Last Updated : 07 Oct, 2020 10:49 AM

 

Published : 07 Oct 2020 10:49 AM
Last Updated : 07 Oct 2020 10:49 AM

ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டி மனசாட்சியை உலுக்கும் 'மாடத்தி' திரைப்படம்!

“நடந்த சம்பவம் கொடூரமானது. ஆனால் எதிர்பாராதது அல்ல. ஆதிக்க சாதியினரும் தலித் மக்களுக்கும் அக்கம்பக்கத்தில் குடியிருந்தால் இப்படி நடப்பதை தவிர்க்க முடியாதே!”

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப்பாலியல் வன்புணர்வில் பலியான 19 வயது தலித் பெண்ணின் அண்டை வீட்டு தலித் பெண் இச்சம்பவம் குறித்து உதிர்த்த சொற்கள் இவை.

கண்ணில்படாதவர்களைக் காட்டும் படம்!

சாதிய படிநிலைக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் இடையிலான கன்னியைக் கண்டும் காணாமல் இருக்கச் சாதியத்தில் ஊறிய இந்திய மனங்கள் பழகிவிட்டன. ஆனால், இனியும் இந்த உண்மையைப் பார்க்க மறுக்கலாகாது. இதை காத்திரமாகக் கலை வடிவில் உணர்த்துகிறது ‘மாடத்தி’ திரைப்படம். பார்க்கத் தகாதவர்களாக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கொண்டு இந்த உண்மையைப் போட்டுடைத்து இருக்கிறார் ஆவணப்பட இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை.

திருநெல்வேலியைச் சுற்றி இருக்கும் 30 கிராமங்களில் வாழும் புதிரை வண்ணார் மக்களைச் சந்தித்து, உரையாடி படத்துக்கான கருவை லீனா மணிமேகலை பெற்றிருக்கிறார். சுயாதீன திரைப்பட இயக்குநரான இவர் கிரவுட் ஃப்ண்டிங் மூலம் குறைந்த தொகையை ஈட்டி சொந்த தயாரிப்பில் படத்தை உருவக்கி இருக்கிறார். ஆரம்பத்தில் இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

புதிரை வண்ணார் சமூகத்தில் முதல் முறையாகப் படித்துப் பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூர்த்தி படத்தின் உள்ளடக்கத்திலும் வசனங்களிலும் உதவி இருக்கிறார். லீனா மணிமேகலையுடன் இணைந்து படத்தின் திரைக்கதையை கவிஞர் யவனிகா ஸ்ரீராம், ரஃபிக் இஸ்மாயில் எழுதி இருக்கிறார்கள்.

தலித்துகளின் தலித்துகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டு இருப்பவர்கள் புதிரை வண்ணார் சமூக மக்கள். தென்தமிழகத்தில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இச்சமூகத்தில் பிறந்த பதின்பருவப் பெண் யோசனா கதாநாயகி. ரத்தம் தோய்ந்த மாதவிடாய் துணிகளையும் இறுதிச் சடங்கின்போது பிணங்களுக்குப் போர்த்தப்படும் துணிகளையும் துவைத்துத் தருவதற்காகவே கிராமத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் யோசனாவின் தாய் வேணியும் தந்தை சுடலையும். இவர்களுடைய குடிசை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. ’தீட்டு’ துணிகளை இரவோடு இரவாக ஆற்றில் துவைத்து யார் கண்ணிலும் படாமல் இவர்கள் வாழ வேண்டும்.

நாடோடியாக்கும் கொடுமை!

ஆனால், படம் இப்படித் தொடங்கவில்லை. புதிதாக மணமுடித்த கிராமத்து இளம் தம்பதி இரு சக்கர வாகனத்தில் மலைக்காட்டு வழியில் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். போகும் வழியில் மனைவிக்கு மாதவிடாய் ஆரம்பித்துவிடுகிறது, அவசர தேவைக்குத் துணியோ அல்லது சானிட்டரி நாப்கினோ கிடைக்குமா எனக் கேட்க கணவன் மலை மீது இருக்கும் வீட்டை நோக்கிச் செல்கிறான். காலம் தாழ்ந்தும் கணவன் திரும்பாததால் அந்த வீட்டுக்குள் நுழையும் மனைவிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. கயிற்றில் வரிசையாக தொங்கவிடப்பட்ட ஈரம் உலராத வெள்ளை நிறத் துணிகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன. அங்கிருக்கும் சிறுவன் மாடத்தியின் கதையை விவரிக்கத் தொடங்குகிறான்.

யோசனாதான் மாடத்தி. அவள் கதாநாயகி என்பதைவிடவும் வனதேவதை என்று சொல்வதே பொருத்தம். வனத்தின் வனப்பில் தன்னைத் தொலைத்து சுதந்திரமாகச் சுற்றித் திரியும் சுட்டிப் பெண் இவள். ஊர் மக்கள் கண்ணில் படக்கூடாது என்பதால் காட்டுவழி வரும் ஆண்களை மறைந்திருந்து விளையாட்டுத்தனமாகப் பயமுறுத்துவது அவளுக்கு வாடிக்கை.

ஊர் ஆண்களால் இழிவாக நடத்தப்படுவதும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் யோசனாவுடைய தாயின் அன்றாட வாழ்க்கையாக இருந்துவருகிறது. இப்படியான சமூகத்தில் பெண் குழந்தையைப் பெற்றுவிட்டோமே என்கிற பதற்றத்தில் எந்நேரமும் யோசனாவை கரித்துக் கொட்டுகிறார். பெண் சிசுக்கொலை பொதுச்சமூகத்தின் பிரச்சினையாக வெகுஜன சினிமா பேசிக் கொண்டிருக்க இங்கு படம் வேறொரு கோணத்தைச் சுட்டுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகச் சபிக்கப்பட்டவர்கள் இச்சமூகப் பெண்கள் என்ற சேதி வேணி கதாபாத்திரம் வழி பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தை ஏந்தி நடித்திருக்கும் நடிகை செம்மலர் தோற்றத்திலும் அநாயசமான நடிப்பிலும் நடிகை ஷோபாவை நினைவுபடுத்துகிறார். யோசனாவாக தோன்றி நாட்டார் தேவதையாக உயிர்பெறுகிறார் அஜ்மினா கஸிம்.

மையக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ’மெட்ராஸ்’ பட புருஷோத்தமன், இளம் நடிகர் பேட்ரிக் உள்ளிட்டவர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இயற்கைக்கும் யோசனாவுக்குமான நெருக்கத்தை அழகியல் ததும்பும் கேமரா கோணங்களும் கார்த்திக் ராஜாவின் மென்மையான இசையும் உணர்த்துகின்றன. சாதியத்துக்கு அப்பால் பதின்பருவத்தில் துளிர்க்கும் பாலின ஈர்ப்பை, ஆண் உடல்சார்ந்த அரசியலை, பொத்தாம் பொதுவாக பெண் விடுதலை பேசுதலில் உள்ள அபத்தத்தை இயக்குநருக்கே தனித்தனமையுடன் லீனா மணிமேகலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தல்களினாலேயே நாடோடிகளாக்கப்பட்ட சமூகத்தின் கதையை வலிமையான காட்சி மொழியில் பேசுகிறது 'மாடத்தி'. படத்தின் பல காட்சிகள் ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டி சாதியத்தில் தோய்ந்த இந்திய மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது.

அனைவரின் பார்வைக்கு 'மாடத்தி'

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவரும் ’மாடத்தி’ தெற்காசியத் திரைப்பட விழாவிலும் தேர்வாகி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாகப் படத்தை இன்று (7 அக்டோபர்) முதல் 10 அக்டோபர் வரை இணையம் வழியே இலவசமாகக் காணலாம். cosaff.org என்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்த பிறகு படத்தைக் காணமுடியும். இதுதவிர ’தெற்காசியத் திரைப்பட விழாக்களின் கூட்டணி 2020’ சார்பாக 9 அக்டோபர் அன்று இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குப் படம் இணையம் வழி திரையிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x