

கரோனாவைக் கையாளும் விவகாரம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் தினம் தினம் அறிக்கை வெளியிட்டு தமிழக அரசைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதேநேரம், இன்னொரு பக்கம் திமுகவுக்காகத் தேர்தல் வியூகங்களை வகுக்கக் களமிறக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாகத் திமுகவினருக்கு அடுத்தடுத்து அசைன்மென்ட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
கரோனா பரவலின் தொடக்கத்தில், ஸ்டாலினுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கத்தை வடிவமைத்துக் கொடுத்தது ஐ-பேக் டீம். அப்போது திமுக தலைமைக்குப் பொதுமக்கள் தரப்பிலிருந்து வந்த கோரிக்கை மனுக்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி மனுக்களில் கோரியுள்ள நிவாரண உதவிகளை வழங்க வைக்கும் யோசனையைச் சொன்னதும் ஐ-பேக் டீம்தான்.
அடுத்ததாக, தமிழகம் முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களைத் தேர்வு செய்து அந்த நகரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு தினமும் ஒருவேளை உணவளிக்கும் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது ஐ-பேக். இந்தத் திட்டத்தைத் திமுகவினரைக் கொண்டு செயல்படுத்தாமல் ஆங்காங்கே இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தியதுடன் இவர்களையும் திமுக ஐடி விங் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்தது.
இப்போது அடுத்தகட்டமாக, தமிழகத்தின் அனைத்துப் பெரு நகரங்களிலும் ஒவ்வொரு வார்டுக்கும் 90 நபர்கள் கொண்ட பட்டியலைக் கேட்டிருக்கிறது ஐ-பேக். திமுக அனுதாபிகள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளில் உள்ளவர்கள் என ஒவ்வொரு வார்டிலும் 90 பேரின் பெயர் விவரங்களை வாட்ஸ் அப் எண்ணுடன் சேகரித்து அனுப்பும்படி அந்தந்த வட்டங்களின் திமுக செயலாளர்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அத்துடன், பெருநகரங்களில் உள்ள அனைத்து பெரிய, சிறிய மருத்துவமனைகளின் விவரங்களை நகர திமுக செயலாளர்களுக்கு அனுப்பி இருக்கும் ஐ-பேக், அந்த மருத்துவமனைகளை நடத்தும் மருத்துவர்களை நேரில் சந்தித்துப் பேசி அவர்களின் தொடர்பு விவரங்களையும் மறக்காமல் வாட்ஸ் அப் எண்ணையும் கேட்டு அனுப்பச் சொல்லியிருக்கிறது ஐ -பேக் டீம்.
பெருநகரங்களைத் தொடர்ந்து மாநகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்தக் தகவல்களைத் திரட்டும் திட்டத்தில் இருக்கிறது ஐ-பேக். மாநகராட்சிகளில் திமுக அனுதாபிகள், சமூக ஆர்வலர்களின் எண்ணிக்கையைப் பெருநகரங்களைவிட அதிகமாகவும் ஒன்றியங்களில் பெருநகரங்களை விடக் குறைவாகவும் சேகரிக்க இருப்பதாகத் தெரிகிறது.
திமுகவுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் டீம் இப்படி ஓசைப்படாமல் தேர்தல் முன்னேற்பாடுகளில் இறங்கி இருக்கும் அதேநேரம், முன்பு திமுக ஐடி விங்கைக் கவனித்து வந்த சுனில் தலைமையிலான டீம் இப்போது அதிமுகவுக்கான தேர்தல் களத்தைத் தயார்படுத்தும் வேலையில் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணத்தில் இருக்கிறது.
ஆளும் கட்சியாக அதிமுக இருப்பதால், “இந்த அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன... உங்கள் பகுதிக்கு வரவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் என்ன ?” உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து களப் பணியில் ஈடுபட்டு வருகிறது சுனில் டீம்.