

“பேரிடர்க் காலத்தில் பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்காவிட்டால் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும்” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், கனடா தமிழ்ச் சங்கம் சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த கிராமிய மற்றும் மேடைக் கலைஞர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது.
ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பு (சித்திரை) சமயத்தில் கனடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரை விழா கனடாவில் விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த நிகழ்வுகளில் தமிழின் பெருமை பேசும் நமது நாட்டுப்புறக் கலைஞர்களை அழைத்துக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடுகளால் சித்திரைக் கொண்டாட்டங்களை நடத்த முடியவில்லை.
இருப்பினும் அதைக் காணொலி வழியாக மெய்நிகர்க் கொண்டாட்டங்களாக மாற்றியது கனடா தமிழ்ச் சங்கம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன், “ஏப்ரல் 4-ம் தேதி, முதல் நிகழ்ச்சியை நடத்தினோம். தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாது நடந்த அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளைக் காணொலி வழியே நடத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து அதேபோல் ஐந்து நிகழ்ச்சிகளை நடத்தினோம். இதில் தமிழகம் மட்டுமல்லாது கனடா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.
ஒரே இடத்தில் கூடல் இல்லாமல் ஜூம் செயலி வழியாகக் கலைஞர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதை நாங்கள் யூடியூப் சேனல் வழியாகவும் நேரலை செய்தோம். இந்தக் கலைஞர்களில் தமிழகத்தைத் தவிர பிற நாட்டுக் கலைஞர்கள் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தார்கள். அதனால் அவர்கள் தங்களுக்குச் சன்மானம் எதுவும் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்கள்.
ஆனால், தமிழகத்துக் கலைஞர்கள், கரோனாவால் பறிபோன தங்களின் வாழ்வாதாரத்துக்காக ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வாய்விட்டே கேட்டு விட்டார்கள். அதனால் அந்தக் கலைஞர்களுக்கு நிகழ்ச்சிக்கான சன்மானத் தொகையை அனுப்பி வைத்தோம். அத்துடன், அந்தக் கலைஞர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கும் மதுரையைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்கள் 15 பேருக்கும், சென்னையைச் சேர்ந்த மேடைக் கலைஞர்கள் 15 பேருக்கும் ஒரு சிறு தொகையை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தோம்.
கரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களின் மன இறுக்கத்தைப் போக்க முதலில் பொழுதுபோக்கு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சிகளைக் காணொலியில் நடத்தினோம். இப்போது சிந்தனையை மாற்றி அறிவுக்குத் தீனி போடும் கருத்தரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதன்படி கடந்த திங்கள் கிழமையிலிருந்து, திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியுடன் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தி வருகிறோம்.
கல்லூரி மாணவர்களுக்கான இந்தக் கருத்தரங்கம் தினமும் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்குத் தொடங்கி 75 நிமிடங்கள் மட்டுமே நடக்கும். இதில் முதல் 30 நிமிடங்கள் பேராசியரியர்களின் உரை இருக்கும். அடுத்த 45 நிமிடங்கள் கலந்துரையாடல். ஞாயிறு வரை தொடர்ந்து 7 நாட்கள் இந்தக் கருத்தரங்கம் நடக்கிறது. இந்தக் கருத்தரங்கம் முடிந்ததும் மீண்டும் தமிழகத்தின் பாரம்பரிய கலைஞர்களுக்கு கைகொடுக்கும் விதமாக தொடர் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் தீர்மானித்திருக்கிறோம்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சி நடந்தால் அங்கு நேரில் சென்றால்தான் அதைக் கண்டு உணர முடியும். ஆனால், கரோனா நமக்கு ‘மெய்நிகர் நிகழ்வு’ எனும் புதிய உலகத்தைக் காட்டிவிட்டது. கரோனா அச்சம் நீங்கினாலும் இனிமேல் பன்னாட்டு மாநாடு, கருத்தரங்கங்கள் உள்ளிட்ட அத்தனையுமே மெய்நிகர் உலகில்தான் நடக்கும் என்பது எனது கருத்து. ஏனென்றால் மக்களும் காணொலி வழி கூடல்களுக்குப் பழகிவிட்டார்கள்” என்றார்.