எதையும் காண்பான் எதையும் கேட்பான்!

எதையும் காண்பான் எதையும் கேட்பான்!
Updated on
1 min read

மத நல்லிணக்கம் மன நல்லிணக்கமாக எப்போதும் முகிழ்த்திருந்த உண்மை வரலாற்றின் பக்கங்களிலும் புராணத்தின் படிமங்களிலும் பதிந்திருப்பதைக் காலம் காலமாகக் கவனப்படுத்தும் அருளாளர்கள் இந்த மண்ணில் தோன்றிக்கொண்டே இருந்திருக்கின்றனர்.

‘மியூசிக் டிராப்ஸ்’ என்னும் அமைப்பின் வழியாக மாணவர்களுக்கு இசையைக் கற்றுக்கொடுத்து, அவர்கள் பாடுவதற்கும் பயிற்சி கொடுத்து, தகுந்த முறையில் அவர்களைப் பாடவைத்து அதை யூடியூபில் பதிவேற்றும் சேவையைச் செய்துவருகிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த உமாசங்கர்.

சங்க இலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து பாடல்கள், கம்பராமாயணத்திலிருந்து பாடல்கள் போன்றவற்றுக்கும் இசையமைத்து மாணவர்களைப் பாடவைத்து யூடியூபில் பதிவிட்டுள்ளார் உமாசங்கர்.

தற்போது பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு பாடலை யூடியூபில் பதிவிட்டிருக்கிறார். பக்ரீத் பண்டிகையின் கொண்டாட்டத்தையும் அல்லாவின் ஈடு இணையில்லாத கருணையையும் ஈகையையும் உணர்த்தும் இந்தப் பாடலை ஓர் இந்துவான கணேஷ் கார்பெண்டர் எழுத, இந்தப் பாடலுக்கு ஜெரார்டு மஜெல்லா என்னும் கிறிஸ்தவர் இசையமைத்திருக்கிறார். எஸ்.அரவிந்தநாதன் என்னும் இளைஞரின் குரலில் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.

“உல்லாசமே உலகெங்குமே கொண்டாடலாம் வாங்க…

ஈது முபாரக்.. இனிக்கும் ஈது முபாரக்..”

என்னும் பாடலின் பல்லவி வரிகளே நம்மை ஆசுவாசப்படுத்துகின்றன. அடுத்தடுத்து வரும் சரணங்களில் ‘தனி மனிதர்களின் செய்கைகளை அல்லா பார்த்துக்கொண்டிருக்கிறான், அதனால் நம் ஒவ்வொரு செயலிலும் கவனமுடன் இருப்போம். அல்லாவின் கருணை நம்மை கரை சேர்க்கும்’ என்னும் ஆறுதல் மொழியும் நம் உள்ளத்துக்கு பலம் சேர்க்கிறது. பகட்டான வார்த்தைகள் இல்லை. ஆனாலும், அந்த எளிமையான வார்த்தைகள் நம் உள்ளத்தில் பதிகின்றன. பிரம்மாண்டமான இசைக் கோவைகள் இல்லை. ஆனாலும், இந்தப் பாடலின் இசையில் நம்முடைய ஜீவன் கரைகிறது.

பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=SQbF76xCvng

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in