Published : 27 Jun 2020 06:06 PM
Last Updated : 27 Jun 2020 06:06 PM

பண அறுவடைக்காக ஆபாசக் களமாக மாற்றும் ராம்கோபால் வர்மா?

வெகுஜன வணிக சினிமாவில், பரபரப்பும் தற்செயல் நிகழ்வுகளும் நிறைந்த த்ரில்லர் திரைக்கதைகளைக் கொண்ட தனது படங்கள் மூலம், 90-கள் தொடங்கி இந்திய இளைஞர்கள் மத்தியில் மசாலா ரசனையை வளர்த்தெடுத்த ‘பெருமைக்குரிய’ இயக்குநர்களின் பட்டியலில், ஆர்.ஜி.வி. என வாஞ்சையுடன் அழைக்கப்படும் (தற்போது அவரை Reverse Gaffe Varma என அழைக்க விரும்புகிறேன்) ராம்கோபால் வர்மாவுக்கு தனியிடம் உண்டு.

இவர் தெலுங்கில் முதன் முதலாக ‘சிவா’ தமிழில் ‘உதயம்’ என டப் ஆகி வந்தபோது நான் கல்லூயில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படம் நாகார்ஜுனை மட்டுமல்ல; ராம்கோபால் வர்மா எனும் இயக்குநரையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. யாராவது நம்மிடம் சண்டைக்கு வந்தால் சைக்கிளை நிறுத்தி, அதன் செயினை ஒரே உருவாக உருவி விளாச வேண்டும் என்ற வெறியையும் ஊட்டியது. அதிகார வர்க்கத்தின் கொடூரமான முகமாக வில்லனையும் அசகாய சூரனாக மிகை பிம்பமாக நாயகனை சித்தரித்ததைத் தவிர வேறு எந்த புதிய முயற்சியும் அந்தப் படத்தில் கிடையாது என்பதை இப்போது உணர முடிகிறது.

எப்படியிருந்தாலும் திரையுலகில் வணிக வெற்றி தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ராம்கோபால் வர்மாவின் வணிக வெற்றி அவரை மணிரத்னத்துடன் இணைந்து ‘திருடா திருடா’ படத்துக்கு திரைக்கதை எழுதவும் ‘தில் சே’ படத்தை இணைந்து தயாரிக்கவும் அழைக்கும் அளவுக்கு உயர்த்தியது. அதன்பின்னர், அரசியல், நிழலுலகம், அதிகார வர்க்கம் என சமகாலச் சமூகச் சூழலைச் சித்தரித்தாலும் அவற்றில் பெண்களைப் பண்டமாக்க அவர் தவறியல்லை. 'ரங்கீலா' இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதில் பெண்களின் சதைச் சித்தரிப்பு மட்டுமே அல்ல; உணர்வு ரீதியாகவும் கீழிறக்கிய சித்தரிப்புகளை அவரது படங்கள் செய்து வந்துள்ளன என்றாலும் சில விதிவிலக்கான படங்களையும் தந்திருக்கிறார்.

ஆனால், தொழில் ரீதியான வணிகத் தோல்விகள் எல்லா இயக்குநர்களையும் படைப்பாக்க ரீதியாக இழிநிலைக்கு இழுத்துச் செல்வதில்லை. பிடிவாதமாகக் காத்திருந்து போராடி சிறந்த வெற்றிகளைக் கொடுத்த நூற்றுக்கணக்கான இயக்குநர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும். ஆனால், ராம்கோபால் வர்மா நான் ஏற்கெனவே கூறியதுபோல் Reverse Gaffe Varma ஆகிவிட்டார்.

தனது இழப்புகளை ஈடுகட்ட, பணத்தை எப்படியாவது சாம்பாதித்துவிட வேண்டும் என்ற வேட்கை, அவரை ‘சாஃப்ட் போர்ன்’ வகை ஆபாசப் படங்களை எடுக்கும் உளச்சிக்கல் கொண்டவராக உருமாற்றியிருக்கிறது. எது மலிவானதோ அது எல்லாக் காலங்களிலும் விலைபோகும் அல்லவா? அதைத்தான் ராம்கோபால் வர்மா தனது சொந்த இணையத் திரை நிறுவனம் மூலம் தற்போது விற்றுக்கொண்டிருக்கிறார். அவரது மலிவான படங்களை நான் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ‘போர்ன்’ படங்களை பார்த்து பாலியல் இச்சைக்கு வடிகால் தேடுகிறவர்களுக்கு இணையத்தில் ஆயிரக்கணக்கான வளைதளங்கள் இருக்கின்றன. சூழலைப் பொருத்து அவற்றை திருட்டுத் தனமாக, சுதந்திரமாகவோ காண இயலும். எப்படியிருப்பினும் பெண்ணுடலையும் ஆணுடலையும் உடல் உறுப்புகளையும் காட்டி பாலியல் இச்சையை பெரும் போதையாக உலகமாக சித்தரிக்கும் எவ்வகைத் திரைப்படமும் எதிர் விளைவுகளையே சமூகத்தில் உருவாக்கும்.

பாலியல் அறிவின் வறுமை மிகுந்த இந்தியா மாதிரியான நாடுகளில் ராம்கோபால் வர்மா போல் பரவலாக சென்றடைந்த ஒரு இயக்குநர், இப்படியொரு கீழான பாதைக்கு இறங்கியது சாபக்கேடுதான். இவராலேயே நல்ல படைப்புகளில், எதிர்காலத்தில் கதைக்கு அவசியமான பாலியல் காட்சிகளை வைக்கமுடியாமல் போகும் அபாயம் உள்ளது.

முபி (MUBI) தளத்தில் நேற்று அமெரிக்கப் பெண் இயக்குநர் Marielle Heller எழுதி இயக்கி 2015-ல் வெளிவந்த The Diary of a Teenage Girl படத்தைப் பார்த்தேன். சொந்தக் காலில் நிற்கும் கலாச்சாரம், பிரிந்த பெற்றோரின் வாழ்க்கை முறை, திறந்த பாலியல் சுதந்திரம் போன்றவை ஒரு பதின்மப் பெண்ணின் வாழ்க்கையில் பாலியல் நாட்டம் எப்படி பெரும் இச்சையாக உருவெடுக்கிறது என்பதை சமூக மாற்றத்துக்கான காதலுடன் படமாகியிருக்கிறது. இந்தப் படம், சிதறுண்ட ஒரு அமெரிக்க நடுத்தரக் குடும்பத்துப் பதின்மப் பெண் ஒருத்தியின் அகச்சிக்கல் வழியாக ஒட்டுமொத்த சமூகத்தின் சிக்கலை ஒரு விரிந்த சித்திரமாக முன்வைக்கிறது.

இதுபோன்ற திடமான, மனமாற்றம் கோரும் படைப்புகளில் ராம்கோபால் வர்மா பாலியல் காட்சிகளை அதற்குரிய அவசியத்துடன் பயன்படுத்தினால் அதை வரவேற்பவர்களில் நானும் முதல் வரிசையில் நிற்பேன். அன்றி, ஊரடங்கு காலத்தில் மக்களின் வீடடங்கிய தருணத்தை தனது பண அறுவடைக்கான ஆபாசக் களமாக மாற்றிக்கொள்ளும் ராம்கோபால் வர்மாவை பணம் மற்றும் பாலியல் மீது உளச்சிக்கல் கொண்டவராகவே பார்க்கத் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x