

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், சிறுவன் போன்று உடையணிந்து தம்பியுடன் சுக்கு டீ விற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகமத்பானு. இவரது கணவர் ஐயூப்பாஷா. இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஐயூப்பாஷா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்கான இழப்பீடும் கிடைக்காத நிலையில் குழந்தைகளுடன் போதிய வருமானமில்லாமல் ரகமத்பானு பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறார்.
3 பெண்களில் ஒருவருக்கு மட்டுமே திருமணம் முடிந்துள்ளது. வருமானத்தை ஈட்ட ரகமத்பானு கடந்த 4 ஆண்டுகளாக ஆவின் நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிமும், ஆவின் பால் விற்பனை பூத் ஒன்றை வைத்துக் கொடுக்க கோரிக்கை வைத்து மனுக்களை அளித்து வருகிறார். அவருக்கு எவ்வித உதவியும் இதுவரை கிடைக்கவில்லை.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக முற்றிலும் வருமானத்தை இழந்த ரகமத்பானு, தனது 7-வது படிக்கும் பெண் குழந்தை மற்றும் 2-வது படிக்கும் ஆண் குழந்தை ஆகியோரிடம் சுக்கு டீ தயாரித்துக் கொடுத்து, விற்பனைக்கு அனுப்புகிறார். மேலும், தானும் பல இடங்களுக்குச் சென்று சுக்கு டீ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.
இது தொடர்பாக ரகமத்பானு கூறும்போது, சுக்கு டீ விற்பனையாகிக் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வருவதாகவும், 7-வது படிக்கும் பெண் குழந்தைக்கு சமுதாயத்திற்கு பயந்து ஆணைப் போல் உடை அணிவித்து, டீ விற்க அனுப்பி வைப்பதாகவும் கூறுகிறார். 2 குழந்தைகளும் பையில் 'பிளாஸ்க்'கை வைத்துக்கொண்டு நடந்து சென்று நகரில் டீ விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் நின்றிருந்த நகராட்சி ஆணையாளர் சந்திராவிடம், சிறுவர்கள் இருவரும், "டீ வேண்டுமா?" எனக் கேட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆணையாளர், அவர்களுக்கு ஒரு டீ டிரம், 10 சில்வர் டம்ளர், ஒரு வடிகட்டி என ரூ.2,000 ரூபாய் செலவில் தனது சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுத்தார்.
தற்போது 2 சிறுவர்களும் சிறிய சைக்கிளில் டீ டிரம்மை வைத்து நகரில் டீ விற்பனை செய்து வருகின்றனர். பள்ளி திறந்தவுடன் படிக்கச் சென்றுவிடுவோம் என அவர்கள் கூறினாலும், வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளதாக அவரது தாயார் ரகமத்பானு கூறியுள்ளார்.
எனவே, இவர்களின் வறுமையைப் போக்க மாவட்ட நிர்வாகமும், ஆவின் நிர்வாகமும், இவர்களுக்கு ஆவின் பால் விற்பனை செய்யும் பூத் ஒன்றை வைத்துக் கொடுக்க முன்வர வேண்டும். வறுமை நிறம் சிவப்பு மட்டும் அல்ல. சில நேரங்களில் ஆவின் பால் போல் வெண்மையாக உள்ளது.