தினமும் வாகன ஓட்டிகள் மல்லுக்கட்டும் சின்னசொக்கிகுளம் சாலை: மதுரை மக்களின் புலம்பலுக்கு விடிவு எப்போது?

தினமும் வாகன ஓட்டிகள் மல்லுக்கட்டும் சின்னசொக்கிகுளம் சாலை: மதுரை மக்களின் புலம்பலுக்கு விடிவு எப்போது?
Updated on
2 min read

மதுரை நகரில் மக்கள் தொகை பெருக்கம் ஒருபுறம் இருந்தாலும், வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆனால், வாகனப் பெருக்கத்திற்கு ஏற்ப சாலை வசதிகள் குறைவாகவே உள்ளன.

நத்தம், நீதிமன்றம் ரோடு மற்றும் பாண்டிகோயில் சந்திப்பு போன்ற இடங்களில் நடக்கும் மேம்பால பணிகள் இன்னும் முடிவடையாததாலும், மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் புதிய மேம்பால பணி இன்னும் துவங்காததாலும் தினமும் நகரில் வாகன நெருக்கடி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

குறிப்பாக வாகனங்கள் அதிகமாக செல்லும் ரோடுகளில் கோரிப்பாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் இருந்து பிரியும் சின்ன சொக்கிகுளம் ரோடும் சேருகிறது.

ரிசர்வ் லைன், ஆத்திகுளம், அய்யர் பங்களா, நாராயணாபுரம் ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி உட்பட நத்தம் ரோடு மார்க்கத்திலுள்ள பல்வேறு ஊர்களுக்கு போகும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் புதூர், அழகர் கோயில், மாட்டுத் தாவணி, மேலூர் ரோட்டில் செல்லும் வாகனங்களும் இந்த ஒரு வழிபாதையை தான் பயன்படுத்தவேண்டும். ஏற்கனவே இந்த ரோட்டில் பிடிஆர் சிலை அருகே தனியார் வர்த்தக மையம், பெட்ரோல் பங்க் எதிரே போக்குவரத்து நெருக்கடியால் ரோட்டை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயன்றது. வர்த்தக நிறுவனத்தினர் வழக்கு போன்ற தடையால் தொடர்ந்து அப்பணி கிடப்பில் இருந்தது.

ஆனால் தற்போது, நத்தம் ரோட்டில் உருவாகும் மேம்பாலம் மாநகராட்சி அலுவலக மேற்கு நுழைவு வாயில் வரையி லும், சொக்கிகுளம் ரோட்டில் இறங்குவதாலும் அதற்கான பணிகள் துரிதமின்றி நடக்கிறது. கரோனா ஊரடங்கு போன்ற சூழலால் தொடர்ந்து பணி தொய்வில் உள்ளது. இது போன்ற காரணத்தால் தனியார் வர்த்தக நிறுவனம் எதிரோ தினந்தோறும் காலை, மாலை இன்றி பலமணி நேரமும் வாகனங்கள் தொடர்ந்து நெருக்கடியை சந்திக்கின்றன.

கரோனா ஊரடங்கின் கூடுதல் தளர்வுகளால் தற்போது, அந்த ரோட்டில் வாகனங்கள் அதிகரித்துள்ளன. ஷேர் ஆட்டோக்கள் அவ்விடத்தில் குறுக்கு மறுக்குமாக செல்வதால் குடும்பத்தினருடன் கார், பைக்கில் செல்வோர் திண்டாகின்றனர். ஆம்புலன்ஸ் கூட செல்வதில் சிரமம் உள்ளது. அந்த ரோட்டின் துவக்கம் முதலே வாகன நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் நத்தம் ரோடு, புதூர், நீதிமன்றம், மேலூர் ரோட்டை அடைவதில் ஒவ்வொரு நாளும் திணறவேண்டி உள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறியது:

ஒருவழிp பாதையான இந்த ரோட்டில் கோரிப்பாளையத்தில் இருந்து வரும்போது, சற்று துரிதமாக வந்தாலும் தனியார் வர்த்தக கட்டிடம் அருகே ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. பல நிமிடக் கணக்கில் வாகனங்களை நிறுத்தி செல்லப்படுகின்றனர்.

வளைவுp பகுதியான அந்த இடத்தில் ரோட்டை அகலப்படுத்தினால் மட்டுமே நிரதரமாக தடையின்றி செல்ல முடியும். வாகன பெருக்கம், மக்கள் அதிகரிப்பு போன்ற காரணத்தால் ஒவ்வொரு நாளும் அவ்விடத்தை கடப்பதில் மல்லுக் கட்டுகின்றனர். காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம், நெடுஞ்சாலை, மாநகராட்சி அலுவலகங்கள், ஆட்சியர், நீதிபதிகள் குடியிருப்புகள், காவலர், அரசுத்துறையினர் குடியிருப்பு கள், சுற்றுலா, தனியார் விடுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்தும், அந்த இடத்தில் போக்குவரத்து நெருடிக்கடி சீரமைக்க முடியவில்லை.

காவல்துறையினர், அதிகாரிகள் நினைத்தால் வேறு வழியை பயன்படுத்தி சென்று விடலாம். ஆனால் சமானிய மக்கள் வேறு வழியின்றி அந்த ரோட்டில் தான் செல்லவேண்டும். இடியப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் அந்த ரோட்டில் வாகனங்கள் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

இது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மாரியப்பன் கூறுகையில், ‘‘ இந்த ரோட்டில் தனியார் வர்த்தக நிறுவனம் அருகே ரோட்டை அகலப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது, தடை எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைந் தாலும், 80 சதவீத வாகனங்கள் இந்த ரோடு வழியாகவே செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதற்காக இந்த ரோட்டில் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க, அகலப்படுத்தவேண்டும் என, முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேம்பாலம் கட்டுமான பொறியாளர்களிடம் காவல்துறை சார்பில், பேசியுள்ளோம்.

அவர்களும் அகலப்படுத்துகிறோம் என, உத்தரவாதம் அளித்தாலும், இதற்கான பணி தாமதமாகிறது. நாங்களும் தொடர்ந்து வலியுறுத்துகி றோம். நெருக்கடியை தவிர்க்க, பிடிஆர் சிலை, வர்த்தக நிறுவனம் அருகே போலீஸார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து தடையின்றி செல்ல உரிய ஏற்பாடுகளை செய்கிறோம்.

இருப்பினும், வாகன போக்குவரத்து அதிகரிப்பால், அவ்விடத்தில் ஏற்படும் இடையூறை தவிர்க்க, மாட்டுத்தாவணி, மேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை கோரிப்பாளையத்தில் இருந்து பனகல் ரோடு, ஆவின், மேலமடை சந்திப்பு வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் அந்த இடத்தில் வாகன நெருக்கடி ஓரளவுக்கு குறையும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in