

தமிழகக் காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் கோஷ்டிக்கும் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தரப்புக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் அதிகார யுத்தம் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
2016-ல் தமிழகக் காங்கிரஸ் தலைமை மாற்றம் செய்யப்பட்டபோது புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியின் பெயரைத் தலைமைக்குச் சிபாரிசு செய்தார் ப.சிதம்பரம். ஆனால், தான் பாஜகவில் மத்திய அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே காங்கிரஸ் பொருளாளார் அகமது படேலிடம் நல்ல நட்பில் இருக்கும் திருநாவுக்கரசர், அந்த இணக்கத்தைப் பயன்படுத்தி சிதம்பரத்தின் சிபாரிசை ஒதுக்கித் தள்ள வைத்து, தமிழகக் காங்கிரஸ் தலைவரானார்.
பொதுவாகத் தனது சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டால் அதை எதிர்த்து எதுவும் பேசமாட்டார் சிதம்பரம். ஆனால், நேரம் வரும்போது அதற்கான பதிலை உரிய முறையில் கொடுப்பார். அப்படித்தான் அழகிரி புறக்கணிக்கப்பட்டதில் தனக்குள் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காத்திருந்தார்.
இந்த நிலையில், 2019-ல் மக்களவைத் தேர்தல் வருகிறது என்றதும் தேர்தலுக்கான நிதி திரட்டலுக்காகச் சிதம்பரத்தைத் தேடியது தலைமை. அப்போதுதான் அழகிரி புறக்கணிக்கப்பட்ட விஷயத்தில் தலைவர் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்குத் தகவல் சொல்லப்பட்டது. அந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையை நீடிக்கவிடுவது சரியல்ல என முடிவுக்கு வந்த அகில இந்தியத் தலைமை, உடனே, திருநாவுக்கரசரைத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு கே.எஸ்.அழகிரியை அந்த இடத்தில் உட்கார வைத்தது. அப்படித்தான் 2019 பிப்ரவரியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் தமிழகக் காங்கிரஸின் திடீர்த் தலைவரானார் அழகிரி.
தலைவராக வந்த புதிதில் கட்சியை வழிநடத்தத் தனக்கென மாநிலம் தழுவிய அளவில் ஆதரவாளர்கள் இல்லாமல் கொஞ்சம் திணறித்தான் போனார் அழகிரி. அதைச் சமாளிக்க அப்போது சிதம்பரம் விசுவாசிகளின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. அப்படி ஏழெட்டு மாதங்களை நகர்த்திய அழகிரி, ஒருகட்டத்தில் கார்த்தி சிதம்பரத்தின் “போய்யா... வாய்யா...” அரசியலால் அதிருப்தி அடைந்தார். அதனால் அவரை விட்டு மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார்.
கார்த்தி சிதம்பரத்துக்கும் அழகிரிக்கும் இடையில் உரசல் என்ற செய்திகள் வெளியானதுமே கார்த்தியின் விசுவாசிகளும் அழகிரியை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். இதையடுத்துக் கட்சிக்குள் தனது சாதிக்காரர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யப் பார்த்தார் அழகிரி. இதற்கு கட்சிக்குள் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியதால் அதிலிருந்து பின்வாங்கியவர், தலைவர்களை விட்டுவிட்டு தொண்டர்களை நோக்கி தனது அரசியலைத் திருப்பினார். கட்சிக்குள் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த காங்கிரஸ் தொண்டர்களில் பலரும் இப்போது அழகிரியின் பின்னால் நிற்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரி விசுவாசிகள், “சிதம்பரத்தால் அரசில் அங்கீகாரம் கொடுக்கப் பட்டவர்தான் அழகிரி. அதனால் அவருக்கும் சிதம்பரத்துக்கும் என்றைக்குமே முட்டல் வந்ததில்லை. ஆனால், கார்த்தி சிதம்பரத்தைத் தொட்டால் சிதம்பரத்துக்குக் கடும் கோபம் வருகிறது. ஏனென்றால், சர்வதேச அரசியல்வாதியாகிவிட்ட அவரைப் பொறுத்தவரை கார்த்தி என்ற ஜன்னல் வழியாகத்தான் தமிழக அரசியலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், மாநிலத் தலைவரின் செயல்பாடுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் தெரிவித்த சில கருத்துகள் அழகிரியின் காதுக்கும் வந்து சேர்ந்தது. அதன் பிறகுதான் கார்த்தியை விட்டு அவர் ஒதுங்க ஆரம்பித்தார்.
இப்போது அழகிரியைத் தலைவர் பதவியிலிருந்து எப்படியாவது தூக்கிவிட வேண்டும் என்று கார்த்தியின் விசுவாசிகள் கங்கணம் கட்டுகிறார்கள். மாநிலத் தலைவர் பதவி மீது கார்த்திக்கும் ஒரு கண் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் ராகுல் காந்தி ரசிப்பாரா என்பதுதான் கேள்வி. ஏனென்றால், கார்த்திக்கு எம்.பி. சீட் வாங்குவதற்கு எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதை நாடே அறியும்” என்றனர்.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் பட்டியலை அழகிரி மூன்று மாதங்களுக்கு முன்பே தலைமைக்குத் தந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும், எதிர்த் தரப்பினர் தலையிட்டு புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிக்க விடாமல் முடக்கி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது. இதைவைத்து, “மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அழகிரி எந்த நேரத்திலும் மாற்றப்படலாம். அதனால்தான் அவர் கொடுத்த பட்டியலை அப்ரூவல் செய்யாமல் வைத்திருக்கிறது தலைமை” என்று சொல்கிறது அழகிரியின் எதிர்கோஷ்டி.
இதையும் மறுக்கும் அழகிரி தரப்பினர், “ஏற்கெனவே மாநில நிர்வாகிகள் பட்டியலை மட்டும்தான் தலைமைக்கு அனுப்பினார் அழகிரி. மாவட்டத் தலைவர்கள் பட்டியலை அண்மையில்தான் தலைமைக்கு அனுப்பினார். அதுவும் தன்னிச்சையாக அனுப்பவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேரின் ஆளுகைக்குள் இருக்கும் மாவட்டங்களில் அவர்கள் சிபாரிசு செய்பவர்களைத்தான் மாவட்டத் தலைவர்களாக நியமிப்பார்கள்.
அதேபோல், எம்எல்ஏக்கள் 8 பேரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும். இது தவிர, கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், நீலகிரி பிரபு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சிபாரிசுகளையும் தலைமை கவனத்தில் கொள்ளும். இத்தனை பேரின் சிபாரிசுகளையும் கேட்டுப் பெற்றுத்தான் தலைமைக்குப் பட்டியல் அனுப்பி இருக்கிறார் அழகிரி.
வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமான சூழ்நிலைகள் நிலவுவதால் தமிழகப் பொறுப்பாளர்கள் நியமனத்தை கிடப்பில் வைத்திருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் தெரியாமல் வதந்தி பரப்புகிறார்கள். அழகிரியை மாற்றப் போவதாகச் சொல்வதும் அப்படித்தான். காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அங்கீகாரம் செய்யப்பட்டு அண்மையில்தான் பிரின்ட் செய்யப்பட்டன.
காமராஜர் பிறந்த நாளில் அந்த அட்டைகளைத் தொண்டர்களுக்கு விநியோகிக்கும் பணியும் தொடங்கிவிட்டது. உறுப்பினர் அட்டையில் தலைவர் அழகிரியின் படமும் இருக்கிறது. சமீபத்தில் தலைவரை மாற்றப் போகிறார்கள் என்றால் அவரது படத்தைப் போட்டு உறுப்பினர் அட்டை அடிக்க அனுமதித்திருக்க மாட்டார்கள். எனவே, குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அழகிரிதான் தலைவராக இருப்பார்” என்கிறார்கள்.