைப்புகளும் ரசிகர்கள் இவ்வாறு திசைகெட்டுத் திரியும்படியான ரசிப்புத்தன்மையைத் திட்டமிட்டே வளர்க்கின்றன. உண்மையில், எந்த அடிப்படையில் இன்றைய ரசிகர் மன்றங்கள் இயங்குகின்றன என்பது விளங்கவேயில்லை.
களந்தை பீர்முகம்மது- தொடர்புக்கு: peermohamed.a@thehindutamil.co.in