Published : 04 Jul 2020 12:12 PM
Last Updated : 04 Jul 2020 12:12 PM

காலையும் மாலையும் நடைப்பயிற்சி; வெள்ளிதோறும் ஆலய தரிசனம்!- ப.சிதம்பரத்தின் மானகிரி தோட்டவாசம்

காரைக்குடி

‘சீனாவுடனான எல்லை மோதல் குறித்து பிரதமர் மோடி ஏன் சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசுகிறார்? இதன் மர்மம் என்னவென்பதை யாராவது விளக்க வேண்டும்’- இது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அண்மைய ட்விட்டர் பதிவு.

‘பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால், தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?’ என்று கேள்வி எழுப்பி இருக்கும் சிதம்பரம் சென்னையில் கரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காரைக்குடி அருகிலுள்ள மானகிரி தோட்ட பங்களாவில் தங்கி இருக்கிறார். இங்கிருந்தபடியே ட்விட்டர் போர் நடத்தும் அவர், தன்னைச் சந்திக்கக் கட்சிக்காரர்கள் , ஆதரவாளர்கள் யாரும் தோட்டத்துக்கு வரவேண்டாம் எனக் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறாராம்.

காலையும் மாலையும் பங்களாவின் உட்புறம் இருக்கும் வெளியில் நடைப்பயிற்சி எடுத்துக் கொள்ளும் சிதம்பரம், கோயிலுக்குப் போக வேண்டும் என்று தோன்றினால் தனது டிரைவரை மட்டும் அழைத்துக் கொண்டு பிள்ளையார்பட்டிக்குப் புறப்பட்டு விடுகிறார். அங்கேயும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோயிலின் கிழக்குக் கோபுர வாசல் அருகிலேயே காரை நிறுத்தி, கோபுர தரிசனம் செய்து, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காயைக் காணிக்கையாக உடைத்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார்.

மறக்காமல் அப்படியே, வரும் வழியில் குன்றக்குடிக்கும் சென்று விடுகிறார். அங்கேயும் மலை மேல் ஏறும் வழிகள் பூட்டப்பட்டு இருப்பதால் மலை அடிவாரத்திலேயே இருக்கும் வேலை வணங்கிவிட்டு அங்கேயும் ஒரு சிதறு தேங்காயை உடைத்துவிட்டு நேராக பங்களாவுக்குத் திரும்பிவிடுகிறார். மற்ற நாள்களில் கோயிலுக்குப் போக மறந்தாலும் வெள்ளிதோறும் பிள்ளையாரையும் முருகனையும் தேடிப்போக மறப்பதில்லையாம் சிதம்பரம்.

கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் யாரும் தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என்று சிதம்பரம் சொல்லி இருந்தாலும், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்ம தங்கவேலும் இங்கு வந்து சிதம்பரத்தைச் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் தவிர, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் காரைக்குடி எம்எல்ஏவுமான கே.ஆர்.ராமசாமியை அவ்வப்போது பங்களாவுக்கு அழைத்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசி வருகிறாராம் சிதம்பரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x