Last Updated : 08 Jul, 2020 10:43 AM

 

Published : 08 Jul 2020 10:43 AM
Last Updated : 08 Jul 2020 10:43 AM

’முத்துப்பேச்சி’, ‘திவ்யா’, ‘தாயம்மா’, ‘மாஷா’, ‘பஞ்சவர்ணம்’ ; ’நடிப்பு ராட்சஷி’ ரேவதிக்கு இன்று பிறந்தநாள்

யாராவது திரைப்படத்தில் கூடுதலாக நடித்தால், ’பெரிய நடிகர்திலகம்னு நினைப்பு’ என்று நடிகர்களைச் சொல்லுவார்கள். அதேபோல் நடிகைகளை ‘இவரு நடிகையர் திலகம்னு நினைப்பு’ என்பார்கள். நடிகர்திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் இங்கே கிண்டலாகச் சொல்லப்பட்டவை. ஆனால், ‘அடுத்த நடிகையர் திலகம் இவங்கதாம்பா’ என்று எல்லோரும் சொல்லிப் பாராட்டுகிற நடிகை உண்டு. இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு மேடையில், ‘சாவித்திரின்னு பேரு வாங்கிட்டியே... அந்தப் பெருமை போதும்’ என்று பேசினார். அடுத்த சாவித்திரி என்று தன் நடிப்பால் பேரெடுத்த அந்த நடிகை... ரேவதி.

83ம் ஆண்டு, ஜூலை மாதம் 29ம் தேதி வெளியான ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமான ரேவதிக்கு பூர்வீகம் என்னவோ கேரளம்தான். ஆனால் முதல் படத்திலேயே அச்சு அசல், தெக்கத்திப் பெண்ணாக வலம் வந்தார். பல ஊர்களில் ஒருவருடத்துக்கு மேல் ஓடிய இந்தப் படத்தின் நாயகி முத்துப்பேச்சி, முதல் படத்திலேயே ரசிக மனங்களில் இடம்பிடித்தார்.

அப்போது தமிழே தெரியாது அவருக்கு. ஆனால் ரேவதியே தமிழ் பேசி நடிக்கவேண்டும். டப்பிங் குரல் கூடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் பாரதிராஜா. பத்துநாட்கள் தமிழ் பேசப் பயிற்சி கொடுக்கப்பட்டது. ‘நான் தான் டப்பிங் பேசணும்னு பாரதிராஜா சார், உறுதியா இருந்தார். தமிழ் கத்துக் கொடுத்தார். அந்த பத்துநாளும் நான் கஷ்டமேதும் படல. ஆனா அவர்தான் படாதபாடு பட்டார்’ என்று சிரித்தபடி சொல்லும் ரேவதியின் குரலும் தமிழ் உச்சரிப்பும், கொஞ்சம் கூட மலையாளக் கலப்பு இல்லாமல் வந்த அக்மார்க் தமிழாக பிரமிக்க வைத்தது.முக்கியமாக, ரேவதி பேச வந்ததை, அவரின் கண்களே பேசிச் சொல்லிவிடும்.

அதுமட்டுமா?

பெரிய பெரிய நடிகைகள் நடிக்க வேண்டிய கேரக்டர். ‘புதுமைப்பெண்’ படத்தில் நடித்தார். ரேவதியின் நடிப்பைக் கண்டு மிரண்டு போனார்கள் ரசிகர்கள். பாரதிராஜாவின் அறிமுக நாயகியான ரேவதியை, எல்லா இயக்குநர்களும் பயன்படுத்தினார்கள்.அற்புதமான கேரக்டர்களை வழங்கினார்கள். மகேந்திரனின் ‘கை கொடுக்கும் கை’யிலும் நாசரின் ‘அவதாரம்’ படத்திலும் பார்வையற்ற கதாபாத்திரம் செய்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுக்குமான நடிப்பில் வேறுபாடு காட்டியதுதான் ரேவதியின் தனித்துவம்.

மணிரத்னம் ‘பகல்நிலவவு’, ‘மெளன ராகம்’, ‘அஞ்சலி’ முதலான படங்களில் ரேவதியை நாயகியாக்கினார். மூன்று படங்களுமே ரேவதியை, அடுத்தகட்டத்துக்கு உயர்த்தின. பாண்டியராஜனின் முதல் படமான ‘கன்னிராசி’யிலும் அடுத்த படமான ‘ஆண்பாவம்’ படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.

கே.ரங்கராஜின் ‘உதயகீதம்’ படத்தில் லட்சுமி, ரேவதி, மோகன் மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்தார்கள். தொடர்ந்து ‘உன்னை நான் சந்தித்தேன்’ முதலான படங்களில் இவரின் இயக்கத்தில் நடித்து அசத்தினார் ரேவதி.

விவாகரத்து கேட்டு இறுக்கத்துடன் இருக்கும் ‘மெளன ராகம்’ திவ்யா ஒருபக்கம் ஈர்த்தார். ஆர்.சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், திருமணத்தன்றே கணவனைப் பறிகொடுத்து விதவையாக வாழ்ந்துகொண்டிருக்கும் வைதேகி இன்னொரு விதமாக ஈர்த்தார். பாரதிராஜாவின் ‘ஒரு கைதியின் டைரி’யில் சுறுசுறு துறுதுறு கேரக்டர் என்றால், பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அத்துடன் சேர்த்து காதல் உணர்வையும் வெளிப்படுத்தினார்.

கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதை அறிந்து புழுங்கித் தவிக்கும், ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்கியாளும், வேதனைகளையும் கவலைகளையும் பொத்திவைக்கும் பாலுமகேந்திராவின் ‘மறுபடியும்’ பட கேரக்டரை அற்புதமாகப் பண்ணியிருப்பார். ‘இவரைத் தவிர வேற யாரும் பண்ணமுடியாதுப்பா’ என்று சில நடிகர் நடிகைகளை, சில படங்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு சொல்லுவோம். அவரின் பல படங்கள் அப்படிச் சொல்லவைத்தன.

ரேவதி எப்போதுமே டைரக்டர்களின் ஹீரோயின். கதை பண்ணும்போதே, இந்த கனமான பாத்திரத்தை,ரேவதி செய்தால்தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துவிடுவார்கள் இயக்குநர்கள். ஆர்.வி.உதயகுமாரின் ‘கிழக்கு வாசல்’ தாயம்மா கேரக்டரை, ரேவதியைத் தவிர வேறு யார் செய்துவிடமுடியும்? வெயிட்டான கேரக்டர் மட்டும்தானா. பாசிலின் ‘அரங்கேற்ற வேளை’யின் மாஷா கேரக்டரை ரேவதியைத் தவிர, இவ்வளவு சிறப்புடனும் ஏக கலாட்டாவுடனும் ரேவதிதான் செய்யமுடியும். அதனால்தான், தமிழ் சினிமாவில், மறக்க முடியாத கேரக்டராக மாஷா இருந்தது. இப்போதைய இயக்குநர் மாஷா கேரக்டரை ஒவ்வொருவிதமாக விரிவுபடுத்தி, ரேவதியை நடிக்கவைத்திருப்பதும் அவர் இவற்றிலும் தன் முத்திரை நடிப்பைக் கொடுப்பதும் அவரின் ஆகச்சிறந்த நடிப்பிற்கான சோறு பத உதாரணம்.

கமல், ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், ராமராஜன் என்று அன்றைய ஹீரோக்கள், அன்றைய இயக்குநர்கள் என எல்லாப் படங்களிலும் எல்லாருடனும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தார். ‘தெய்வ வாக்கு’, ’தொட்டாச்சிணுங்கி’, ’பிரியங்கா’ , ‘இதயத்தாமரை’ மாதிரி எத்தனையோ படங்களை அவரின் நடிப்புக்கு அடுக்கிக்கொண்டே போகலாம்.

முக்கியமாக... பஞ்சவர்ணம். படம் முழுக்க அப்பாவித்தனமும் இருக்கும். புரிந்து உணர்ந்து வெளிக்காட்டாத நிலையும் இருக்கும். கொஞ்சம் பதட்டமும் இருக்கும். பெரியவீட்டுக்கு மருமகள் என்கிற பெருமையும் பொறுமையும் கூடவே இருக்கும். இப்படி எல்லா உணர்வுகளையும் முகத்திலும் குரலிலும் படரவிடுகிற சாதுர்ய நடிப்பு ரேவதி ஸ்பெஷல். அதனால்தான், ’சாவித்திரிக்குப் பிறகு’ எனும் அற்புதமான இடத்தை ரசிகர்கள் ரேவதிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.

பிலிம்பேர் விருது உள்ளிட்ட எத்தனையோ விருதுகள் ரேவதியின் கைகளைத் தேடி வந்து விழுந்தன. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை எனும் உயரிய விருதுகளெல்லாம் கிடைத்தன. இந்திப் படம் ஒன்றும் ஆங்கிலப் படம் ஒன்றுமென இயக்கி, நடிப்பில் மட்டுமின்றி இயக்கத்திலும் பரந்துபட்ட அறிவு உண்டு என்பதை உணர்த்தினார்.

கிராமத்து வேடத்துக்குப் பொருத்தமானவர் என்று கொசுவம் வைத்த புடவையுடன் நடிக்க வைத்தால், அடுத்த படத்திலேயே மாடர்ன் டிரஸ்ஸுடன் வந்து அசத்துவார். காட்டன் புடவையுடன் கம்பீரமாக வலம் வந்த அடுத்த படத்தில் ஜீன்ஸ் பேண்ட்டுடன் வந்து ஜாலம் காட்டுவார். ’பொத்திவச்ச மல்லிகை மொட்டு’, ‘வான் மேகம் பூத்தூவும்’, ‘சின்னச்சின்ன வண்ணக்குயில்’, ‘ஆகாய வெண்ணிலாவே’, ‘கவிதைகேளுங்கள்’, ‘அழகு மலராட’, ‘பாடு நிலாவே’, ‘இஞ்சி இடுப்பழகி’ என ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு விதமான ஆட்டம், பாட்டம், எக்ஸ்பிரஷன். இவையெல்லாம் ரேவதி ஸ்பெஷல்.

‘சாவித்திரி மாதிரி பிரமாதமா நடிக்கிறாங்கப்பா’ என்று ரேவதியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது திரையுலகமும் ரசிகக் கூட்டமும். ‘ரேவதி மாதிரி சூப்பரா நடிக்கிறாங்கப்பா’ என்று வருங்காலத்தில் எந்த நடிகையைப் பார்த்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அது... ரேவதி எனும் மிகச்சிறந்த நடிகைக்கு காலம் கொடுக்கக்கூடிய கெளரவக் கிரீடம்.

ரேவதி... நடிப்பு ராட்சஷி. அவருக்கு இன்று (ஜூலை 8ம் தேதி) பிறந்தநாள்.

ரேவதியை வாழ்த்துவோம். பிறந்தநாள் வாழ்த்துகள் ரேவதி மேடம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x