Published : 15 Oct 2020 03:41 PM
Last Updated : 15 Oct 2020 03:41 PM

கலாமின் திருக்குறள் அனுபவம்! -  'என் வாழ்வில் திருக்குறள்' புத்தகம் குறித்து தமிமுன் அன்சாரி பகிர்வு

புத்தகத்துடன் தமிமுன் அன்சாரி.

அப்துல் கலாம் எழுதி, 'இந்து தமிழ் திசை' வெளியிட்ட 'என் வாழ்வில் திருக்குறள்' என்ற புத்தகம் குறித்து தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பகிர்ந்துள்ளார்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று (அக். 15). இதனை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கலாம் எழுதிய 'என் வாழ்வில் திருக்குறள்' புத்தகம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

"ஒரு முறை வந்தால் அது கனவு. பல முறை வந்தால் அது லட்சியம்! இப்படி எண்ணற்ற ஊக்க மொழிகளைத் தந்த அப்துல் கலாமை இந்த நாடு கொண்டாடி மகிழ்கிறது. இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாகவும், மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த அவர், காந்திக்குப் பிறகு, நாடு முழுதும் அனைவராலும் நேசிக்கப்பட்டவராக வாழ்ந்து சென்றிருக்கிறார்.

நேர்மை, எளிமை,உழைப்பு, அன்பு, அறிவு ஆகியவற்றின் நவீன கால இந்திய முகமாக உலகமெங்கும் போற்றப்படுகிறார். அவரது முதல் நூலான அக்னி சிறகுகள் இந்தியாவின் மதிப்பு மிக்க நூல்களில் ஒன்றாக வாசிக்கப்படுகிறது. தொடர்ந்து விற்பனையில் முன்னணியில் இருக்கிறது.

இந்த ஆண்டு, ஜன. 10 அன்று, சென்னை புத்தகச் சந்தைக்குச் சென்ற போது 'இந்து தமிழ் திசை' அரங்குக்குள் நுழைந்தேன். பல நல்ல வெளியீடுகள் அடுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஊடக நண்பர் ஒருவர், அப்துல் கலாம் எழுதிய 'என் வாழ்வில் திருக்குறள்' என்ற நூலை தாங்கள் வெளியிட்டிருப்பதாக கூறி அதை அறிமுகப்படுத்தினார்.

இதுதான் அவர் எழுதிய கடைசி நூல் என்றதும், அதை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றேன். கடந்த வாரம் அதை படிக்க நேர்ந்தது.

கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், வைகைச்செல்வன் ஆகியோர் எழுதிய திருக்குறள் விளக்கவுரைகளைப் படித்திருந்தாலும், இது ஒரு புதிய அனுபவத்தை எனக்குத் தந்திருந்தது. தன்னை ஈர்த்த ஒவ்வொரு குறளையும் குறிப்பிட்டு, தனக்கேற்பட்ட அனுபவங்களுடன் அதை அவர் விவரிக்கும் முறை படிப்போரை உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

2200 ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் ஓர் இடத்திலாவது ஒரு நாட்டைப் பற்றியோ, ஒரு மொழியைப் பற்றியோ, ஒரு சொல் கூட இல்லை என சிலாகித்து, திருவள்ளுவரை ஒரு உலக தத்துவ ஞானி என அவர் புகழ்கிறார்.

தைவான் நாட்டுக்குத் தான் சென்றபோது, திருக்குறளை சீன மொழியில் ஆக்கம் பெற எடுத்த முயற்சியை சுட்டிக் காட்டுவது அவரது குறளின் மீதான ஈடுபாட்டை வெளிக்காட்டுவதாக இருக்கிறது.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் ( 550)

மேற்கண்ட குறளைக் குறிப்பிடும் போது, தான் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது, மரண தண்டனை பெற்றவர்களுடைய மேல்முறையீடு மனுக்கள், கருணை மனுக்களாக வந்ததையும், தனது நிலை அதில் எவ்வாறு இருந்தது என்பதையும் குறிப்பிட்டு தனது மனநிலையை வெளிப்படுத்துகிறார்.

அதற்குச் சட்ட நிபுணர்களின் எதிர்ப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதைப் படித்தபோது வேறொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவர் இறந்த சமயத்தில், பழ.நெடுமாறன், தமிழ் செய்தித்தாள் ஒன்றில் அவரைப் பற்றி இரங்கல் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், தான் அவருக்கு அனுப்பிய ஒரு நூலைப் படித்து விட்டு, அதில் ஒரு பக்கத்தைக் குறிப்பிட்டு அதை ஆமோதிக்கும் வகையில் பதில் அனுப்பியதை எழுதியிருந்தார். அந்தப் பக்கத்தில் நம் நாட்டில் மரண தண்டனைக்கு எதிரான கருத்து பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறைவன் மிகப் பெரியவன், இறைவனின் அன்புக்குப் பாத்திரமானவன் என்ற தலைப்புகளில் தனது இறை பக்தியை இழையோட விடுகிறார்.

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (92)

என்ற குறள் குறித்து எழுதும்போது, தனது நண்பர் ஒய்.எஸ்.ராஜன் என்பவர் தனக்கு ஆலோசனைகளாக கூறியதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

'உண்மையை பேசுங்கள்; வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; தவறானவற்றை உங்கள் கைகளிலிருந்து விலக்கி வையுங்கள்: பசித்தோருக்கு உணவிடுங்கள்; வேதனையில் தவிப்போருக்கு உதவிடுங்கள்' என அவர் தம்மிடம் நபிகள் நாயகத்தின் ஞான மொழிகள் இவை என்று கூறியதை குறள் அனுபவத்துடன் கூறுகிறார்.

கேரளாவில் தும்பா எனுமிடத்தில் ஏற்பட்ட தேவாலயச் சந்திப்பு, சிவானந்தர் ஆசிரமத்திற்குச் சென்ற அனுபவம், தொழுகை வழியாக ஏற்பட்ட அனுபவம் என அனைத்தையும் குறளோடு குறிப்பிடுகிறார்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை (315).

என்ற குறளைக் குறிப்பிட்டு தன் வாழ்வின் ஆனந்தமான ஒரு அனுபவத்தைப் பகிர்கிறார். போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஹைதராபாத்தில் சந்தித்தபோது, 4 கிலோ எடை கொண்ட செயற்கைக் கால்களுடன் அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்துத் துன்புற்றிருக்கிறார்.

உடனே அக்னி ஏவுகணை செய்ய பயன்பட்ட 'காம்போசைட் மெட்டீரியல்'-ஐ (Composite Material) கொண்டு, குறைந்த எடையில் செயற்கைக் கால்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

வெறும் 400 கிராம் எடையில் அதைத் தயாரித்து, போலியோவினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் வேதனையை, சுமையை 10 மடங்கு குறைத்ததைப் பெரும் சாதனையாக, மனதிருப்தியோடு குறிப்பிடுகிறார். அதைப் படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது.

அவர் எல்லா குறள்களுக்கும் இப்படி ஒரு அனுபவ உரையை எழுதியிருக்கக் கூடாதா? இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்து வழிகாட்டியிருக்கக் கூடாதா? என மனம் ஏங்குகிறது. அவரது 'என் வாழ்வின் திருக்குறள்' நூலை வெளியிட்ட 'இந்து தமிழ் திசை' குழுமத்திற்கு, அவரது பிறந்த நாளில் நமது பாராட்டுகளைத் தெரிவிப்போம்".

இவ்வாறு அந்நூல் குறித்த அனுபவத்தை தமிமுன் அன்சாரி பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x