Published : 22 Oct 2020 02:48 PM
Last Updated : 22 Oct 2020 02:48 PM

இது இளம்பரிதியின் பொம்மை திருவிழா: குன்றக்குடியில் ஒரு குட்டி பிரம்மா!

நவராத்திரி கொலுவுக்கு இன்று ஆறாவது நாள். வழக்கமாக மற்றவர்கள் இல்லங்களில் வைக்கும் கொலுவுக்கும் சிறுவன் இளம்பரிதி வீட்டுக் கொலுவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுபற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு இளம்பரிதி யார் என்று பார்க்கலாம்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் நேர்முக உதவியாளர் சிங்காரவடிவேல். இவரது பிள்ளை இளம்பரிதி. சிங்காரவடிவேல் சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவரது சிறுகதைகள் சில பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பிடித்துள்ளன.

குன்றக்குடி மலையின் அடிவாரத்தில் குடியிருக்கும் சிங்காரவடிவேல், அடிகளார் திருமடத்துக்குச் செல்லும்போது சிலசமயம் மகன் பரிதியையும் கைபிடித்துக் கூட்டிச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும் காலங்களில் கோயில் சிற்பங்களையும் தேர்க்கால் சிற்பங்களையும் பார்த்து வியந்தான்; ரசித்தான் பரிதி. அந்தச் சிற்பங்களை அப்படியே மனதுக்குள் பதிந்து கொண்டவன், வீடு திரும்பியதும் அப்படியே அவற்றை வரைய ஆரம்பித்தான்.

பிறகு நடந்தவற்றைச் சிங்காரவேல் நமக்கு விளக்குகிறார். ''ஆரம்பத்துல பேப்பர்ல என்னத்தையோ கிறுக்கிட்டு இருக்கான்னுதான் நினைச்சோம். ஆனா, போகப் போகத்தான் அவனுக்குள்ள இருக்கற நுட்பமான திறமை தெரிய வந்துச்சு. பேப்பல சிற்பங்களை வரைஞ்சுட்டு இருந்தவன் அடுத்தகட்டமா பழைய பேப்பர், நூல், பஞ்சு இதையெல்லாம் வெச்சு பொம்மைகளா செய்ய ஆரம்பிச்சான். படிக்கிற நேரம் போக மத்த நேரமெல்லாம் பொம்மைகள் செய்யறதுலயே தம்பிக்குக் கவனம் இருந்துச்சு. இதுல நாட்டம் அதிகமா இருந்ததால படிப்புல சுமாராகிட்டான். அவன் இஷ்டத்துக்கு வளரட்டும்; எதையும் திணிக்க வேண்டாம்னு நாங்களும் அவன் போக்கிலயே விட்டுட்டோம்.

ஒரு வருஷத்துக்கு முந்தி பக்கத்துல ஒரு கோயில்ல திருப்பணி வேலைகள் நடந்துச்சு. அதைப் பார்த்துட்டு வரலாம்னு பரிதியைக் கூட்டிட்டுப் போனேன். அங்க கோபுரத்துல இருந்த சுதை வேலைச் சிற்பங்களைப் பார்த்தவன் வீட்டுக்கு வந்ததும் களிமண்ணை எடுத்து அப்படியே அந்தச் சிற்பங்களைச் செய்ய ஆரம்பிச்சுட்டான். ஒருகட்டத்துல களிமண் பொம்மைகள் உடையுதுன்னதும் சிமென்ட்டுக்கு மாத்திக்கிட்டான். சிமென்ட் பொம்மைகளைச் செய்யுறதுக்கு நம்ம வீட்டுல கொத்துக் கரண்டி கிடையாது. அதனால ஸ்க்ரூ டிரைவரை வெச்சே அழகழகா பொம்மைகளைச் செஞ்சு வண்ணம் தீட்டப் பழகிட்டான்.

இதுவரைக்கும் இவன் பார்த்தது எல்லாமே கோயில் சம்பந்தமான சிற்பங்கள் என்பதால் சாமி உருவங்களை மட்டுமே சிலைகளா செஞ்சிருக்கான். எதுக்குமே மாடல் வெச்சுக்கிட்டு அதைப் பார்த்துச் செய்யுறது இல்ல. கண்ணால பாத்து மனசுக்குள்ள பதியுறத, அப்படியே சிமென்ட் சிற்பமா செஞ்சுடுறான்.

இந்த ஆறேழு மாசமாப் பள்ளிக்கூடம் இல்லாம வீட்டுலயே இருக்கறது இன்னும் வசதியா போச்சு. நிறைய பொம்மைகளைச் செஞ்சு தள்ளிட்டான். ‘நான் செஞ்ச பொம்மைகளை எல்லாம் அடுக்கி இந்த வருஷம் நம்ம வீட்டுல கொலு வெச்சா என்னப்பா?’ன்னு யோசனை சொன்னவனும் இளம்பரிதிதான். புள்ள ஆசைப்படுறானேன்னு நானும் சம்மதிச்சேன்.

எங்க ஊருக்கார தம்பி சண்முகம் சாம்சங் கம்பெனியில டிஜிஎம்-மா இருக்காப்ல. அவருக்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். உடனே அந்தத் தம்பி தன்னோட அன்பளிப்பா கொலு வைக்கத் தேவையான ஸ்டீல் படிக்கட்டை வாங்கிக் குடுத்தாரு. அதை வெச்சு இளம்பரிதியோட பொம்மைகளை அடுக்கி இந்த வருசம் கொலுவை ஆரம்பிச்சிட்டோம். அத்தனை படிக்கட்டுகளுக்கும் வைக்கிறதுக்கு பொம்மைகள் பத்தல. அதனால வழக்கமான பொம்மைகளை வெளியிலிருந்தும் கொஞ்சம் வாங்கிக்கிட்டோம். இப்ப எங்க வீட்டுல தினம் ஏதாவது ஒரு நைவேத்தியம் படைச்சு, நவராத்திரி கொலு களை கட்டுது'' என்று சிலாகித்தார் சிங்காரவடிவேல்.

தந்தையின் முதுகுக்குப் பின்னால் மறைந்தபடி அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த இளம்பரிதி, ''மூணாப்பு படிக்கிறப்பயே படம் வரைவேன். இந்த வருசம் எட்டாப்பு போயாச்சு. ‘படிக்கணும்டா தம்பி’ன்னு அப்பா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எனக்கு என்னவோ படிக்கிறத விட இதுதான் பிடிச்சிருக்கு. இந்தப் படிக்கட்டுல மொத்தம் 82 பொம்மைகள் இருக்கு. அடுத்த வருசம் இதை டபுளாக்கணும்; அதுல அதிகமா நான் செஞ்ச பொம்மைகள் இருக்கணும். இப்டியே ஒவ்வொரு வருசமும் பொம்மைகள் எண்ணிக்கையை கூட்டிக்கிட்டே போகணும். பெரியவனானதும் கலை ஆசிரியரா வந்து இந்தத் திறமையை இன்னும் பலபேருக்குச் சொல்லிக் குடுக்கணும்'' என்று சிரித்தார் இளம்பரிதி.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x