

குவைத்தில் உள்ள 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்' அங்குள்ள தமிழர்களுக்குத் தேவையான நல உதவிகளையும், தொண்டுகளையும், ஆபத்துக் கால உதவிகளையும் ஒருங்கிணைத்துச் செய்து வருகிறது. இந்தக் கரோனா காலத்திலும் இந்தச் சங்கத்தின் களப்பணி அளப்பரியது. இதை அங்கீகரிக்கும் விதமாக 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு' லண்டனில் செயல்படும் 'உலக மனிதாபிமான ஊக்கி' (WHD - World Humanitarian Drive) என்ற தொண்டு நிறுவனம் சர்வதேச மனிதநேய விருதான, 'சமூகத்தின் தூண்' விருதளித்துக் கவுரவித்துள்ளது.
சர்வதேச அளவில் நலப்பணிகளை ஊக்குவிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'உலக மனிதாபிமான ஊக்கி' நிறுவனம் கரோனா களத் தொண்டு இயக்கங்களுக்குச் சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது. இதற்குத் தகுதியான அமைப்புகளையும், தனி நபர்களையும் தேர்வு செய்ய 1,600-க்கும் அதிகமான பரிந்துரை விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவர்களில் இறுதி செய்யப்பட்ட 550 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களில் இருந்து 100 மட்டும் தேர்வு செய்யப்பட்டன.
அதன்படி, ஏழு கண்டங்களைச் சேர்ந்த 35 நாடுகளிலிருந்து 12 பிரிவுகளுக்கான தனி ஆளுமைகளும், 38 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நடுவர் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நடுவர் குழுவின் ஆய்வு முடிவுகளுக்குப் பின் நடைபெற்றது.
இதில், கடல் கடந்த அயல் நாட்டுத் தமிழர் அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்' சிறந்த சமூக சேவை அமைப்பு பிரிவில் சமூகத்தின் தூண் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது. காணொலி வழியாக லண்டனில் நடைபெற்ற விழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.
இவ்விருதுக்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தைத் தேர்வு செய்த 'உலக மனிதாபிமான ஊக்கி' அமைப்பின் நிர்வாகிகளுக்கும், தேர்வுக் குழுவினருக்கும், இதைப் பெறுவதற்கு காரணமாகத் திகழும் சங்கத்தின் சேவைப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்துள்ளார்.